Skip to main content

தந்தை பெரியார் சிந்தனைகள் 14: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

 

அகரமுதல



(தந்தை பெரியார் சிந்தனைகள் 13 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 14

2. சமயம்

இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டு மக்களிடையே ஏதோ ஒருவகையில் சமயம் நிலவி வருகின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கை ஒழுங்கு பெறவிருக்கும் நன்னெறிகளின் தொகுதியே சமயம் ஆகும். நம் நாட்டில் நிலவும் சமயங்கள்; சைவம்வைணவம்புத்தம்சமணம் என்பவையாகும். நடைமுறையிலுள்ள மதம் அல்லது சமயத்தைப் பற்றிப் பெரியார் கூறுவது.

(1) நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடம் மதம் என்னும் சீமைக்காரை (சிமெண்ட்டு) சுண்ணாம்பினால், கடவுள் என்னும் கற்களைக் கொண்டு என்றும் அழியாத மாதிரியில் பலமாகக் கட்டி, அதைச் சாத்திரம் புராணம், மறுபிறவி, சொர்க்கம்மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூசப் பெற்றுள்ளது-என்று விளக்குவார்.

(2) மதம்கடவுள்சாத்திரம் மனிதச் சமுதாயத்தை முறைப்படுத்தவும் ஒழுக்கம், நாணயம் முதலியவற்றை வளரச் செய்யவும் ஏற்படுத்தப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாளடையில் இது (மதம்) ஒரு சில தன்னலச் சோம்பேறிகளிடம் அகப்பட்டுக் கொண்டு, இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நாணயமற்ற தன்மையும் தீயொழுக்கமும் அயோக்கியத்தனமும்தான் வளருகின்றன. மதம் ஆசாடபூதிகள், போலி வேடதாரிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என்று கருதுகின்றார் ஐயா. 

(3) மதம் என்பதைப் பலவிதமாகச் சமயத்துக்குத் தக்கபடி சொல்லுவார்கள். மனித வாழ்வுக்காக மனிதனுடைய முடிவான இலட்சியத்தை அடையத்தக்க ஏற்பாடுகளே, விதிகளே, எண்ணங்களே மதம் என்ற சொல்லலாம்.

(4) எவ்வளவு …………………………. அறிவாளியான நல்ல …………………………. உண்டாக்கப்பட்டது …………………………. தெய்விகத் தனிச்சக்தி, …………………………. ஏற்படுத்தப்பெற்றது ………………………….

(5) மதம் என்பது …………………………. அறிந்திருப்போர் …………………………. அறியாது பழமை …………………………. கண்மூடித்தனமாகப் …………………………. பெரும்பாலோர் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். அய்யா அவர்களின் இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்ட மக்கட் சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கினால் இந்த உண்மை நமக்கும் தெளிவாகும்.

(6) மதம் என்பது மனிதனின் உலகவாழ்க்கையின் நடப்பிற்கு வழிகாட்டியான கொள்கைகளைக் கொண்டது; அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பெற்றது; அது கால தேசவர்த்தமானப்படி மக்கள் செளகரியத்திற்காகத் திருத்தி அமைக்கக்கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடந்தரக்கூடியது என்று சொல்லுகின்ற எந்த அமைப்பையும் பெரியார் எதிர்த்ததே இல்லை என்பதை நாம் அறிய வேண்டும். (இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே ஆகமங்கள் கால …………………………. அடைகின்றன)

(7) அரசுமதம்கடவுள் ஆகிய அமைப்பை எதிர்ப்பதற்குக் காரணம் அவை மக்களின் தீமைக்குக் காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவருக்கு அவற்றின்மேல் எந்தவிதக் காழ்ப்பும் பொறாமையும் வெறுப்பும் இல்லை என்பதை அவரே தெளிவாக வற்புறுத்தி எடுத்தோதுவதைக் காணலாம்.

(8) மனிதன் சட்டமோமதக்கொள்கையோ ஏற்படுத்த வேண்டுமானால் ஐம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும் ஆசையின் இயல்பிற்கும் ஏற்றவிதமே விதி செய்யவேண்டும். அதற்கு எதிரான கொள்கை கொண்ட மதமும் சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும்

_______________________________________

(குறிப்பு: …………………………. = கிடைக்காத வரிகள், நூலின் அச்சுப்பதிப்பில் பிழை நேர்ந்துள்ளது) என்பது ஐயாவின் ஆணித்தரமான கருத்து. மனிதாபிமானமே தந்தையவர்களின் பேச்சும் மூச்சுமாக இருந்தன.

(9) சீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதனால் தாமும் சைவனாகவும் அதன்மூலம் தாமும் ஒரு சைவன் என்று சொல்லிக் கொள்ளவும் ஆசைப்படுவதாகச் செப்புகின்றார்.

(10) சீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, சீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தாம் திருமால்; அக்குணங்களைக் கொண்டு ஒழுகுவதுதான் வைணவம் என்பதனால் விட்டுணு விடத்திலும் வைணவனிடத்திலும் தமக்கு எவ்விதத்திலும் தகராறு இல்லை என்று அய்யா சொல்லுவதோடு நில்லாது தாமும் தம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்று உறுதியுடன் சொல்லுகின்றார்.

(11) மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு எதிரி  மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு எதிரி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு எதிரி. மதமே மனித சமூகசமதர்மத்திற்கு எதிரி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வருக்கத்துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே பிராமணச் சமூகத்தினரின் பிழைப்புக்கு வழி- எவ்வளவு ஏக்கமிருந்தால் எரிமலைப் பிழம்பு போல் இவ்வார்த்தைகள் அவர்தம் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும்?

(12) மதவாதி மோட்சத்திற்குப் போகக் கோயில்கட்டச் செய்வான். குளம் வெட்டச் செய்வான். எறும்புப் புற்றுக்கு அரிசி போடச் செய்வான். பாம்புப் புற்றுக்கு பால் வார்க்கச் செய்வான். ஆனால் மனிதனுக்குத் தொண்டு செய்வதன் மூலம் மனித இனம் மேன்மை அமையவேண்டும் என்று எந்த மதநிறுவனமோ மதவாதிகளோ போதிப்பதில்லை.

இந்தக் காரணங்களால் தந்தைபெரியாரை இராமாநுசர், இராமகிருட்டிண பரமஃகம்சர், இராமலிங்க அடிகள், காஞ்சிப் பெரியவர் என்பவர்களோடு ஒப்பவைத்துப் பாராட்ட வேண்டும் என்று என் சிறுமனம் எண்ணுகின்றது.

மதக்கேடுகள்: மதத்தினால் விளையக்கூடிய கேடுகளைப் பற்றிய ஐயாவின் சிந்தனைகள்:

(1) மதத்திற்கும் உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில், பெரும்பாலும் எல்லா மதங்களுமே உலக இயற்கைமீது ஆதிக்கம் செலுத்தி அதை வழிமறித்துக் கண்மூடித்தனமான செயற்கையில் திருப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அதனால் மதம் கலந்த படிப்பு இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடம் அளிக்காமலே போய் விடுகின்றது.

(2) மதமே மனிதனுடைய தன்மதிப்பிற்கு எதிரி. மதமே மனிதனுடைய தன்னுரிமைக்கு எதிரி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு எதிரி. மதமே மனிதசமூக சமதர்மத்திற்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளிவர்க்கத்துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. இச்சிந்தனை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் காட்டிவிடுகின்றது மதக்கோட்பாடுகளை.

(3) எந்த வழியில் எந்த மாதிரியில் எவ்வளவு நல்லமுறையில் கடவுளையும் மதத்தையும் வேதத்தையும் சிருட்டித்துக் கொண்டாலும் அது மனித சமூகப் பெரும்பான்மை மக்களுக்கு ஆபத்தையும் கேட்டையும் பிரிவினையையும் முரட்டுத்தனத்தையும் குரோதத்தையும் அடிமைத்தன்மையையும் உண்டாக்கியே தீரும். உலகில் மதங்களால் ஏற்பட்ட மாபெரும் போர்களே இவற்றை மெய்ப்பிக்கின்றன.

(4) கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத்தருகின்றது. கள் குடித்தவனைக் கெடுக்கின்றது. மதம் மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது. வள்ளுவர் பெருமான் கள்ளுக்கும் காயத்துக்கும் ஒப்பிடுவதை நினைவூட்டுகின்றது இது.

(5) நான்காவது ஐந்தாவது சாதியாக்கி-பிராமணரல்லாத மக்களை மடமையில் அழுத்தி வைக்கவே வேத, புராண மதம் வழி செய்கின்றன. இதைக் கொஞ்சமேனும் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சி செய்தாலும் ‘நாத்திகன்’, ‘மதத்துவேசி என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்துவிட்டால் என்ன பொருள்?

(6) எந்த மதத்திலும் எந்தச் சமுதாயத்திலும் பாவமன்னிப்பு எளிதில் இருக்கிறதோ, அனுமதிக்கப்பெறுகின்றதோ, அந்த மதத்தில், சமுதாயத்தில்அயோக்கியர்கள் அதிகமாகத்தான் இருப்பார்கள். இதில் அதிசயம் ஒன்றுமில்லை.

(7) இன்று மதமானது ஒருவரையொருவர் ஏய்க்கவே பயன்படுத்தப் பெறுகின்றதே அல்லாமல், தொல்லையில்லா திருக்க நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக இல்லை. போலி வாழ்க்கைக்காரருக்குத் திரையாகவே மதமும் பக்தியும் உதவுகின்றன. இன்றைய வாழ்க்கையில் பல போலித்துறவிகள் வழக்கில் சிக்கிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதனை நினைந்தே வள்ளுவப் பெருந்தகை,

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (குறள்-273)

என்று கூறிப் போந்தார்.

(8) மதங்கள் பிரிவினைக்கும் பேதத்திற்கும் காரண மாத்திரமல்லாமல் மடமைக்கும் மூடநம்பிக்கைக்கும் காரணமாக உள்ளன. அச்சத்தின் அத்திவாரத்தின்மீது ஆண்டவன் இருப்பது போல, மூடநம்பிக்கை மடமை என்ற அத்திவாரத்தின்மீதே மதங்கள் இருக்கின்றன.

(9) மதம் மனித சமுக முற்போக்கைத் தடைசெய்வதுடன் மனித சமூக ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் சம உரிமைக்கும் இடையூறாய் உள்ளது.

(10) ஓரிரு கோடிருபாய்ப் பணமும் ஓரிரு ஆயிரம் ஆட்களும் 5-6 மொழிகளில் செய்தித்தாள்களும் வைத்துக்கொண்டு ஓர் ஈன மிருகத்திற்கும் தெய்வத்தன்மை கற்பித்து அற்புத அதிசயங்கள் செய்ததாகக் கதைகட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால் ஓர் ஆண்டுக்குள்ளேயே பல இலட்சக்கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம்.

இந்தப் போக்கில் ஐயா அவர்களின் சிந்தனைகள் அமைகின்றன.

(அ) மதவாதிகளின் கொடுமை: மதவாதிகளின் கொடுமைகளைப் பற்றிய ஐயா அவர்களின் சிந்தனைகள் இவை:

(1) மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்பவர்கட்கு ஆவேசமும் வெறியும் உண்டாவதுதான் முதன்மைப் பலனாக இருக்கின்றதேயன்றி, அது சிரமப்படுகின்ற, ஒரு பாவமும் அறியாத பாமரமக்களுக்குக் காரியத்தில் என்ன நன்மை செய்துள்ளது? மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டுள்ளது? இந்த வினாக்களுக்கு மறுமொழி என்ன கூறமுடியும்? ஏதாவது இருந்தால்தானே சொல்ல முடியும்? வேண்டுமானால் இவை மதத்துரோகமான வினாக்கள் என்று கூறித் தட்டிக் கழிக்கலாம்.

(2) குருபாதிரிமுல்லாபுரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள்செல்வர்கள்சோம்பேறிகள் ஆகியவர்கள் உரிமம் (License) பெற்ற காலிகளேயாவர்கள். இவர்களின் உழைப்பின் பயன் எல்லாம் அரசர்கட்கும், செல்வர் கட்கும், சோம்பேறிக் கூட்டத்தார்களான மதப்பாசாண்டிகட்கும் பயன்பட்டதாகும். கடுமையான சொற்கள். ஆயினும் இவை அவர்கள் காதில் ஓதினாலும் பலன் இராது. அவ்வளவு தூரம் அவர்கள் உணர்வு தடித்துப் போய்விட்டது.

(3) ‘அன்பே சிவம், ‘அன்பே வெங்காயம் என்கின்றான் சைவன். இந்தச் சைவன் இதுவரை யாரிடத்தில் எந்தக் காரியத்தில் அன்பு காட்டியுள்ளான்? அன்பு அகிம்சை கொள்கைகளையுடைய சமண பெளத்தர்களை ஒழித்தான். அன்பு அகிம்சை காட்டியதாலேயே அவர்களைப் பனங்காயைச் சீவுவதுபோலத் துண்டாகத் தலையைச் சீவியும் கழுவில் ஏற்றியும் அவர்களுடைய உடைமைகளைச் சூறையாடியும், அவர்களு டைய இருப்பிடங்களையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தியும், இடித்துப் பாழாக்கியும் செய்த சைவர்களின் மதிவெறி காட்டினதை வரலாறு கூறும்.

(4) நம் கடவுளையும் சமயத்தையும் ஏற்ற மக்கள்தாம் 100 விழுக்காடு மலமெடுக்கிறார்கள். கசுமாலக்குழியில் இறங்கிச் சேறு எடுக்கிறார்கள். 100க்கு 75 பேர் மண் வெட்டியும் அவர்தம் மனைவிமார் மண் சுமக்கும் கூடையையும் தங்கள் சொத்தாக வைத்து வாழ்கிறார்கள். படிப்பில், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நம்மைவிட இரண்டுமடங்கு படித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் நம் மதவாதிகள், மதத்தலைவர்கள், மதபிரசாரர்கள் நம்மக்களின் குறையையும் இழிநிலையையும் அறியாமையையும் மாற்றுவதற்கு என்ன செய்தார்கள் ? என்ன செய்கிறார்கள் ? என்ன செய்யப் போகிறார்கள்? திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா தோரும்’ என்றும் ‘திருப்பதி மிதியாப்பாதம்சிவனடி வணங்காச் சென்னி’ என்றும் பாடினால் மட்டிலும் போதுமா? கூழில்லாமல் கும்பி பாழாவதைப் பற்றிச் சிறிது கூடச் சிந்தியாமல் ‘திருநீறு இல்லாத நெற்றி பாழ்’ என்றும், ‘திருமண் இல்லாத நெற்றி பாழ்’ என்றும் பிரசாரம் செய்தால் போதுமா? என்று வயிறெரிந்து கேட்கின்றார்? தள்ளாத வயதில் அவர் மனம் நொந்து பேசுவதைக் கேட்கின்றோம்-கண்ணில் நீர் சொட்ட.

(5) நம் மதவாதிகள், சிறப்பாக இந்துமத வாதிகள் என்பவர்கள் பண்டிதமதவாதிகளைவிட மோசமானவர்கள். பண்டிதர்கள் ஆயிரக்கணக்காக ஆண்டுகட்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போகவேண்டும் என்பவர்கள்; மதவாதிகளோ பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன், பல யுகங்களுக்கு முன்னால் இருந்த உலகங்கட்குச் செல்ல வேண்டும் என்பவர்கள். இவர்கள் இருவருக்கும் பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாததும் மனித ஆற்றலுக்கு மீறியதுமான காரியங்களிலும் அசாத்தியமான கற்பனைகளிலும் தான் நம்பிக்கையும் பிரியமும் இருக்கும்.

(மத ஒழிப்பு: மக்களை பல்வேறு வகைகளில் இழிநிலைக்குத் தள்ளும் மதத்தை ஒழிக்கவேண்டும் என்பதுபற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள்:

(1) மக்களைத் தன்மதிப்பு இல்லாமல் செய்து விலங்குகளாக்கி நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாயிருக்கும் மதம் எதுவானாலும் அதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கின்றார்.

(2) எந்த மதத்தை எந்தக் கடவுள் அல்லது யார் நேரில் வந்து சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், எந்தச் சமயாச்சாரியார் எவ்வளவு அற்புதங்கள் செய்திருந்தாலும் தீண்டாமை என்னும் கொடுமைக்கு இடம் கொடுத்துக் கொண்டுள்ள மதத்தை உடனே ஒழித்துக்கட்ட வேண்டும் என்று உரைக்கின்றார்.

(3) மதவிசயத்தைப் பற்றி ஆதரித்து எவர்தெருவில் நின்று பேசினாலும் தெருவில் மதசம்பந்தமான நூல்கள் வைத்துக் விற்பனை செய்தாலும் மதம் பற்றிய கருத்துகளை செய்தித்தாள்களில் எழுதினாலும் அவர்களெல்லாம கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்பெறுமானால், உலகமக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, மடமையற்று தோளோடு தோள் இணைந்து தோழர்கள் போல் வாழ முடியும். தத்துவங்களால் விளைந்த வேற்றுமைகள் ஒழிந்து எல்லாத்துறைகளிலும் ஒற்றுமையாய் வாழ முடியும் என்று கருதுகின்றார் அய்யா (மக்களாட்சியில் இத்தகைய சட்டம் இயற்றுவது சாத்தியமல்ல என்பதை அய்யா அவர்கள் அறியாததல்ல).

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்), தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்




Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue