அகல் விளக்கு – மு.வரதராசனார்: 9
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 June 2021 No Commen t (அகல் விளக்கு – மு.வரதராசனார்: 8. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 4 சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் அவனுடைய தகப்பனார் சாமண்ணா வாலாசாவுக்கு வந்தார். புத்தகம் முதலியவை வாங்குவதற்குப் பணம் கொண்டு வந்திருந்தார். சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து, “எங்கள் அப்பா வந்திருக்கிறார். உன்னைப் பார்க்கணும் என்றார், வா” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். சாமண்ணா கூடத்தில் ஒரு பாயின் மேல் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், “வா’ப்பா நீயும் நான்காம் பாரம் படிக்கிறாயாமே, நல்லா படி; ஒருவருக்கொருவர் துணையாக இருங்கள்” என்றார். பக்கத்தில் உட்காரச் சொல்லி, முதுகைத் தடவிக் கொடுத்து, “கெட்ட பிள்ளைகளோடு சந்திரன் சேராதபடி பார்த்துக்கொள். பள்ளிக்கூடம் உண்டு, வீடு உண்டு என்று இருக்க வேண்டும். சினிமா , ஓட்டல் என்று அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நுழையக் கூடாது. படித்து முன்னுக்கு வரவேண்டும். சந்திரன் ஏதாவது தப்பாக நடந்தால், அத்தையிடம் சொல்லிவிடு. ...