Skip to main content

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22

 அகரமுதல






(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 21. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22

4. குலமும் கோவும் தொடர்ச்சி

அதியர்

    தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.12 அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர் கோமான் என்றும் வழங்கப்பெற்றான். ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ் நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தைச் சார்ந்த தலைவருள் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான்.13 அவனது நாட்டின் தலைநர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும். அவ்வூருக்கு ஐந்து கல் தூரத்தில் அதமன் கோட்டை என்னும் பெயருடைய ஊர் அமைந்திருக்கின்றது. முன்னாளில் அங்கிருந்த கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும்.14 அக் கோட்டை அதியமானால் கட்டப்பட்டது போலும்! அதியமான் கோட்டை என்பது அதமன் கோட்டையென மருவியிருத்தல் கூடும். இன்னும், சேலம் நாட்டிலுள்ள அதிகப்பாடியும், செங்கற்பட்டிலுள்ள அதிகமான் நல்லூரும் அவ்வரசனோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

ஆவியர்

   ஆவியர் குலம் மற்றொரு தமிழ்க் குலம். அக் குலத்தார் பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். அவர் தலைவன் ஆவியர் கோமான் என்று பெயர் பெற்றான். கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் என்பவன் அக்குலத் தலைவருள் ஒருவன்.  வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சங்க இலக்கியம் அவனை குறிக்கின்றது.15 அம் மன்னன் அரசாண்ட ஊர் வைகாவூர் என்றும், வையாபுரி என்றும் வழங்கிற்று. முருகனுக்குரிய படைவீடுகளுள் ஒன்றாகிய ஆவிநன்குடி என்னும் பதி ஆவியர் குடியிருப்பேயாகும். திரு ஆவிநன் குடி என்பது பழனியின் பெயர்.

ஓவியர்

     ஆவியரைப் போலவே ஓவியர் என்னும் வகுப்பாரும் இந்நாட்டில் இருந்தனர். சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக்கோடன் என்னும் சிற்றரசன் அவ்வகுப்பைச் சேர்ந்தவன், அவன் ஆட்சி புரிந்த நாடு ஓய்மா நாடு என்று சாசனங்களில் குறிக்கப்படுகின்றது. ஓவியர் பெருமானாகிய குறுநில மன்னனால் நெடுங்காலம் ஆளப்பட்ட நாடு ஓவிய வர்மான் நாடு என்று பெயர் பெற்றுப் பின்னர் ஓய்மான் நாடென்று சிதைந்திருத்தல் கூடும். திண்டிவனம், கிடங்கில், வயிரபுரம் முதலிய ஊர்கள் அந் நாட்டைச் சேர்ந்தனவாகும்.16

வேளிர்

     இன்னும், வேளிர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பார் முன்னாளில் சிறந்து விளங்கினர். அக்குலத் தலைவர்கள் சோழகுல மன்னரோடு உறவு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தாரில் ஒரு வகையார் இருக்குவேளிர் எனப் பெயர் பெற்று, புதுக்கோட்டை நாட்டிலுள்ள கொடும்பாளூர் முதலிய இடங்களில் வாழ்ந்து வந்தனர். அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய கணம்புல்லர் என்பவர் இருக்கு வேளூரிற் பிறந்தவர் என்று திருத்தொண்டர் புராணம் குறிக்கின்றது. இன்னும் சோழ நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதியொன்று புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றிருக்கிறது.17 இவ்வூர்ப் பெயர்கள் இருக்கு வேளிரொடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

குறுக்கையர்

      வேளாளர் குலத்தைச் சேர்ந்த பழங்குடிகளுள் ஒன்று குறுக்கையர் குடியாகும். திருநாவுக்கரசர் அக்குடியைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் பாட்டால் விளங்குகின்றது,18 இக் குடியினர் பெயரால் அமைந்த ஊர்கள் சோழநாட்டிற் பலவாகும். அவற்றுள் மாயவரம் வட்டத்தில் அமைந்த குறுக்கை, பாடல் பெற்றுள்ளதாகும். அங்குள்ள வீரட்டானத் திறைவனை,

       “சாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த

       கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே

என்று போற்றினார் திருநாவுக்கரசர். இன்னும் சில குறுக்கைகள் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளன. திருப்பிடவூர் நாட்டுக் குறுக்கை இப்பொழுது நாட்டுக் குறுக்கையென்னும் பெயரோடு திருச்சி நாட்டு லால்குடி வட்டத்திலுள்ளது.

திருநறையூர் நாட்டுக் குறுக்கை என்று சாசனத்திற் கூறப்படுவது கொறுக்கை என்னும் பெயர் கொண்டு கும்பகோண வட்டத்தில் காணப்படுகின்றது.19

                   முடி மன்னர் குடி

சோழர்

     முடியுடை மன்னராய்த் தமிழ் நாட்டில் அரசு புரிந்தவர் சேர சோழ பாண்டியர் ஆவர். அன்னார் நினைப்புக்கு எட்டாத பழங்காலந் தொட்டுத் தமிழ் நாட்டை ஆண்டு வந்தார்கள். சோழர் குடி பல சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தது. செம்பியன், வளவன், சென்னி முதலிய பெயர்கள் அவற்றுள் சிறந்தனவாம்.20 செங்கற்பட்டிலுள்ள செம்பியம், வடஆர்க்காட்டில் உள்ள செம்பிய மங்கலம், தஞ்சை நாட்டிலுள்ள செம்பிய நல்லூர், பாண்டி நாட்டிலுள்ள செம்பிய னேந்தல் முதலிய ஊர்கள் செம்பியன் பெயரைத் தாங்கி நிற்கின்றன. தஞ்சை நாட்டிலுள்ள செம்பங்குடி என்பது செம்பியன் குடியாக இருத்தல் கூடும். இனி, தென் ஆர்க்காட்டு வளவனூர், வட ஆர்க்காட்டு வளையாத்தூர் என்னும் வளவன் ஊற்றூர்,21 தஞ்சை நாட்டிலுள்ள வளவ நல்லூர், செங்கற்பட்டிலுள்ள வளவன் தாங்கல் முதலிய ஊர்களின் பெயரில் வளவன் என்னும் சொல் காணப்படுகின்றது. இன்னும், தஞ்சை நாட்டில் சென்னி வனம், சென்னிய நல்லூர், சென்னிய விடுதி என்னும் ஊர்கள் உள்ளன.

பாண்டியர்

       தமிழகத்திலுள்ள தென்னாட்டை யாண்ட பாண்டி மன்னர்க்குத் தென்னவன், மாறன், செழியன் முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு.22 அவை யாவும் ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. தென்னாட்டிலுள்ள தென்னன்குடி, தென்னன்பட்டி, தென்னவனல்லூர், தென்னவனாடு முதலிய ஊர்கள் தென்னவனோடு தொடர்புடையன என்பது தேற்றம். மாறன் என்னும் பெயரை மாறனேரி, மாற மங்கலம், மாறனூத்து முதலிய ஊர்ப் பெயர்களிலே காணலாம். நெல்லை நாட்டிலுள்ள செழியனல்லூர் முதலிய ஊர்களின் பெயர்களில் செழியன் என்னும் சிறப்புப் பெயர் விளங்குகின்றது .

பாண்டி நாட்டு மன்னர்

பூதப்பாண்டியன்

      பழந்தமிழ் நூல்களில் பூதப்பாண்டியன் என்ற பெயருடைய மன்னன் பெருமை பேசப்பட்டுள்ளது. ஒல்லையூரில் மாற்றாரை வென்று புகழ் பெற்ற அம்மன்னனை ‘ஒல்லையூர் கந்த பூதப்பாண்டியன்’ என்று நல்லிசைப் புலவர்கள் பாராட்டினார்கள்.23 நாஞ்சில் நாடு என்னும் தென் திருவாங்கூர் தேசத்திலுள்ள பூதப்பாண்டி என்ற ஊர் அவன் பெயரால் அமைந்ததென்று கருதலாகும்.


(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

12. அதியர் மழவர் இனத்தினர் என்பர்.

13. இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

14. இப்பொழுது தர்மபுரி என வழங்கும் தகடூருக்குத் தென்கிழக்கேயுள்ள அதமன் கோட்டையின் தற்கால நிலைமையை Sewell’s Antiquities என்ற நூலிற் காண்க.

15. பேகனை ஆவியர்கோ என்று புறநானூறும் -147. ஆவியர் பெருமகன் என்று சிறுபாணாற்றுப் படையும் – 86 குறிக்கும்.

16. I.M.P., p 183.

17. புள்ளிருக்கு வேளூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கும். சடாயு என்ற புள்ளும் (பறவை), இருக்கு வேதமும், முருக வேளும் வழிபட்ட காரணத்தால் அப்பெயர் வந்ததென்று புராணம் கூறும்.

18. “வேளாண் குலத்தின்கண் வரும் பெருமைக் குறுக்கையர்தம் குடி விளங்கும்” – திருநாவுக்கரசர் புராணம்.15.

19. M.E.R. 1926, 265; 1927, 316.

20. “சென்னி வளவன் செம்பியன் கிள்ளி………………… சோழன் பெயரே” – பிங்கல நிகண்டு.

21. வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்திலுள்ள வளையாத்தூர், வளவன் ஆற்றூரே என்பது சாசனத்தால் விளங்கும். M.E.R. 1933-34. 

22.   “செழியன் கூடற் கோமான் தென்னவன்

     வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்

     ……………………………………

     குமரிச் சேர்ப்பன் கோப்பாண் டியனே”

     – பிங்கல நிகண்டு.

23, மாற்றாரை வென்று வருவதாக இவன் கூறிய வஞ்சினம் புறநானூறு 71-ஆம் பாட்டில் காணப்படும்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue