Skip to main content

தந்தை பெரியார் சிந்தனைகள் 16: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

 அகரமுதல




(தந்தை பெரியார் சிந்தனைகள் 15 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 16

2.  குமுகம்பற்றிய சிந்தனைகள்

 

 அன்பு நிறைந்த தலைவர் அவர்களே,
அறிஞர்பெருமக்களே,
மாணாக்கச்செல்வங்களே.

இன்றைய இரண்டாவது சொற்பொழிவு பெரியாரின் குமுக(சமூக)ச் சிந்தனைகளைப் பற்றியது. பேச்சில் நுழைவதற்குமுன் குமுகம் பற்றிய சில சொல்ல நினைக்கின்றேன்.

மனிதன் என்ற வாழும் உயிரியும்  அசைவிலியாகவும் தாவரமாகவும் நிலைத்திணையாகவும்(அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும்) இருந்த  பொருள்களிலிருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கின்றான். இங்கு,

புல்லாகிப் பூடாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்.  . . .[1]

என்று மணிவாசகப் பெருமானின் மணியான பாடல் பகுதியை நினைக்கலாம். இது மனிதனைப் பற்றிய ஒருவிதமான விளக்கம்; படிவளர்ச்சிக் கொள்கையை (Theory of Evolution) அடிப்படையாகக் கொண்டது.

மனிதன் யார் என்றால் நன்றியுணர்வுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான்; பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலியவை போல் மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் குருதியை உறிஞ்சியும் வாழும் வாழும் உயிரிகளேயாகும் என்பது தந்தை பெரியாரவர்களின் கருத்தாகும். “உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே”[2] என்பது தொல்காப்பியம். மனிதவடிவமாக இருப்பவர்கள் அனைவரும் மக்கள் அல்லர்; ‘இவன்தான் மனிதன்’ என்று சுட்டியுரைக்கப் பெறும் தகுதி உள்ளவர்களே மனிதர்கள், உயர்திணையைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் மாக்கள்; அஃறிணையைச் சார்ந்தவர்கள் என்கிறான் அந்த இலக்கணப்புலவன்.

மனிதன் மனித இனத்தின்-மனித மன்பதையின் ஓர் அலகு; சிறிய அளவு கோல். இவனே குடும்பமாக வளர்பவன். மனிதன் பகுத்தறிவுள்ளவன். இதுதான் மனிதனுக்கும் ஏனைய உயிரிகட்கும் உள்ள வேறுபாடு. அறிவுக்கும்  பட்டறிவிற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடையாத மனிதனாகின்றான். தனக்கென்று ஒருகருத்து நடைமுறை என்றில்லாமல் பலர் சொல்வதைக் கேட்டு ஆராய்ச்சி செய்து ஏற்புடையவற்றை ஒப்புக் கொள்வதே, சிந்திக்கும் பகுத்தறிவுடைய மனிதனுக்கு ஏற்புடையது என்பது தந்தை பெரியாரவர்களின் கருத்து; அறிவியலடிப்படையில் அமைந்த கருத்து. மனிதன் என்பதற்கே பொருள், செய்திகளைப் பார்த்து நன்மை தீமைகளை உணர்ந்து அனைத்துத் துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மையுடையவன் என்று மேலும் விளக்குவார்கள் ஐயா அவர்கள்.

மனிதன் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கைக்கு வரும் போது ஒவ்வொரு மனிதனும் குமுகாய வாழ்க்கையில் ஒருவனுக்கொருவன் உதவிசெய்து வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி வந்திருப்பானே யொழிய மற்ற மனிதனைக் கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, இன்னல்படுத்தி அதன் பயனாய்த் தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான். அப்படிக்கருதி இருந்தால் குமுக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது.

மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்லன்; அப்படி வாழவும் அவனால் முடியாது. அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். மன்பதைக்குத் தேவையான ஒவ்வொரு செயலையும் ஒவ்வொருவன் செய்கிறான். ஆகவே அவன் மன்பதையோடு வாழும் உயிரி. மன்பதைச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும். துறவியோ, பெருமகனாரோ, சாமியாரோ ஆக இல்லாதவனின் உலகநடை, மனிதாபிமானத்திற்கும் நாணயத்திற்கும் ஒழுக்கத்திற்கும் அடிமைப்பட்டே ஆகவேண்டும்.

இங்ஙனம் வாழ்நாள் முழுவதும் மன்பதைப்பணிக்கே தன்னை ஒப்படைத்துக் கொண்ட பெரியார் தம்மைப் பற்றி இவ்வாறு மனிதக் குமுகத்திற்கு அறிமுகம் செய்து கொள்கிறார்கள். “நான் ஒரு நாத்திகன் அல்லன். தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியும் அல்லன்; தேசாபிமானியும் அல்லன்; ஆனால் தீவிர சீவாதார எண்ணமுடையவன். எனக்குச் சாதி என்பதோ, சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்பெறும் உயர்வு தாழ்வுகளோ இல்லை. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன்; ஆதரிப்பவன் அல்லன்.

தமிழ்நாட்டில் சாதி சமயச் சண்டைக்கு காரணமாய் நிற்கும் எவ்வியக்கத்தையும் ஒழிக்கவேண்டும் என்று விரதம் பூண்டிருப்பவன். சுத்தமானவனா அசுத்தமானவனா என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக்காரணமாகத் தொடக்கூடாது என்பதே வருணாசிரமம். பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாம் என்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாம் என்பதும் எனது கொள்கை.

ஒவ்வொரு மனிதனும் இறந்து போவது உண்மைதான். யாக்கை நிலையாமையை வள்ளுவப் பெருந்தகையும் நமக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு (336)‘’

என்பது வள்ளுவம். “இஃது உண்மைதான் என்றாலும் அவனோடு அவன் முயற்சியும்- அவன் தொடங்கிய செயலும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பிவிட்டால்-அந்த எண்ணம் ஒருபோதும் அழியாது; அடக்கி விடவும் முடியாது” என்று கூறுவார் பெரியார். “என்னுடைய முயற்சி எல்லாம் மக்கள் எதையும் சிந்திக்கவேண்டும் என்பதுதான். அவர்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பிவிடக்கூடாது என்பது தான். இது போதுமான அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது” என்கின்றார்.

இராமகிருட்டிணபரமஃகம்சரின் கொள்கைகளை விவேகாநந்தர் பரப்பி வந்தார். அவர்கட்குப்பின் நாடு முழுதும் நிறுவப் பெற்றுள்ள இராமகிருட்டிண மடங்கள் பொறுப்பேற்றுப் பரப்பி வருகின்றன. இராமலிங்க அடிகளின் கருத்துகளை பொள்ளாச்சி வள்ளல் அறிஞர் நா. மகாலிங்கம் அவர்கள் பரப்பி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் இப்பணி நடைபெற்று வருகின்றது. இங்ஙனமே மானமிகு கி. வீரமணி அவர்கள் பெரியார் கொள்கைகளைப் பரப்பி வருகின்றார்கள். இன்று பெரியாரைப் பார்க்காதவர்கள்கூட அவர் பெயரைக் கேட்டிராத சிற்றுார்களில் கூட ஏதோ ஒருவகையில் அவர்தம் கொள்கைகளின் தாக்கம் இருந்து வருகின்றது.

பெரியார் கூறுவார்: “நரக வாழ்வாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரகவாழ்வு மட்டுமல்ல; அதைவிடப் பலகொடிய இன்னல்களை அடைய நேரும் இடமானாலும் அவ்விடத்தில நான் மனிதனாக மதிக்கப் பெறுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழிச்சாதி வாழ்வை விட சுகமான வாழ்வு என்று கருதுவேன்”

சாதி ஒழிய வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சிறுவயது முதல் சாதி ஒழிய வேண்டும் என்பதில் கருத்துக் கொண்டவன் நான். நாற்பதாண்டுக் காலமாகச் சாதி ஒழிய வேண்டும், மதம் ஒழியவேண்டும்மநுதர்ம வருணாசிரமம் ஒழிய வேண்டும்சாத்திரம் ஒழிய வேண்டும் என்று சொல்லியும் எழுதியும் வந்தவன். முப்பத்தைந்து ஆண்டுக்காலமாக பார்ப்பானும் ஒழிய வேண்டும் என்ற உண்மைக் கருத்தை நன்றாக உணர்ந்து அதற்குமுன்னைவிட இன்னும் அதிகத் தீவிரமான முறையில் பாடுபட்டுக் கொண்டுவருகின்றேன்.

எனது நாற்பதாண்டுக் கால உழைப்பின் பயன் இன்று ஒரளவுக்கும் பலன் அளித்து வருகிறது. எல்லா வாய்ப்புகளும் நன்மைகளும் ஒருசாதிக்கே ஒருசாராருக்கே என்ற நிலை மாறி எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் உண்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சாதி ஒழியவேண்டுமானால் – இந்தக் கடவுள், மதம், சாத்திரம், புராணம் ஒழியவேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். சும்மா வெறுமனே வாயால் சொல்லவில்லை. கடவுள் ஒழிய வேண்டும் என்ற நான் பிள்ளையாரைப் போட்டு நடுத்தெருவில் உடைத்தேன். இராமர் படத்தைச் செருப்பால் அடித்தேன்; தீயிட்டுக் கொளுத்தினேன். இராமாயணம், கீதை, மநுதர்மம் போன்ற சாத்திரங்களை நெருப்பில் போட்டுப் பொசுக்கினேன்; அரசாங்கம் ஒழிய வேண்டும் என்று கூறிச் சிறை சென்றேன்.

சாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல் சாதிக்காரன்மேல் வெறுப்பு என்றும், வகுப்பு வாதம் என்றும் சொல்கிறான். நான் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு பார்ப்பனச் சேரிக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனக் குஞ்சுக்காவது தீங்கு விளைவித்திருக்கிறோமோ? சாதி இருக்கக் கூடாது என்று கூறினதால் அதை வகுப்பு வெறுப்பு என்றால் என்ன நியாயம்? எனக்கு வந்த மந்திரிப் பதவி ஆளுநர் பதவி எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நாற்பது ஆண்டுகளாகக் கடவுள் சாதி ஒழிப்புக்காகப் பாடுபட்டு வருகின்றேன். இதற்கு என்னபலன் கிடைத்தது என்றால், நான் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள். அடித்து நொறுக்காமல் மரியாதை செய்கிறார்கள். காலைத் தொட்டுக் கூடக் கும்பிடுகிறார்கள்; அவ்வளவுதான். பார்ப்பான் சொல்கிறான். கடைசிக் குழவிக் கல்(சாமி) இருக்கிறவரை இந்த இராமசாமி நாயக்கனாகட்டும் வேறு எவனாகட்டும். எங்களை ஒன்றும் அசைக்க முடியாது என்று கூறும் அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது அவனுக்கு.

எங்களூர் வாய்க்காலில் நான்கு படித்துறைகள்; பார்ப்பானுக்கு ஒன்று, அவனுக்கொன்று, இவனுக்கொன்று என்று இருந்தன. அதையெல்லாம் ஒன்றாக்கினேன்.”

இந்த அளவில் தந்தை பெரியார் அவர்களைக் காட்டினேன். அவர் உள்ளத்தின் நிலையை அவர் வாக்காலேயே தெளிவாக்கினேன். இனிக் குமுகம்பற்றிய, அவர் சிந்தனைகளைப் பொருத்தமான பலதலைப்புகளில் உங்கள்முன் வைக்கின்றேன்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல்தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்

சென்னைப் பல்கலைக் கழகம்

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. திருவாசகம், சிவபுராணம் -அடி 28-31

2. தொல்காப்பியம், சொல். கிளவியாக்கம்-1




Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue