Skip to main content

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி

      04 May 2026      



(திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ௬. தமிழ்நாடும் தமிழும் – தொடர்ச்சி)

ஐந்தாயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுமுள்ள குமரிமுனைக்குத் தென்பால் குமரிக்கண்டம் என்றோர் பெருநிலப்பரப்பு இருந்தது. அஃது எழுநூற்றுக் காவதம் பரவியிருந்தது. இன்றுள்ள சுமத்ரா, சாவா, போர்னியோ தீவுகளும் இலங்கைத் தீவும், இலக்கத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், மடகாசுகர் தீவு ஆகியவையும் குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளே!

குமரிக்கண்டம் ஐந்துமுறை கடற்கோள்களுக்கு ஆட்பட்டமையால் அழிந்து போயிற்று; அங்குதான் முதல் மாந்தன் தோன்றினான்; அங்கு வாழ்ந்த மக்கள் நான்கு திசைகளுக்கும் சென்று குடியமரத் தொடங்கினர்; அவர்கள் பேசிய மொழி தமிழ்; அவர்களுள் ஒரு பிரிவினர், வடதிசை நோக்கிச் சென்று பனிமலை வரை வாழ்ந்தனர்; அவர்கள்தாம் திரவிடர்கள் (Dravidians)  என வரலாற்றறிஞர்களால் அழைக்கப் பெற்றனர். அவர்கள்தாம் தமிழர்கள் என்பாரும் ஆவர்.

சிந்துவெளியிலுள்ள அரப்பா, மொகஞ்சதரோ, சங்குதரோ(Chanhudaro)) ஆகிய ஊர்களில் செய்த அகழ்வாராய்ச்சியின் பயனாக ஆண்டு வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்றும், அவர்கள் கையாண்ட நாகரிகம்,   தமிழ் நாகரிகம்  என்றும்  ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர். சிந்துவெளிநாகரிகம் (Indus Civilization) என்னும் நூல் படித்துத் தெளிவு பெறுக.

பல்லாண்டுகட்குப் பின்னர் மத்திய ஆசியாவினின்றும், ஆரிய இனத்தினர் (Aryans) தங்கள் ஆடுமாடுகளை மேய்க்கப் புல்வெளிகளைத் தேடிச் சிந்து ஆற்று வெளிகளை அடைந்தனர். அப்பகுதி செழிப்பாக இருந்தமையால் அங்கு நிலையாகத் தங்கினர். இதனை அறிந்து மேலும் பலர் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். சிந்துவெளியில் வாழ்ந்து வந்த திரவிடர்கட்கும் (தமிழர்), ஆடு, மாடு மேய்க்கப் போந்த ஆரியர்கட்கும், பெரும் போர் மூண்டது. திரவிடர், விந்திய மலையைக் கடந்து தென்பால் குடியேறினர். இந்தியாவின் முதன்மையமைச்சர் திரு. சவகர்லால் நேரு தன் வாழ்க்கை வரலாற்றில் பாரத, இராமாயணப் போர்கள், ஆரிய – திரவிடப் போர்களே என்று குறிப்பிட்டுள்ளமை ஈண்டுக் குறிப்பிடத் தக்கது.

ஆரியர் கூட்டம் வருகை அளவை விஞ்சியதால், விந்திய மலையைக் கடந்தும் வரத்தொடங்கினர். ஆனால், போரிடவில்லை. தாங்கள் தேவர்கள் வழிவந்தவர்கள் என்றும், தங்கள் மொழி தேவமொழியென்றும், அதனை மக்கள் யாவரும் பேசக்கூடாதென்றும், தங்கள் வேதங்கள் கடவுளால் ஆக்கப்பட்டவையென்றும், அவற்றைத் தங்களைத்தவிர, வேறு எவரும் படித்தலோ, கேட்டலோ கூடாதென்றும் கூறி, அறியாமக்களை மயக்கித் தம் வழிப்படுத்திவிட்டனர். அவற்றையெல்லாம் உண்மையென்று நம்பினர். எனவே, ஆரியர் உயர்ந்தவர்;   தாங்கள்   தாழ்ந்தவர்   என்ற  மனப்பான்மை உருவாயிற்று.  இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தம்மொழி, தம் பழக்க வழக்கங்களையும் திரவிடமக்கள்பால் திணித்துவிட்டனர். இதன் பயனாக கன்னடம், களிதெலுங்கு, கவின் மலையாளம், துளுவம் ஆகிய மொழிகள் தோன்றின.

1950 ஆம் ஆண்டு மொழிவழி மாநிலம் பிரிந்தபோது, பிறமொழியினர் பிய்த்துக் கொண்டன போக, எஞ்சிய சிறுபகுதி தமிழர்க்கு விடப்பட்டது. ஏமாளித்தமிழர் ஏற்றனர்.

தொல்காப்பியம் யாத்த காலத்தில் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகமாக’ இருந்த தமிழ்நாடு இன்று தென்சென்னை – தென்குமரிக்கு இடைப்பட்ட குறுநிலப் பகுதியாகிவிட்டது. இதிலும் கேரளத்தாரும், கன்னடத்தாரும், ஆந்திரரும் தங்களுக்கு உரிய பகுதிகள் உளவென்று குரல் கொடுக்கின்றனர். கண்ணகி கோயில் இருக்குமிடம் தங்களுக்குரியதென்று கூறி, தமிழர்களை அக்கோயிலைப் பார்க்கவிட மறுக்கின்றனர்.

தமிழர்கள் இளித்தவாயர் என்பது உலகோர் கணிப்பு.

ஆரியர் தமிழகம் போந்தமையால், தமிழ்மொழி தன் சீர் குலைந்தது, கழகங்கள் வளர்த்த கன்னித்தமிழ் களங்கமுற்றது. ஆரியர் மொழியாம் சமற்கிருதச் சொற்கள் அளவின்றித் தமிழுடன் கலந்து பேசவும், எழுதவும் முற்பட்டமையால் தமிழில் ஒரு புதிய நடை உருவாயிற்று. அதற்குப் பெயர்தான் “மணிப்பவளநடை”.

“ஆரியர் தங்கள் மொழி தேவமொழி என்றும், வடமொழியும், தமிழும் கடவுளின் இரண்டு கண்கள்” என்றும் கதைகட்டினர். பகுத்தறிவற்ற தமிழர், அவர்கள் கூற்றை நம்பித் தமிழைக் கொலை செய்துவிட்டனர்.

ஆரியர் வருகைக்கு முன் எழுதப்பெற்ற முதல், இடைக்கழகத் தமிழ்நூல்களில் வடமொழிச் சொற்களைக் காண்டலரிது. கடைக்கழக இறுதிக்காலத்தில் ஆரியர் மொழியாம் சமற்கிருதம் கலக்கத் தொடங்கியது. அதனால் தமிழ் கெடும் என்றறிந்து

           “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

            எழுத்தொடு புணர்ந்த சொல்லாக் கும்மே”

என இலக்கணம் வகுத்தார்.

வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதியவர்கள் கிரந்த எழுத்துகளையும் சேர்த்து எழுதிவந்தனர். தொல்காப்பியர் விதித்த தடையைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே, தமிழ்மொழி பேரளவு சீர் குலைந்தது.

ஆனால் கம்பரும், வில்லிபுத்தூராரும் தொல்காப்பியரைப் பின்பற்றி இராமாயணத்தையும், பாரதத்தையும் யாத்துளர்.

இன்று தமிழ்மொழியில் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி முதலிய பலமொழிச் சொற்கள் கலக்கப்பட்டும், பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றன. இப்பொழுது வெளியிடும் செய்தித்தாள்களிலும், பொத்தகங்களிலும் பலமொழிச் சொற்களும் இடம்பெறுகின்றன. தமிழ்ச்சொற்கள் அருகிவிட்டன. திரைப்படக்கதைகளில் தமிழ், கொச்சை ஆக்கப்படுகின்றன. வானொலி, வானொளி நிலயங்கள் தமிழைப் பெரிதும் கொச்சைப்படுத்துகின்றன. இவை பற்றித் தமிழர்களும், தமிழறிஞர்களும் கவலைப்படவில்லை, அவர்களும் அக்கொச்சை வழியையே பின்பற்றிப் பேசியும் எழுதியும் செல்கின்றனர்.

தமிழ்மக்கள் தம் பெயர்களைத் தமிழில் சூட்டிக் கொள்வதில்லை. வேற்று மொழிப் பெயர்களையே விரும்பிச் சூட்டுகின்றனர்.

தமிழர் நடத்தும் தொழில் நிறுவனங்களின் பெயர்களைக் கூடத் தமிழில் எழுதுவதில்லை. வேற்றுமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதி வைத்துளர்.

தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களின் பெயர்களை வேறு மொழியில் மாற்றியுள்ளனர். தமிழக அரசு “மாயூரம்” என்பதை மட்டில் “மயிலாடுதுறை” என்று மாற்றிற்று. மேலும் பல ஊர்ப்பெயர்கள் வடமொழியிலேயே வழங்கப்படுகின்றன.

சிரீபெரும்புதூர், சிரீமுட்டிணம், சிரீவில்லிபுத்தூர், சிரீரங்கம், வேதாரண்யம், இலால்குடி, விருத்தாசலம், கோபாலசமுத்திரம், சாமிமலை, கிருட்டிணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருநாகேசுவரம், பட்டீசுவரம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், பாலக்குடிணபுரம், இராசா அண்ணாமலைபுரம், விசயபுரம், வைத்தீசுவரன்கோயில், ரெங்கநாதபுரம், விருதுநகர், சிவகெங்கை, இராமநாதபுரம், இராமேசுவரம், கபிசுதலம் முதலியன குறிப்பிடத்தக்கவை.  தமிழர் வழிபடும் தெய்வம், கடவுள் பெயர்களாயினும், தமிழில் உண்டா? ஏன்? பூசை செய்யும் மொழியாவது தமிழில் உண்டோ?

எனவே, இன்று தமிழின் தூய்மை கெட்டு, பண்பு கெட்டு, பான்மை கெட்டு அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தெருத்தொறும் மழலையர் ஆங்கிலப்பள்ளிகள், இந்திப்பள்ளிகள், மக்கள் மொழி இயக்கங்கள் தோன்றித் தமிழழிப்பு செய்கின்றன. தமிழ்நாட்டிற்கு வேதாகமக்கல்லூரி தமிழ்ப்பண்பாடழிக்கவும், நவோதயா பள்ளிகள் இந்தியைத் திணிக்கவும் வருகின்றன. காரணம், தமிழர்க்குத் தமிழுணர்வு மழுங்கிப் போய்விட்டது.

வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் இந்தி பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழக அரசு அலுவலகங்களில் எல்லா நடைமுறைகளும் ஆங்கிலமாகவே உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசு அலுவலகங்கள் எல்லாம் இந்தியிலும், ஆங்கிலத்திலுமே நடக்கின்றன. நடுவணரசுப் பணிகளுக்கு அமர்த்தம் செய்யப் பெறும் அனைவர்க்கும் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மக்கள் விரும்பும் வரையில் இந்தியைத் திணிக்கமாட்டோமென்று சொல்லப்படுகிறது. ஆனால், சட்டமாக்கவில்லை.  தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் பாடம் பயிற்றும் மொழி ஆங்கிலமே! தமிழில் பயில ஒருவரும் முன்வந்திலர். பணங்கொடுத்தாலும் வருவாரிலர். என்னே! தமிழரின் தாய்மொழிப்பற்று.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்