Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4.

 அகரமுதல




 (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3. தொடர்ச்சி)

 

குறிஞ்சி மலர்

அத்தியாயம் 1 தொடர்ச்சி

எந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய், சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய தொடர்வண்டி நிலையம். அதையடுத்து ஒழுங்காய், வரிசையாய் ஒரே மாதிரியாகத் தோன்றும் ஆலைத் தொழிலாளர்கள் குடியிருப்பு வீடுகள். அதற்கும் மேற்கே திருநகர்.

திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதிந்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடப்புறமும், தென்புறமும் நீர் நிறைந்த பெரிய கண்மாய்கள். சுற்றிலும் வயல்கள், வாழைத் தோட்டம், கரும்புக் கொல்லை, தென்னை மரங்கள், சோலைகள் அங்கங்கே தென்படும்.

அந்த அழகும் அமைப்பும் பல நூறு ஆண்டுகளாகக் கனிந்து கனிந்து உருவாகியவை போன்று ஒரு தோற்றத்தை உண்டாக்கின. அந்தத் தோற்றத்தில் பல்லாயிரம் காலமாகத் தமிழன் வாழ்ந்து பழகிப் பயின்று ஒப்புக்கொண்ட சூழ்நிலை போன்று ஏதோ ஒரு பழமை தெரிந்தது! தாம் தமிழ்ப் பணிபுரியும் கல்லூரியும், தம்முடைய நெருங்கிய நண்பர்களும், பிற வாழ்க்கை வசதிகளும், நகரத்துக்குள் இருந்த போதிலும் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் திருப்பரங்குன்றத்தை வாழும் இடமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் மனததுக்குப் பழகிப் போனது போல் தோன்றிய அந்தப் பண்பட்ட சூழ்நிலைதான். உடம்புக்கு நல்ல காற்று, சுற்றிலும் கண்களுக்கு நிறைந்த பசுமை, மனத்துக்கு நிறைவு தரும் தமிழ்முருகன் கோயில் – என்ற ஆவலோடுதான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பேராசிரியராக வேலைக்கு நுழைந்த போது அவர் அங்கே குடியேறினார். அமைதியும் சமயப் பற்றும், சிந்தனையும் தேவையான அவருக்கு, அந்த இடத்தில் அவை போதுமான அளவு கிடைத்தன. அவருடைய வாழ்க்கையையே அங்கேதான் தொடங்கினார். அங்கேதான் பூரணியின் அன்னை அவரோடு இல்லறம் வளர்த்து வாழ்ந்தாள். அங்கேதான் பூரணி பிறந்தாள். தம்பிகள் திருநாவுக்கரசும், சம்பந்தனும், குழந்தை மங்கையர்க்கரசியையும் பெற்றுவிட்டுப் பூரணியின் அன்னை கண்மூடியதும் அங்கேதான்.

இப்போது கடைசியாக அவரும் அங்கேயே கண்மூடி விட்டார். நல்ல ஓவியன் முடிக்காமல் அரைகுறையாக வைத்துச் சென்ற நல்ல ஓவியத்தைப் போல் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அழகிய சிற்றம்பலம் பேரையும், புகழையும், ஒழுக்கத்தையும், பண்பையும், தேடிச் சேர்த்துப் பாதுகாத்தது போல் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் செல்வத்தையும் சேர்த்துப் பாதுகாத்திருக்கலாம் அவர்! ஆனால் அப்படிச் செய்யவில்லையே! ஏழ்மை நிறைந்த கைகளும் வள்ளன்மை நிறைந்த மனமுமாக இருந்துவிட்ட காரணத்தால் அவரால் அப்படிச் சேர்த்து வைக்க முடியவில்லை.

பின் பிஞ்சும், பூவுமாக இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு அவர் எதைச் சேர்த்து வைத்துவிட்டுப் போனார்? யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போனார்? தமிழ்ப் பண்பையும் தாம் சேர்த்த புகழையும் – அவற்றிற்குத் துணையாகப் பூரணியையும் தான் வைத்துவிட்டுப் போக முடிந்தது அவரால். பூரணிக்கு இருபத்தொரு வயதின் வளர்ச்சியும் வனப்பும் மட்டும் அவர் தந்து செல்லவில்லை. அறிவை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கைதம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள்எதையும் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இவற்றைப் பூரணிக்கும் பழக்கிவிட்டுப் போயிருந்தார். வளை சுமக்கும் கைகளில் வாழ்க்கையைச் சுமத்தியிருந்தார்.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் நல்ல இளமையில் பிறந்தவள் பூரணி. அந்தக் காலத்தில் தமிழ்க் காவியங்களில் வருகிற பெண் பாத்திரங்களைப் பற்றிய திறனாய்வு நூலுக்காக ஓய்வு ஒழிவின்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் அவர். அந்த ஆராய்ச்சி முடிந்து புத்தகம் வெளிவந்த அன்று தான் பூரணி பிறந்தாள். தமிழ்க் காவியங்களில் தாம் கண்டு திளைத்த பூரண எழில் எதுவோ அது அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் நினைவு வந்தது அவருக்கு. குழந்தையின் நிறைந்த அழகுக்குப் பொருத்தமாகப் பூரணி என்று வாய் நிறையப் பெயரிட்டு அழைத்தார் அவர்.

அந்தப் புத்தகம் வெளிவந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அதன் சிறப்பைப் பாராட்டிப் பல்கலைக்கழகத்தார் அவருக்குக் கௌரவ ‘டாக்டர் பட்டம் அளித்தார்கள். ஆனால் அதைவிட அவருக்கு இன்பமளித்த பட்டம், தட்டுத் தடுமாறிய மழலையில் பூரணி ‘அப்பா’ என்று அவரை அழைக்கத் தொடங்கிய குதலைச் சொல்தான்.

பூரணி வளரும் போதே தன்னுடைய பெயருக்குப் பொருத்தமாக அறிவையும் அழகையும் நிறைத்துக் கொண்டு வளர்ந்தாள். அறிவில் அப்பாவையும் அழகில் அம்மாவையும் கொண்டு வளர்ந்தாள் அவள். உயரமும் நளினமும் வஞ்சிக்கொடி போல் வளர்ச்சி. மஞ்சள் கொன்றைப் பூவைப் போன்று அவளுடைய அழகுக்கே வாய்ந்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன், தன் இளம் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம் பூரணிக்கு. நீண்டு குறுகுறுத்து, மலர்ந்து, அகன்று, முகத்துக்கு முழுமை தரும் கண்கள் அவளுக்கு. எந்நேரமும் எங்கோ எதையோ எட்டாத உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக் கொண்டிருப்பதுபோல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுவதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புகளை மனத்துக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு சாயல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி.

பூரணியைப் போல் பூரணியால்தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள். பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் பூரணியை வெறும் பள்ளியிறுதி வகுப்புவரைதான் படிக்க வைத்திருந்தார். வீட்டில் தமக்கு ஓய்வு இருந்த போதெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்து முறையாக இலக்கண இலக்கியங்களைப் பூரணிக்குக் கற்பித்திருந்தார். எவ்வளவோ முற்போக்குக் கொள்கையுடையவராக இருந்தும் பெண்களின் படிப்பைப் பற்றி ஒரு திட்டமான கொள்கை இருந்தது அவருக்கு. கற்பூரம் காற்றுப் படப்படக் கரைந்து போவதுபோல் அதிகப் படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனத்தோடும் வாழுகின்ற செயற்கை நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறதென்று நினைப்பவர் அவர். பூரணியை அவர் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பாததற்கு அவருடைய இந்த எண்ணமே காரணம். கல்லூரிப் படிப்புத் தரமுடிந்த அறிவு வளர்ச்சியைப் போல் நான்கு மடங்கு அறிவுச் செழிப்பை வீட்டிலேயே தம் பெண்ணுக்கு அளித்திருந்தார் அவர். உண்மைப் பற்றும் ஆர்வமும் கொண்டு தமிழ் மொழியைப் பேச்சாலும் எழுத்தாலும் வளர்த்துவிட்டுப் போயிருந்தது போலவே தம் அருமைப் பெண்ணையும் வளர்த்துவிட்டுப் போயிருந்தார்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue