திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௩. திராவிட நாடும் தேர்தலும்
(உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
௩. திராவிட நாடும் தேர்தலும்
சென்னை எசு.ஏ.ஏ. திடலில் நடந்த தமிழ் நாட்டுச் சட்டமன்ற (தி.மு.க.) க.து. கட்சி உறுப்பினர்கட்கு அளித்த பாராட்டுக் கூட்டத்தில் திரு. அண்ணாதுரை அவர்கள், “திராவிட நாட்டுக் கொள்கையை நாங்கள் விடமாட்டோம். அதனைச் சட்டமன்றிலும், நாடாளுமன்றிலும் தம்பிகள் வலியுறுத்தத் தயங்கமாட்டார்கள். முப்பத்து நான்கு இலட்சம் மக்கள் திராவிட நாட்டுக் கொள்கையை ஆதரித்தே எங்கட்கு வாக்குகளை வழங்கியுள்ளனர்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார்.
உண்மையா?
தேர்தல் நடைபெறு முன்னர் தேர்தலுக்காக நடத்திய கூட்டங்களில் திரு.அண்ணாதுரையோ அவர் தம்பிகளோ திராவிட நாட்டுக் கொள்கையை வலியுறுத்தி மக்கள் முன் வைத்து அதை அடைய எங்களுக்கு வாக்களியுங்கள் என்று எந்தக் கூட்டத்திலும் பேசியதாகத் தெரியவில்லை. தேர்தல் அறிக்கையில் குறித்திருந்தார்கள் போலும். இவர்கள் கூட்டாளியாகிய திரு. இராசகோபாலாச்சாரியார் திராவிட நாட்டுக் கொள்கையைக் கண்டித்தே எல்லாக் கூட்டங்களிலும் பேசி வந்தார். வாக்குரிமை இல்லாத (21 அகவைக்குட்பட்ட) இவர் தம்பிகள்தாம் திருவாரூரில் நடந்த பாராட்டுக் கூட்டத்திற்கு ஊர்வலம் வந்தபோதுதான் “திராவிட நாட்டை அடைந்தே தீருவோம்” என்று தொண்டை கிழிய வயிற்றைக் கையில் பிடித்துக் கொண்டு கத்திக்கொண்டு போனார்கள். “அண்ணாவைப் பின்பற்றும் தம்பிகள்தாமே”.
திராவிட நாட்டுக்காகவா 34 இலட்சம் வாக்கு?
திராவிட நாடு பற்றி க.து தோழர்கட்கே பலருக்கு விளக்கமாகத் தெரியாது. ஏனெனில், நான் ஒரு க.து தோழருடன் பேசிக்கொண்டிருந்தபோது திராவிடர் நாகரிகம் மொழி வழி பிரிந்து, இனவழி ஒன்றுபடுதல் முதலியபற்றி அக்கட்சியினர்க்கு இயற்கையான ஆரவாரப் பேச்சிலேயே அடுக்கிக் கூறிக்கொண்டு வந்தார். உடனே, நான், “இந்தச் செய்திகள் யாவும் எனக்குத் தெரியும். திராவிடநாடு பெற உங்கட்கிருக்கும் வாய்ப்பும், வசதியும் என்ன?” என்று கேட்டேன்.
அவர் சிறிதும் தயங்காமல், மூன்று நாடுகள் ஒன்று சேர்ந்து நாட்டுப் பிரிவினை கேட்டால் கொடுத்துவிடலாம் என்று, இந்திய அரசியல் சட்டம் 241 ஆம் பிரிவு கூறுகிறது என்றும், அதனால்தான் திராவிடர்களை ஒன்று சேர்த்து ஆந்திராத் தம்பிகள், கேரளத்தம்பிகள், கன்னடத்தம்பிகள் யாவரும் முயன்று தில்லி நாடாளுமன்றத்திற்குச் சென்று திராவிட நாடு அமைக்கப் போகிறோம் என்றும் ஒரு போடு போட்டார். நான்; திகைத்துவிட்டேன். இப்படிப் புளுகத் தெரிந்த தம்பிகளையுடைய அண்ணாவுக்கு என்ன குறை? என்று இறும்பூது எய்தினேன். தம்பிகளுக்குத் தெரிந்த திராவிடநாடு அடையும் வழி இதுவாயிருக்கிறது. க.து. தலைவர்கள் சொல்லிக் கொடுத்தாரோ அல்லது திரைப்படக்காட்சி வசனத்தில் கேட்டார்களோ?
திராவிட நாட்டைப் பற்றித் தங்கள் கட்சியில் உள்ள தம்பிகட்கே விளங்காதபோது, பொதுமக்களில் எத்தனை பேர்க்குப் புரிந்திருக்கும் என்று கூற வேண்டாவா? அண்ணாவே உண்மையை மறைக்கிறார் என்றால், தம்பிகள் ஒருபடி முன்னேதான் போவார்கள்.
தேர்தலுக்குக் கையாண்ட தகாத முறைகள்
க.து.க்கள் தங்கள் கொள்கைகட்கும், கோட்பாட்டுக்கும் எதிரிகளாக இருக்கத்தக்க, இருக்கிற வருணாசிரமக் கட்சியாகிய சுய தந்திரக் கட்சியுடனும் மத அடிப்படையில் முளைத்த முசிலிம் வருணாசிரம தருமத்தைப் பாதுகாக்கின்ற “முசிலிம் லீக்” குடனும் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டன. இதற்கு என்ன ஆதாரம் என்றால் க.துக்கள் செல்லும் மிதிவண்டிகளிலும், உந்துவண்டிகளிலும், க.து. கட்சிக்கொடி, மு.லீக் கொடி இரண்டும் சேர்த்தே செருகப் பெற்றிருந்தன. விளம்பரங்களிலும் சுவர்களில் எழுதியுள்ளனர். உதயசூரியனுக்கு இருபுறமும் ஒருபுறம் க.து. கட்சிக் கொடி, மறுபுறம் முசுலிம் லீக் கொடியும் உள்ளன.
திரு. ஆச்சாரியார் காஞ்சிபுரம் முதலிய இடங்களில் அண்ணாதுரையுடன் ஒரே மேடையில் பேசியுள்ளார். பாராட்டுக் கூட்டத்திலும் கூடிப் பேசியுளர். ஆனால், தம்பிகள் என்ன செப்புகிறார்கள்? நாங்கள் யாருடனும் கூட்டு இல்லை. கொஞ்சம் “சரிசெய்தல்” தான்(Adjustment) என்கின்றனர். கூட்டு என்றால் “அவாள்” அகராதியில் என்ன பொருளோ? “சரிசெய்தல்” என்றால் என்ன பொருளோ? அறியோம்.
4104 பேரை, கூலி உயர்வு கேட்டதற்காகக் காங்கிரசு ஆட்சியில் சுட்டுக் கொன்றதாகவும் குருதி தோய்ந்த துணியை விரித்துக் காட்டிக்கொண்டு ஒரு விதவை கண்ணீர் வடிப்பது போலவும், பெரிய சுவரொட்டி விளம்பரங்கள் அச்சிட்டு ஒட்டியுள்ளார்கள் க.து. க்கள். இதுதான் திராவிட நாட்டுக் கொள்கையை மக்கள் மத்தியில் வைத்து வென்ற இலட்சணமா? கொள்கை வீரர்களாயின், “திராவிட நாட்டுப் படத்தைப் போட்டு விளக்கி இதனை அடைய நாங்கள் சட்டமன்றத்துக்குப் போகின்றோம். உங்கள் வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள்” என்றல்லவா கேட்கவேண்டும்?
திராவிட நாட்டுக் கொள்கையை ஆதரித்துதான் மக்கள் 34 இலட்சம் பேர் வாக்களித்தார்கள் என்றால், இரவு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் பணம் கொடுத்தும், சாதி அடிப்படையில் கெஞ்சியும், ஒவ்வொரு சாதியினரிடமும் வாக்குப் பெற அந்தச் சாதியிலுள்ள பெருந்தலைவர்களிடம்; சென்று பரிந்துரைக் கடிதம் வாங்கி வந்து கொடுத்து, ஒவ்வொரு பகுதி நாட்டாண்மைக்காரர்களிடமும் நயம்பாடி கூத்தாடியும் வாக்குப் பெற முயன்றது ஏன்?
கொள்கையற்றவர்களாகிய இவர்கள் (க.து.கள்) சாதி, மதம், இனம் என்ற இவற்றை முன் வைத்தே பல இடங்களிலும் வெற்றி பெற்றனரேயன்றி, அண்ணா கூறுகின்ற திராவிடநாட்டுக் கொள்கையினால் அல்ல என்பதைப் பொதுமக்கள் நன்கு புரிந்துகொண்டனர். இது பிற்காலப் பல்லவி.
திராவிட நாட்டுக் கொள்கைக்காகவே மக்கள் வாக்களித்தார்கள். நாங்கள் வென்றோம் என்றால், சென்ற தேர்தலில் சட்டமன்றத்திற்கு வந்த பதினைந்து பேர்களில் பதினான்கு பேர் தோற்றனர்? ஒருவர் மட்டும்தானே பல சூழ்ச்சிகள் செய்து குறைந்த வாக்குகள் வேறுபாட்டுடன் வெற்றி பெற முடிந்தது. இவற்றையெல்லாம் பொதுமக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.
படிப்பினை
பொதுமக்களை ஏமாற்றியது போலப் பேசும் க.து. களுக்கு வருங்காலத் தேர்தல்களில் நல்ல பாடம் மக்கள் கற்பிக்கவேண்டும். பொய், பித்தலாட்டங்கள் செய்து வெற்றி பெற்றதன்றி, இப்போது “திராவிட நாட்டுக் கொள்கை” தான் வெற்றி தந்தது என்று வீராப்புப் பேசுவது எற்றுக்கு?
திரு. அண்ணாத்துரை அவர்கள் சென்னையில் பேசிய பாராட்டுக் கூட்டத்தில் ‘முதலில் தமிழ்நாட்டை அடைவோம். பிறகு திராவிட நாடு அமைப்போம்’ என்று புதிய பல்லவி பாடியதாக ‘தினமணி’ வெளியூர் 20.03.62 இதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது கண்டு வியப்படைந்தேன். பெரியார் பாதைக்கு அண்ணா வருவாரா? என்று ஐயுற்றேன். ‘மெயில்’ என்ற ஆங்கிலச் செய்தித்தாளில் வந்த கூட்ட நிகழ்ச்சிகளில் இந்தத் தமிழ்நாடு பற்றியது கிடையாது. திராவிட நாட்டுக் கொள்கையே வலியுறுத்தப் பெற்றுள்ளது.
க.து. கள் மனத்தில் உள்ளதை ஒருவேளை தினமணிச் செய்தியாளர் கண்டுபிடித்துவிட்டாரோ? என்னவோ? ஆனால், அத்தகைய திருப்பம் ஏற்பட்டால், நாட்டுக்கு நலமே. தேர்தலுக்கு முன் பேசுவது ஒன்று. பின்னர் பேசுவது வேறொன்றா? உரூபாய்க்கு மூன்று படி அரிசி கொடுக்கச் செய்வோம். மற்ற உணவுக்கு உதவும் பொருள்களின் விலைகளைக் குறைப்போம் என்று கூறி தங்களுக்கு வாக்களிக்கக் கோரிய க.து களைப் பொதுமக்கள் கேட்காமல் விடமாட்டார்கள். சட்டமன்றம் கூடட்டும் என்று இருக்கின்றார்கள் போலும். அப்போது தெரியும் திராவிட நாட்டுக் கொள்கை வென்றது என்கிற உண்மைக்குப் புறம்பான செய்தி.
தமிழ்நாட்டு முதல் தேர்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு, ஒரு பசுமாடு, ஐந்து மா நிலம் வாங்கித் தருகின்றோம். எங்கட்கு வாக்களியுங்கள் என்று கூறி வெற்றி பெற்ற பொதுவுடைமைத் (Communist) தோழர்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த தேர்தல்களில் அடைந்த கதிதான் கண்ணீர்த் துளிக் கட்சியினருக்கும் என்பது கண்கூடு.
(நன்றி : விடுதலை, 25.03.62)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment