Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 71

 அகரமுதல





(குறிஞ்சி மலர்  70 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம் 25
 தொடர்ச்சி

இவரைக் காண வேண்டும் என்று நேற்றும் அதற்கு முன் தினங்களிலும் எவ்வளவு ஏங்கிக் கொண்டிருந்தேன். எவ்வளவு தாகமும் தாபமும் கொண்டிருந்தேன். பார்த்த பின்பும் அவற்றை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பும், அறிவும், மனம் கலந்து அன்பு செலுத்துவதற்குப் பெரிய தடைகளா! இவரிடம் என் அன்பையெல்லாம் கொட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏதேதோ அறிவுரை கூறுவது போல் பேசிவிட்டேன். எனக்கு எத்தனையோ அசட்டு இலட்சியக் கனவுகள் சிறு வயதிலிருந்து உண்டாகின்றன. அதை இவரிடம் சொல்லி இவருடைய மனம் தாழ்வு உணர்ச்சி கொள்ளும்படி செய்து விட்டேனே? இவர் என்னைப் பற்றி இன்று என்னென்ன நினைத்திருப்பாரோ? என்னைப் பற்றி அழகு அழகாகக் கவிதை எழுதினாரே? அதைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் சொல்லக்கூடத் தோன்றாமல் போய்விட்டதே. சே! சே! அன்பு வெள்ளமாக நெகிழ்ந்துவிடத் தெரிய வேண்டாமோ இந்த உள்ளத்துக்கு? அன்று தலை நிறையப் பூவும், கைகள் நிறைய வளையல்களும், மனம் நிறைய இவரைப் பற்றிய தாகமுமாக நிலைக்கண்ணாடிக்கு முன்னால் பித்துப் பிடித்தவள் போல் வீற்றிருந்தேனே! அந்த ஏக்கம், அந்த நெகிழ்ச்சி இன்று இவரருகில் நெருங்கி உட்கார்ந்திருந்த போது, உரையாடினபோது எங்கே போனது? பக்திக்கும் காதலுக்கும் அகங்காரம் இருக்கலாகாது என்று பெரியவர்கள் சொல்லியிருப்பது எத்தனை உண்மை! என்னுடைய அகங்காரத்தைக் குத்திக் காட்டும் நோக்கத்தோடுதான் ‘உயரத்தில் ஏறிச் செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே தங்கிவிடுவேன்’ என்றாரா? அல்லது வேடிக்கையாகச் சொன்னாரா? பரமஃகம்சருடைய கதையையும், என்னுடைய இலட்சியக் கனவுகளையும் உண்மையாகவே மனம் உருகித்தான் இன்று இவரிடம் கூறினேன். இவர் என்னிடம் கலகலப்பாகப் பேச முடியாமல் போனதற்கு என்னுடைய இந்த அதிகப் பிரசங்கித்தனமும் ஒரு காரணமோ? குறும்புப் பேச்சும் சிரிப்புமாக மனம் விட்டுப் பழகும் இவர், இன்று நான் இவற்றையெல்லாம் கூறியபின் எதையோ குறைத்துக் கொண்டு ஏதோ ஓர் அளவோடு பழகுவது போல் அல்லவா தெரிகிறது?

அவள் மனத்தின் சிந்தனைத் தவிப்புத் தாங்கமுடியாத எல்லையைத் தொட்டது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருவரும் வழிப்போக்கர் போல் நடந்து செல்வது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அந்த அவசியமற்ற மௌனத்தை அவளே துணிந்து கலைத்தாள். “இன்று உங்களுக்கு என்ன வந்துவிட்டது. ஒன்றும் பேசாமல் வருகிறீர்கள்? என் மேல் எதுவும் வருத்தமோ?”

இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். அவன் எப்போதும் இப்படிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் அவள் உள்ளம் தவித்தது.

“நன்றாயிருக்கிறதே கதை! நீ ஏதோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு வருவதுபோல் தோன்றியது. அதனால்தான் பேசவில்லையே தவிரப் பேசாமலே நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நான் ஒன்றும் தீர்மானம் செய்து கொள்ளவில்லையே?”

‘பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன் காட்டி நகைக்கின்றாய்’ என்று அவளுடைய சிரிப்புக்கு, இலக்கணம் வகுத்துச் சொன்னாற்போல் அரவிந்தன் பாடினானே, மெய்ப்பிப்பது போல் நகைத்தாள் பூரணி.

“அனுப்பியிருந்த புத்தகங்களையெல்லாம் படித்தாயா பூரணி?”

“எல்லாவற்றையும் மனந்தோய்ந்து அனுபவித்துப் படித்தேன். இந்த மலைப்பிரதேசத்துச் சூழ்நிலையே படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் அதிகமாக சுறுசுறுப்பை அளிக்கிறது.”

வானம் நன்றாக இருண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூற்றல் விழுந்தது. இருவரும் வேகமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே மீனாட்சிசுந்தரம் பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய வண்டி முன்புறம் நின்று கொண்டிருந்ததிலிருந்தே அதைத் தெரிந்து கொண்டார்கள். மங்களேசுவரி அம்மாள் முதலியவர்களும் ஏரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தார்கள். அன்று இரவும், மறுநாளும் அவர்கள் சேர்ந்து பேசி முடிவாகச் சில தீர்மானங்களைச் செய்து கொண்டார்கள். நீண்ட நேர விவாதத்துக்கும் மறுப்புகளுக்கும் பிறகு பூரணி தேர்தலில் நிற்பதற்குச் சம்மதம் அளிக்க வேண்டியதாயிற்று. அரவிந்தனே தன்னை வற்புறுத்தி வேண்டிக் கொள்ளும்படியான சூழ்நிலை ஏற்பட்ட போது அவளால் தட்டிக் கழிக்க முடியவில்லை. அவள் நிற்க மறுத்துவிட்டால் பருமாக்காரருடைய கெடுபிடிகளுக்கும், மிரட்டலுக்கும் பயந்துவிட்டதாக ஆகும் என்பதையும் அரவிந்தன் முன்பே குறிப்பாக அவளுக்குச் சொல்லியிருந்தான். எப்படியோ தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியான சூழ்நிலை அவளை அந்தப் பொறியில் மாட்டி வைத்துவிட்டது.

கூச்சத்தோடு நழுவ முயன்ற முருகானந்தத்தை இழுத்து வந்து, “இவன் தான் அம்மா உங்க மாப்பிள்ளை! சந்தேகமிருந்தால் உங்கள் பெண்ணையே ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்” என்று அரவிந்தன் கூறியபோது வசந்தா சிரிப்பும் நாணமும் நிறைந்த முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டு உள்ளே எழுந்து ஓடிவிட்டாள். திடீரென்று ஆரம்பமாகிய அந்த நாடகத்தைக் கண்டு திணறி வெட்கப்பட்டுப் போனான் முருகானந்தம். வசந்தா அறைக்குள்ளிருந்தே ஒட்டுக் கேட்டுப் பூரித்துக் கொண்டிருந்தாள்.

“திருப்பரங்குன்றம் கோயிலில் வைத்து எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி விடலாம்” என்று மீனாட்சிசுந்தரம் கூறியதை மங்களேசுவரி அம்மாள் ஒப்புக் கொள்ளவில்லை.

“மூத்த பெண்ணின் கல்யாணம் வீட்டிலேயே நடக்க வேண்டும். ஏனோ தானோ என்று கோயிலில் நடத்தி முடிக்க மாட்டேன். இலங்கையிலிருந்து மதுரை வந்த பின் வீட்டில் ஒரு சுபகாரியமும் நடக்கவில்லை. இந்தக் கல்யாணத்தை என் வீட்டில்தான் செய்யப் போகிறேன்.”

“என்னடா முருகானந்தம்! உனக்குச் சம்மதந்தானே?” என்றான் அரவிந்தன். அப்போது முருகானந்தத்தின் முகம் அற்புதமாய்ச் சிரித்தது.

“திருமணத்துக்காக வசந்தாவுக்குத் தைக்கும் புதுத் துணிகளை மட்டும் முருகானந்தத்திடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறி அவன் முகத்தை இன்னும் அற்புதமாய்ச் சிரிக்க வைத்தாள் பூரணி. திருமணத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பமானதும் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கே ஒரு புதுக்களையும் மங்கலமும் சேர்ந்துவிட்டாற் போலிருந்தது.

மறுநாள் இலங்கை, மலேயா, கல்கத்தா முதலிய இடங்களிலிருந்து வந்த அழைப்புகளை ஏற்றுக் கொண்டு சொற்பொழிவுகளுக்குப் போகச் சம்மதம் தெரிவித்து மங்கையர் கழகத்துக்கு மறுமொழி எழுதிவிட்டாள் பூரணி. எங்கும், எப்பொழுதும், புறப்பட்டுப் போவதற்கு வசதியான வெளிநாட்டுப் பயண அனுமதியை ‘இண்டர்நேசனல் பாசுபோர்ட்டாக’ வாங்கிவிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அரவிந்தன். பாசுபோர்ட்டுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக அன்று மாலை பூரணியை அங்குள்ள ஒரு புகைப்பட நிலையத்துக்கு அழைத்துப் போயிருந்தான் அரவிந்தன். அந்தப் புகைப்பட நிலைய உரிமையாளர் அவர்களைப் புதுமணம் புரிந்து கொண்ட இளம் சோடியாக எண்ணியதால் ஏற்பட்ட நளினமான குழப்பங்களில் சிறிது நேரம் இருவருமே நாணிக் கூசி நிற்கும் நிலையாகி விட்டது. பூரணியைப் பாசுபோர்ட்டு அளவு படம் எடுத்தபின், அவர்கள் இருவரையும், அருகில் ஒன்றாக நிறுத்தி ஒரு படமும் எடுத்துக் கொண்டார் உரிமையாளர். இரண்டு பேருமே பார்க்க இலட்சணமாக இருந்ததினால் காட்சி அறையில் (சோரூமில்) அந்தப் படத்தை வைக்கலாம் என்பது அவர் விருப்பமாயிருந்தது.

புகைப்பட நிலையத்தில் தற்செயலாக நிகழ்ந்த இந்த இன்பக் குழப்பங்களால் நெஞ்செல்லாம் மெல்லிய நினைவுகளும் கனவுகளும் குமிழியிட அரவிந்தனும் பூரணியும் வீடு திரும்பியிருந்தார்கள். அப்போது மங்களேசுவரி அம்மாளும் மீனாட்சிசுந்தரமும் வீட்டு வாயிலிலேயே அவர்களை எதிர்கொண்டனர்.

“உன்னிடம் தனியாக ஒரு சங்கதி கேட்க வேண்டும். கொஞ்சம் இப்படி என்னோடு வருகிறாயா?” என்று மங்களேசுவரி அம்மாள் பூரணியை தனித்து அழைத்துப் போனாள்.

அதே வார்த்தையை அரவிந்தனிடம் கூறி அவனை வேறொருபுறம் தனியாக அழைத்துக் கொண்டு போனார் மீனாட்சிசுந்தரம். இருவர் நெஞ்சிலும் பெரிதாய்ப் புரிந்தும் புரியாததுமாய்க் கேள்விக்குறிகள் பூத்துப் பொலிந்து நின்றன.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

பகுதி 2 நிறைவு

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue