Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26

அகரமுதல




(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’

  சங்கம் தோன்றித் தமிழ் வளர்த்த வரலாற்றை அறிஞர் வையாபுரிப் பிள்ளையும் ஏற்றுக் கொள்கின்றார். சங்கம் தோன்றிய பின்னர், புதிதாக இயற்றப்படும் நூல்கள் சங்கப் புலவர் முன்னிலையில் அரங்கேற்றப்படுதல் வேண்டும் என்ற ஒரு விதியுமிருந்தது என்பதை யாவரும் அறிவர். சங்கம் தோன்றுவதற்கு முன்னர் புதிய நூல்கள் அரசர் கூட்டும் அவையில் அரங்கேற்றப்பட்டன. தொல்காப்பியம் நிலந்தரு திருவின் நெடியோன் அவையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.1 ஆதலின்  தொல்காப்பியம் சங்க காலத்திற்கு முற்பட்டதாகும் என்று தெளியலாம். ஆதலின் தொல்காப்பியர்

++

1. பனம்பாரனார் பாயிரம்.

++

வாழ்ந்த காலம் சங்கம் தோன்றுவதற்கு முந்தியதும், ஆரியர் தமிழகத்தில் குடியேறியதும், நிலம்தரு திருவின் நெடியோன் பாண்டி நாட்டை ஆண்டதும், மூவேந்தர்களும் சிறப்புற ஆட்சி புரிந்து கொண்டிருந்ததும் ஆகிய ஒரு காலமாகும் என்றறிதல் அகச் சான்றுகட்கும் புறச்சான்றுகட்கும் ஒத்ததாகும்.2 அக்காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாமென்பது என் கருத்து.

   இக் காலத்திலேயே தமிழ் மொழி வரையறுத்த இலக்கண நூல்களைப்பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்தால்  தெளியக்கிடக்கும் செய்தியாகும். வரையறுத்த இலக்கணங்களைப் பெற்றுள்ள மொழிதான், வலிய கரைகட்கு இடையே செல்லும் பேராற்றைப்போல் ஒழுங்குற இயங்கும். இன்று உலகத்தவரால் போற்றப்பட்டுப் பயிலப்பட்டு வரும்  ஆங்கில மொழி, நூற்றாண்டு தோறும்  மாற்றமுற்று வந்துள்ளமை அதற்கென வரை

யறுத்த இலக்கணத்தைப் பதினெட்டாம் நூற்றாண்டு வரை அது பெற்றிராமையால்தான்.3 ஆங்கில மொழியில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலக்கணநூல்கள் தோன்றின. ஆனால் அவை வழக்கொடு முரண்பட்டுப் பயில்வார்க்கு இடர்விளைத்தனவாம். பின்னர்தான் நூல் வழக்கு உலக வழக்கு ஆகியவற்றைத் தழுவி இலக்கண நெறி செல்ல வேண்டும் என்று முடிவு கட்டினராம். இங்கிலாந்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கில மொழிக்கு நிகழ்ந்தது, தமிழ் மொழிக்குத் தமிழ்நாட்டில் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.

       

        வடவேங்கடம் தென்குமரி

        வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

        எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

        செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

        முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணித்

(தொல்பாயிரம்)

++

2 .  தொல்காப்பிய ஆராய்ச்சி (எனது நூலிற்) காண்க.

3.   A History of English Languages : Page 314

 தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் யாத்தார். தமிழின் முதல் இலக்கணம் தொல்காப்பியந்தான் என்று கருதிவிடுதல் கூடாது. செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் என்று கூறப்படுவது தமிழ்நாட்டில் தமிழில் இயற்றப்பட்டிருந்த இலக்கண நூல்கள் பற்றியே யாகும். தொல்காப்பியர் முந்தையோர் கருத்துகளை எடுத்தாளும் போதெல்லாம் என்ப, என்மனார் என்று கூறுவதை இயல்பாகக் கொண்டுள்ளார். நூல் முழுவதும் நோக்குமிடத்து இருநூற்று எண்பத்தேழு (287) இடங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதை அறியலாகும். ஆதலின் தமிழ்மொழியில் வரையறுத்த இலக்கணங்கள் தோன்றியகாலம் தொல்காப்பியத்திற்கு  முற்பட்ட பன்னூறு ஆண்டுகளில் இருக்கக் கூடும். ஆகவே, தமிழ்மொழியில் இலக்கியங்கள் தோன்றிய காலமும் எழுத்துத் தோன்றிய காலமும் வரையறுத்துக் கூற முடியாத தொன்மையை உடையன என்று உணரலாம்.

 தொல்காப்பியர் காலத்தில் இலக்கண நூல்கள் பல இருந்தனவென்று தொல்காப்பியத்தாலேயே அறிகின்றோம். அங்ஙனமிருக்கத் தொல்காப்பியரும் புதியதொரு நூல் இயற்றப் புகுந்தது எற்றுக்கு என்று சிலர் கருதலாம். மக்களால் பயன்படுத்தப்படுகின்ற மொழி மாறிக்கொண்டேதான் இருக்கும். இம் மாற்றமே அதன் உயிர்த் தன்மையை அறிவிப்பதாகும். மாற்றமற்ற மொழி உயிரற்ற மொழியாகும். தமிழ் உயிருள்ள வழக்கு மொழி. பண்பட்ட இலக்கணத்தைப் பெற்று வரையறுத்த நெறிகளில் மக்கள் மொழியைப் பயன்படுத்திய போதிலும், மக்கள் அறிதலின்றியே மாற்றங்கள் சில, மொழிப் போக்கில் உண்டாகிவிடுதல் இயல்பு. மொழிநூலறிஞர்கள் இம் மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப இலக்கண விதிகளை இயம்புதலை மேற்கொள்வர்.

  தொல்காப்பியர் புலமைசால் மொழிநூலறிஞர் ஆதலின்,  தமிழ்மொழியில் தாம் கண்ட புதிய இயல்புகளை முன்னோர் நூல்கள் மொழிந்தவற்றோடு கூட்டிப் புதியதோர் இலக்கண நூலை யாத்துத் தந்துள்ளார். இதனாலும் தமிழின் தொன்மையை அறியலாகும். பண்பட்ட இலக்கணம் பெற்றிராத மொழிகள் விரைந்து மாறும் இயல்பின. இலக்கணம் பெற்றுள மொழிகளில் மாற்றங்கள் தோன்ற பல நூற்றாண்டுகள் செல்லவேண்டும். தமிழோ பண்பட்ட இலக்கணத்தைத் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பும் பெற்றிருந்தது என்று அறிந்தோம். பண்பட்ட இலக்கணத்தைப் பெற்ற தமிழில் மாற்றங்களும் விரைந்து நிகழ்ந்திரா. தொல்காப்பியர் காலத்தில் தமிழில் மாற்றங்கள் காணப்பட்டனவென்றால் அவர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழ் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது தெளிவு.

   சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்

   முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே

எனும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளைக் கூற்றையும் உன்னுக.

  தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இலக்கியங்கள் பலவும் இலக்கணங்கள் பலவும் தோன்றியிருந்தன. அவற்றின் துணையால் தொல்காப்பியர் தம் நூலை இயற்றினார். பழந்தமிழ் இலக்கியங்களால்தாம் பழந்தமிழ் நிலையை அறிதல் கூடும். (The language of a past time is known by the quality of its literature. A History of English Literaure – Page 76.) நாமும் பழந்தமிழ் நூல்களால் பழந்தமிழ் நிலையை அறிய முயலுவோம்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue