Skip to main content

கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்



(க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி)

இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர் மறவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவர்.


தன்மானமுள்ள தமிழ் இளைஞர், ஆண், பெண் இருபாலரையும் திரட்டி விடுதலைப் புலிகள் படை உருவாக்கி, தமிழ் ஈழம் தனியாட்சி பெறப் போராடத் தொடங்கினார். தமிழ்மக்கள் பல்லாயிரவர் சிறீலங்காப் படைகளால் கொல்லப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும் தளராது போரிட்டு 1990 – களில் யாழ்ப்பாணத் தீவுக்குறையை (peninsula) தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர். இலங்கை, சிங்கள அரசு, பலவகைத் தடைகளைப் போட்டது. பாதுகாப்புப்படை அமைத்துப் பலரைக் கொன்றும், சிறையிலிட்டும் இடர்விளைத்தது. ஆயினும், அஞ்சாது போராடி யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் தங்கள் ஆட்சியில் கீழ் வைத்துளது. சிறீலங்கா ஆட்சி சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்கா கைக்கு மாறியபின் விடுதலைப்புலிகளுடன் கலந்துரையாடி ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்குத் தீர்வு காண முற்பட்டுள்ளார். மூன்று சுற்றுப் பேச்சு முடிந்து நான்காம் சுற்றுப் பேச்சுக்கும் அணியமாகிவருகின்றனர்.
ஏழு இலக்கம் தமிழர் வாழும் யாழ்ப்பாணத்;தைத் தனிமாநிலமாக ஆள்கின்றனர். பாராட்டுகிறோம்.
ஆனால், ஐந்துகோடி தமிழர் வாழும் தமிழ்நாடு வடவர்க்கு அடிமையாயிருப்பது எம்போன்ற விடுதலைவிரும்பிகட்கு மானக் கேடாயிருக்கிறது.
சிலர் சொல்லலாம் நாம்தாம் விடுதலை பெற்றுவிட்டோமே என்று. என்ன விடுதலை?
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை! வடவர்க்கு அதாவது இந்தியர்க்கு அடிமை!
ஏனெனில், தமிழக ஆட்சி மூன்று முறை கலைக்கப்பட்டதை நினைவுகூர்க. இதற்குப் பெயர்தான் விடுதலை. வடவர் உனக்குப் பதவி கொடுத்து வயப்படுத்திவிட்டனர். உன் பண்டைய வீரம் மருந்துக் கடைக்குப் போய்விட்டதா? உன் மானம் மழுங்கிவிட்டதா? உன் உடல் நரம்புகளின் வழி, பாய்வது தமிழ்க்குருதியா? சாய்க்கடைநீரா? நீ பிறப்பது ஒருமுறைதான். இறப்பதுவும் ஒருமுறைதான். நல்ல கருமியத்திற்காக இறப்பதே மேல். மானங்கெடவரின் வாழாமை தானே தமிழர் மரபு? விடுதலை பெற ஈழத்தமிழரைப் பார்த்தாவது போராடப் புறப்படு! ஏமாளித்தமிழா! ஈழத்தமிழரைப் பாரடா!

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்