Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 33

 

அகரமுதல

     02 October 2021      No Comment



(அகல் விளக்கு – மு.வரதராசனார். 32. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 13 தொடர்ச்சி

இரவு 2 மணிக்குத் திடீரென்று என் உறக்கம் கலைந்தது. இரவு முன்னேரத்தில் படுத்தால் எப்போதும் விடியற்காலம் வரையில் ஒன்றும் அறியாமல் ஆழ்ந்து உறங்குகின்றவன் நான். தேர்வு நாட்களில் கடிகாரத்தில் 4, 4 1/2 மணிக்கு விழிப்பொலி(அலாரம்) வைத்துவிட்டுப் படுத்தாலும், (அலார) மணி அடிக்கும் போது அந்தக் கடிகாரத்தின் மேல் வெறுப்போடும் ஆத்திரத்தோடும் எழுவேன். சில நாட்களில் எழுந்து நிறுத்தியதும் மறுபடியும் படுத்துவிடுவேன். வீட்டில் இருந்த காலங்களில் அம்மா மெல்லத் தட்டிக் கொடுத்து என்னை எழுப்பி உட்கார வைப்பார். அப்படி ஆழ்ந்து உறங்கும் வழக்கம் உடைய நான் அன்று எதிர்பாராமல் 2 மணிக்கு விழித்துக் கொண்டது எனக்கே வியப்பாக இருந்தது என் மனத்தில் இருந்த கவலையும் திகிலும் அதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

எழுந்து விளக்கிட்டுக் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். எங்கும் ஒரே அமைதி நிலவியது. கிழக்குப் பகுதியில் தொலைவில் இரண்டு அறைகளில் மட்டும் விளக்கொளி தெரிந்தது. எம். ஏ. படிக்கும் மாணவர்கள் யாரேனும் இன்னும் உறங்காமல் தேநீர் குடித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கலாம்; அல்லது, முன்னேரத்தில் நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணினேன். ஒருகால் சந்திரன் வந்திருக்கக்கூடும் என்று எண்ணி, கதவருகே போய்ப் பார்த்தேன். பூட்டிய பூட்டு அப்படியே இருந்தது. கொட்டாவி விட்டபடியே வந்து மறுபடியும் படுத்துக்கொண்டேன்.

அன்று விழிப்பொலி(அலாரம்) 5 மணிக்கு வைத்திருந்தேன். ஆனால் அது அடிக்கவில்லை. விழிப்பொலிக்கு(அலாரத்துக்கு)ச் சாவி கொடுக்க மறந்துவிட்டேன் என்பதைப் பிறகு கண்டேன். நான் விழித்தபோது மணி 5-30 ஆகியிருந்தது. பரபரப்போடு எழுந்தேன். மாணவர்கள் படிக்கும் குரல் பல கேட்டன. மரங்களில் காக்கை, குருவிகளின் பேச்சும் பாட்டும் கேட்டன. இன்பமான குயில்கள் இரண்டு மாறி மாறிக் கூவும் காதல் பாட்டின் இசையும் கேட்டது. இத்தனை குரல்களையும் கேட்டுக் கைகால் நீட்டித் திமிர்விட்டபடியே சிறிது நேரம் கிடந்தேன். சந்திரன் நினைவு வந்தது; பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை அவனுக்காகக் கவலைப்பட்டுப் படிக்க வைத்ததை எண்ணினேன். இன்னும் சில மணி நேரத்தில் அவனுடைய விஞ்ஞானப் பாடத்தின் தேர்வு தொடங்குமே, படிக்காமலே, இருந்தால் அவன் எப்படிப் போய் எழுதுவான் என்று கவலைப்பட்டேன். முந்திய நாள் பகலில் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. “இனிமேல் தேர்வு எழுதமாட்டேன்; ஊருக்குப் போகமாட்டேன். அப்பாவுக்கு எழுதிவிடு” என்று சொன்னான். அதை நினைத்தவுடன் என் உள்ளம் திடுக்கிட்டுக் கலங்கியது.

உடனே எழுந்து சந்திரனுடைய அறையைப் பார்த்தேன். ஒரு மாறுதலும் காணப்படவில்லை. பரபரப்போடு திரும்பி வந்தேன். என் அறைக்குள் நுழைந்தபோது சன்னலின் கீழே ஒரு சாவி இருப்பதைக் கண்டேன். அது சந்திரனுடைய அறையின் சாவிபோலவே இருந்தது. அதை எடுத்துச்சென்று அவனுடைய அறையின் பூட்டைத் திறந்தேன் அது திறந்தது. என் மனம் மிகக் கலங்கியது. முந்திய இரவு நான் உணவுக் கூடத்துக்குப் போயிருந்தபோது, தன் அறையை பூட்டிச் சாவியைச் சன்னல் வழியாகப் போட்டுவிட்டு வெளியேறிப் போயிருப்பான் என எண்ணினேன். நொந்தேன். அவனுடைய அறைக்குச் சென்றேன். மேசைமேல் ஏதேனும் கடிதம் வைத்துவிட்டு போயிருக்ககூடும் என்று பார்த்தேன். அங்கு ஒன்றும் இல்லை. அறை வழக்கம் போலவே இருந்தது. அவனுடைய தோல்பை மட்டும் காணோம். பெட்டி முதலியவை அப்படியே இருந்தன. பெட்டி பூட்டப்பட்டுச் சாவி கீழே வைக்கப்பட்டிருந்தது. எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறான் என்பது நன்றாகத் தெரிந்தது. அறையைப் பூட்டிவிட்டு, மாலனிடம் விரைந்து சென்றேன். அவனுக்கு எல்லாச் செய்தியும் சொன்னேன். “வா, போகலாம். உடனே அஞ்சல் நிலையத்துக்குப் போய் அவனுடைய அப்பாவுக்கு ஒரு தந்தி கொடுப்போம்” என்றேன்.

அவன் ஒன்றும் பேசாமல் வந்தான். அஞ்சல் நிலையத்துக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பினோம். அதற்குள், நான் மாலனோடு பேசிய செய்தி எப்படியோ விடுதி முழுவதும் பரவியது. நாங்கள் திரும்பியவுடன் மாணவர் பலர் எங்களை நோக்கி வந்து, “என்ன செய்தி” என்று கேட்டார்கள். என் அறையை நோக்கி வந்தபோது சந்திரனுடைய அறைக்கு எதிரே மாணவர் சிலர் கூடியிருந்தது கண்டேன். ஒரு வேளை சந்திரன் திரும்பி வந்துவிட்டானோ? அதனால்தான் கூட்டம் இருக்கிறதோ என்று எண்ணிச் சிறிது மகிழ்ந்தேன். கூட்டத்தில் இருந்த சாந்தலிங்கம் என்னை நோக்கி விரைந்து வந்து, “உண்மையாகவா? நம்பவே முடியவில்லையே! அன்று சிறுநீர் அறையில் ஏற்பட்ட பிணக்கின் போது, அவ்வளவு அஞ்சாமையோடு என்னை எதிர்த்துப் பேசினானே! அவனுடைய தைரியத்தையும் தெளிவையும் நான் மனமாரப் போற்றினேனே! அப்படிப்பட்டவனா மனம் தளர்ந்து இப்படிச் செய்திருப்பான்?” என்று வருந்தினான்.

செய்தி விடுதிக் காப்பாளர்க்கு எட்டியது. அவரும் வந்தார். என்னைக் கேட்டார். நான் சொன்னபிறகு சிறிது சிந்தித்தபடி இருந்து, “ஊருக்குத்தான் போயிருப்பான் பார்க்கலாம். தந்திபோன பிறகு என்ன செய்தி வருகிறது என்று பார்ப்போம்” என்றார்.

திடீரென்று எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. எங்காவது போய்க் கடலிலோ வேறு எங்கோ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் என்று எண்ணியதும் மனம் திடுக்கிட்டது. மாலனிடம் சென்று சொன்னேன். அவன் உடனே படிப்பகத்துக்கு அழைத்துச் சென்று, செய்தித் தாளில் விபத்து தற்கொலை முதலான செய்திகளைத் தேடிப் பார்த்தான். ஆங்கிலத்தாள் தமிழ்த்தாள் இரண்டிலும் பார்த்த பிறகு, “கவலையே வேண்டா, அப்படி நடந்திருக்காது, நடந்திருந்தால் உடனே செய்தி வந்திருக்கும்” என்றான்.

அன்றைய தேர்வில் நான் நன்றாக எழுதவில்லை. எழுதும்போது, சந்திரனுடைய தேர்வுபற்றி அடிக்கடி எண்ணம் வந்தது. இரண்டு ஆண்டுகள் இடைநிலை(இண்டர்) படித்துக் கடைசியில் இப்படி எல்லாவற்றையும் வீணாக்கிவிட்டானே என்று வருந்தினேன்.

மாலையில் சந்திரனுடைய வீட்டுக்குக் கடிதம் எழுதினேன். அதில் எல்லாச் செய்திகளையும் விரிவாக எழுதியிருந்தேன்.

அன்று முழுவதும் என் மனம் மிகச் சோர்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று நான் போற்றிய நண்பன் இப்படி ஆகவேண்டுமா என்று எண்ணி எண்ணி மனம் களைத்துப் போயிற்று. முதலிலிருந்தே எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்தான்; என்னை நெருங்கவொட்டாமல் ஒதுக்கினான். என் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் அன்போடு உதவி செய்ய முடியாமற் போயிற்று; சாமண்ணாவும் அத்தையும் அந்த அம்மாவும் கேட்டு எவ்வளவு வருந்துகிறார்களோ; கற்பகம் தன் அண்ணனை நினைந்து நினைந்து கதறுவாள் என்றெல்லாம் எண்ணிச் சோர்வு மிகுதியாயிற்று. மனத்தின் சோர்வு உடம்பையும் தாக்கவே, அன்றிரவு பத்து மணிக்குள்ளாகவே கொட்டாவி மேல் கொட்டாவி வந்தது. அயர்ந்து படுத்தேன்.

காலையில் எழுந்து பல் துலக்கிக் கொண்டிருந்தபோது “உன்னைத் தேடிக்கொண்டு யாரோ வந்திருக்கிறார்கள்” என்று என் வகுப்பு மாணவன் ஒருவன் வந்து சொன்னான். எதிர்பார்த்தபடி சாமண்ணா வந்திருந்தார். அந்த ஊர்ப் பள்ளியின் தலைமையாசிரியரும் வந்திருந்தார். என் கடிதத்தை அவர்கள் பார்க்கவில்லை. ஆகையால் விரிவாகச் சொன்னேன். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. அவரால் பேச முடியாமல் நாத்தழுதழுத்தது. “மகன் உயிரோடு வந்து சேர்ந்தால் போதும்; தேர்வு போகட்டும், படிப்பும் போகட்டும், அவனுடைய அம்மாவிடத்தில் இதோ உன் பிள்ளை என்று கொண்டுபோய்ச் சேர்த்தால் போதும். இல்லையானால், நான் அவளை உயிரோடு பார்க்கமுடியாது” என்றார்.

தலைமையாசிரியர் என்னையும் மாலனையும் தனியே அழைத்துப்போய், அந்தப் பெண்ணைப்பற்றிக் கேட்டார். அந்தப் பெண்ணும் அவனும் சேர்ந்து எங்காவது வெளியூர்க்கு ஓடிப்போயிருக்கலாம் என்றார். பெற்றோர்கள் செய்யும் திருமண ஏற்பாட்டை விரும்பாமல், அப்படிக் காதலர்கள் ஓடிப்போவது உண்டு என்று இங்கே நடந்ததும் அங்கே நடந்ததுமாகச் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டார். “இப்போது நேரே அந்தப் பெண் இருக்கும் இடத்துக்குப் போய் அங்கே கேட்டுப் பார்ப்பது நல்லது. ஒருவேளை அந்தப் பெண்ணே அங்கே இருந்தால் அவளையே கேட்டு விடுவோம். இதில் தப்பு ஒன்றும் இல்லை” என்றார்.

சாமண்ணாவை விடுதியில் என் அறையில் தனியே விட்டுவிட்டுப் போகலாம் என்றேன். தலைமையாசிரியர் அதற்கு உடன்படவில்லை. தனியே இருந்தால், அவர் மிகத் துயரப்பட்டுக் கலங்குவார் என்றார். அதனால் சாமண்ணாவையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெண்கள் கல்லூரிக்குச் சென்றோம். அங்கே அந்தப் பெண்ணின் பெயர் சொல்லிக் கேட்டோம். சிறிது நேரத்தில் அவளே வந்து எங்கள் முன் நின்றாள். “என்ன செய்தி? நீங்கள் யார்?” என்றாள்.

நான்தான் பேசினேன். “நான் சந்திரனோடு படிப்பவன் பக்கத்து அறை” என்றேன்.

தொடர்ந்து பேசுவதற்குள், “வேலுவா? வணக்கம், அவர் சொல்லியிருக்கிறார்” என்றாள்.

“அவர் சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா. இவர் அந்த ஊர் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்” என்றேன்.

அவள் முகம் வாடியது. “என்ன செய்தி? சந்திரனுக்கு உடம்பு நன்றாக இல்லையா?” என்றாள்.

“சந்திரன் முந்தா நேற்று இரவு போனவன் இன்னும் வரவில்லை; தேடுகிறோம்.”

அவள் முகம் வெளிறியது. “அப்படியா? என்ன காரணம்? தேர்வு?” என்று தன் வலக்கைச் சுட்டுவிரலை உதட்டில் சுவைத்தபடி தரையை நோக்கி நின்றாள்.

“காரணம் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பதற்காக வந்தோம்” என்றார் தலைமையாசிரியர்.

“அய்யோ! தெரியாதே! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே! தேர்வு நன்றாக எழுதவில்லையா? அப்படி இருந்தால் எனக்குத் தெரிவித்திருப்பாரே. இரண்டு நாளைக்கு முன்தான் நான் ஒரு கடிதம் எழுதினேன். என்ன காரணமோ?” என்றாள்.

சாமண்ணா கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தார். அவள் அவருடைய கலக்கத்தைக் கண்டதும், “என் நெஞ்சு பகீர் என்கிறதே! நான் அண்ணன் தம்பி இல்லாத பெண். அவர் என்னோடு அன்பாகப் பழகினார். எனக்கு அண்ணன் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தேன். படிப்பைப் பற்றியெல்லாம் எனக்குத் தைரியம் சொல்லுவார்” என்றாள். தரையை நோக்கிய அவளுடைய கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன. முந்தானையால் கண்களைத் துடைத்தாள். கலங்கி நின்றாள். முந்தானையை வாயருகே வைத்தபடி என்னை நிமிர்ந்து பார்த்தாள். “அவர் கிடைத்தவுடன் எனக்குத் தெரிவியுங்கள். என் வீட்டு முகவரிக்கு எழுதுங்கள். 10, நடுத்தெரு இராயப்பேட்டை” என்றாள்.

நான் அந்த முகவரியைக் குறித்துக் கொண்டேன்.

“சரி போகலாம். உனக்கு ஏதாவது தெரிந்தால் எழுது அம்மா. சாமண்ணா, பெருங்காஞ்சி, வாலாசா தாலுக்கா” என்று தலைமையாசிரியர் விடைபெற்று நகர்ந்தார். சாமண்ணா ஒன்றும் பேசாமலே கலங்கிய கண்களோடு தொடர்ந்தார்.

நான் விடைபெற்றபோது “விடுதியில் என் முகவரிக்கு எழுதுங்கள். அறை எண் – 90” என்றேன். அவள் வாய் திறந்து ஒன்றும் கூறாமல் கைகூப்பினாள் அவளுடைய கண்கள் இன்னும் கலங்கியிருந்தன.

வழியில் தலைமையாசிரியர் என்னைப்பார்த்து, “பெண் நல்ல பெண்; உண்மையானவள். இவன் தப்பாக எண்ணிவிட்டான். அவள் ஏமாற்றவில்லை. இவன்தான்-” என்று நிறுத்திவிட்டார்.

“அப்படி ஏதாவது சொல்லியிருந்தாலும், கேட்டுப் பார்த்துத் திருமண ஏற்பாடே செய்திருக்கலாமே” என்றார் சாமண்ணா.

கடற்கரையில் எங்காவது திரிகின்றானோ பார்க்கலாம் என்று அன்று மாலை கடற்கரைக்கும் போய், வருவார் போவோரை எல்லாம் பார்த்துக் காத்திருந்தோம். மறுநாள் சாமண்ணாவும் தலைமையாசிரியரும் தங்கள் ஊரார் இருக்கும் இடம் எல்லாம் தேடிப் பார்த்துச் சோர்ந்து போய் சந்திரனுடைய பெட்டியும் படுக்கையும் எடுத்துக்கொண்டு ஊர்க்குச் சென்றார்கள்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue