கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்
(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3
ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் குற்றமன்றோ?
இராசீவு காந்தியின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று.
இதனை முன்வைத்து இலங்கை அரசும் இதுதான் நல்வாய்ப்பென்று ஈழத்தமிழர்க்கு எதிர்ப்பாகக் குரல் கொடுப்பதுடன் விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தியும், ஏளனமாகவும் பேசி ஒலிபரப்புகிறது.
தமிழகத் தமிழர்க்கு விடுதலை பெற விடுதலைப்புலிகள் உதவக்கூடும் என்னும் ஐயத்தால் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகட்குத் தடை விதிக்கவேண்டுமென்று, இந்திரா பேராயத்தினர் முயல்கின்றனர். புலிகளை அறவே ஒழிக்க வேண்டுமென்று பாடுபடுகின்றனர்.
தேசப்பிதாவைச் சுட்டுக் கொன்ற இயக்கத்திற்குத் தடைபோட்டதா?:
1948 – ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மோகனதாசு கரம்சந்த் காந்தியை வழிபாட்டு (பிராhர்த்தனை)க் கூட்டத்தில் நேரே போய் வணங்குவது போலச் சுடுகுழலால் சுட்டுக் குருதிவெள்ளத்தில் புரளச் செய்த நாத்து ராம்விநாயக் கோட்சே சேர்ந்திருந்த இயக்கத்தை (சுயளாவசலைய ளுறயலயஅ ளுநஎய ளுயபெயஅ) இந்திய அரசு தடைசெய்ததா? அதைச் சார்ந்தவர்களையும், காந்தியார் கொலைக்குக் காரணமானவர்களையும் தேடிப்பிடித்துச் சிறையிலிட்டதா?
இந்திய முதன்மையமைச்சராயிருந்த இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற சிங்கின் அகாலித்தல் கட்சியைத் தடைசெய்ததா? அக்கொலைக்குச் சார்பாயிருந்தவர்களை எல்லாம் சிறையிலிட்டதா?
இப்பொழுது இராசீவு காந்தி கொலைக்கு மட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களை எல்லாம் ஐயப்பட்டுச் சிறையிலடைப்பது முறையா? சார்பாகப் பேசுகிறவர்கள் யாவரும் குற்றவாளிகளா?
ஈழத்தமிழினம் படும் துன்பங்கண்டு இரக்கப்பட்டுத் தமிழ் இனம் உதவுவது குற்றமா? துன்பங்கண்டு இரங்குவது மாந்தப் பண்பல்லாவா? மரத்துப் போன தமிழர்க்குக் கவலையில்லை!
குமரிமுனையில் ஒரு பார்ப்பனர்க்குத் தேள் கொட்டினால் காசுமீர் பார்ப்பனர்க்கு அண்டை கட்டுகிறது. ஈழத்தமிழினம் உரிமைக்குப் போராடும் போழ்து அதற்கு மற்றொரு தமிழினம் இரக்கப்படுவது எங்ஙனம் குற்றமாகும்? இரக்கப்படும் தமிழர்களைச் சிறையில் அடைப்பது என்ன முறையோ?
தன்மானமற்ற அடிமைத் தமிழர்?
பண்டைக்காலத் தமிழர் மானங்காக்கப் பாடுபட்டனர். இற்றைத் தமிழர் பணங்காக்க, பதவி காக்கப் பாடுபடுகின்றனர். பணம் பெறவும், பதவி பெறவும் எதுவும் செய்யும் இயல்பினர்.
பண்டைக் கதைகளில் காணப்படும் விபீடணன், சுக்ரீவன் அநுமான், எட்டப்பன், குடிலன் போன்ற தமிழர் பலர் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அதனால்தான் வடநாட்டார்க்கு அடிமையாக வாழ்கின்றனர். அடிமைகளாக இருந்து ஆட்சிபுரிவதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதற்கு ஆவன செய்கின்றனர்.
தமிழக அரசுக்கு எத்தகு உரிமையுமில்லை. தில்லியரசு விருப்பப்படிதான் ஆட்சி செய்தல் வேண்டும். முரண்பட்டால் பதவியிறக்கம் செய்யப்படுவர். கண்காணிக்கவே ஓர் ஆளுநர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அமர்த்தப் பெற்றுளர். தமிழக அரசு மூன்றுமுறை கலைக்கப்பட்டது. நாம் (தமிழர்) வடவர்க்கு அடிமை என்பதற்கு எடுத்துக்காட்டாகும். விடுதலை ‘இந்தி’ யர்க்கே!
பண்டைப் பனுவல்களில் கூறப்படும், மறம், மானம் இன்று வாழும் தமிழர்க்கு இல்லாமல் போனமை ஏனோ? தமிழக அரசுக்குத் தானே எதையும் செய்ய உரிமையில்லை. இந்திய நடுவணரசைக் கேட்டுத்தான் செய்தல் வேண்டும். வடவர் கைப்பாவை போல இயங்கத்தான் தமிழக அரசுக்கு உரிமையுண்டு. தனக்கென அதிகாரம் ஏதுமில்லை. அடிமை ஆட்சி!
தமிழ் மொழிக்கு நெருக்கடி. தமிழ்ப்பண்பாட்டிற்கு நெருக்கடி, தமிழ் வரலாற்றுக்கு நெருக்கடி, தமிழ்; மக்களுக்கு நெருக்கடி, இவற்றைப் போக்க எவரும் முற்படவில்லை. இன்றைய பொருளியல் நெருக்கடியால் ஏழை மக்கள் படும்பாட்டைப் போக்க எந்த அரசும் முனையவில்லை.
காவிரிநீர்ச் சிக்கல் தீர்ந்தபாடில்லை. கருநாடகத் தமிழர்க்குக் கருநாடக அரசும், மக்களும் செய்த அட்டூழியங்களைக் கேட்பாரிலர். தமிழகக் கனிமங்களை எல்லாம் வடவர் கவர்ந்து செல்வதைப் பற்றிக் கவலைப்படுவாரிலர். பெரும் வருவாயுள்ள அஞ்சல்துறை, இருப்பூர்தித் துறை, சுங்கத்துறை, வருமானவரித்துறை, வாழ்நாள் காப்பீட்டுத்துறை முதலிய மிகைவருவாய் வரும் துறைகள் யாவும் நடுவணரசே வைத்துக் கொண்டு தமிழக அரசுக்குப் பிச்சை போடுகிறது. அதை வாங்கித் தின்பதில் மகிழ்கிறது தமிழக அரசு. விடுதலைவிழா ஆண்டுதோறும் கொண்டாடும் நடுவணரசு மாநிலங்களை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டு பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்படும் மானமிழந்த தமிழர்களை அமர்த்தி, ஒற்றுமை; ஒருமைப்பாடு; ஒன்று நம் சிந்தனை; நாட்டுக்காக எனப் பேசச் செய்கிறது.
பாரதி பிதற்றிய பாடல்களையும், பிற தேசியப் பாடல்களையும் பாடச்செய்து மக்களை வயப்படுத்துகிறது. கூலிப் படைகளை ஏவி, தேசிய ஒருமைப்பாடு பற்றி நடிக்கச் செய்கிறது. தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும், தேசிய ஒருமைப்பாடு பற்றி வகுப்புகள் நடத்திச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்கிறது. நாம் இந்தியர் என்கிறது!
மக்களின் வறுமை போக்க எம்முயற்சியும் செய்யாது முன்காலத்தலைவர்கள் தேச விடுதலைக்கும், ஒற்றுமைக்கும் செய்த தொண்டுகளை நாள்தோறும் சொல்லி ஏழை மக்களைத் தம் கட்டுப்பட்டிற்குள் வைத்துக் கொள்ள முயல்கிறது இந்திய அரசு. வலிவுள்ள இந்தியாவை உருவாக்கப் பாடாற்றுகிறது.
வெள்ளிக்கிழமைதோறும் “காந்தி அஞ்சலி” என்றொரு நிகழ்ச்சியை வானொலியில் நடத்தி மக்களைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. காந்தியின் இராம பசனை செய்கிறது! ஆனால் இது நீடிக்காது! பஞ்சாப், சம்மு காசுமீர், அசாம் முதலிய மாநிலங்களில் தோன்றியுள்ள விடுதலையுணர்வு நாளடைவில் இந்தியா முழுவதும் பரவி பெரும்போர் தோன்றி மாநிலங்கள் தன்னாட்சியுரிமை பெற்றே தீரும் என்பது உறுதி! தமிழ்நாடு மட்டில் அநுமான் போல வடவர்க்குப் பாதந்தாங்கினாலும் வியப்பில்லை!
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment