Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7

அகரமுதல





(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6 தொடர்ச்சி)

பழந்தமிழ்

3.பழந்தமிழ்

 மொழிகளின் தொன்மையை யறிவதற்கு அவற்றின் எழுத்துச் சான்றுகளும் (கல்வெட்டுகள், செப்பேடுகள்) இலக்கியங்களும் பெரிதும் துணை புரிகின்றன.

  எகித்து நாட்டில் கி.மு. 6000 ஆண்டிலிருந்தே கல்வெட்டுகள் தோன்றியுள்ளன. கி.மு. 3700 முதல் கி.மு. 200 வரை எழுத்தாவணங்கள் தொடர்ந்து வந்துள்ளன.

  அசீரிய  பாபிலோனியா நாட்டில் இலக்கியப் பொற்காலம் கி. மு. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.

  பெரிசிய நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இலக்கியத் தோற்றம் எழுந்துள்ளது.

  பரதக் கண்டத்தில் ஆரிய மொழியின் இலக்கியத் தோற்றம் இருக்கு வேதத்திலிருந்து பிறந்துள்ளது. அதன் காலம் கி.மு. 1400 எனப்படுகின்றது.

  சீனப் பெருநாட்டின் கல்வெட்டுகளின் காலம் கி.மு. 2000 ஆகும் என்றாலும் சீன மொழியைப்பற்றி யறிவதற்குக் கி.பி. 600க்கு முன் முடியவில்லையாம். கன்பூசியசு (Confucius) சீன இலக்கியத் தந்தை எனப் போற்றப்படுகின்றார். அவர் காலம் கி.மு. 551-479 ஆகும்.

  பாலத்தீன் நாட்டில் ஈபுரு இலக்கியத் தோற்றம் கி.மு. 750ஆம் ஆண்டிலிருந்து உண்டாயது என்பர்.

 கிரேக்க நாட்டில் ஓமர் (Homer) காலத்திலிருந்து இலக்கியத் தோற்றம் நிகழ்ந்துள்ளதென்பர். ஆனால் கிரேக்க மொழி  கி.மு.  750க்கு  முன்  எழுதப்படா மொழியாகவே  இருந்து வந்துள்ளது.

  உரோம நாட்டின் இலத்தீன் இலக்கியம் கி.மு. 240ஆம் ஆண்டிலிருந்துதான் தொடங்கியுள்ளது.

  உலகின் பழம்பெரு நாடுகளில் இலக்கியத் தோற்றம் நிகழ்ந்த காலங்களை அறிந்ததனால் அவ்வந் நாட்டு மொழித் தொன்மைபற்றி அறிய இயலுகின்றது.

 இனித் தமிழின் தொன்மையை அறிய முற்படுவோம்.

  உலகின் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப் பெற்ற  மொழி தமிழே யென்பதும் உண்மையொடுபட்ட செய்திகளேயாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றி யவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில்  வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப் பெற்றுவிட்டன.

  மறைந்து போன மாநகரங்களான ஆரப்பா, மோகஞ்சதரோ ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பதும் அவர்கள் உரையாடிய மொழி தமிழே என்பதும் ஐயத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்ட உண்மைகளாகும். இவை பற்றிய ஆராய்ச்சியில் மிக முயன்று உழைத்துப் பல அரிய உண்மைகளை வெளிப்படுத்திய அறிஞர் ஈராசு அவர்கட்குத் தமிழுலகம் என்றும் கடப்பாடுடையதாகும்.

  ஆரப்பா  மோகஞ்சதரோ நகர வாழ்க்கையின் காலம் கி.மு. 3000 என்பர். அன்று நிலவிய தமிழ் இன்று வழங்கும் தமிழன்று என்று அறிஞர் ஈராசு குறிப்பிட்டாலும் அவரால் குறிப்பிடப்பட்டுள்ள பல  சொற்கள் இன்றும்  வழக்கில் உள்ளன. ஆதலின் தமிழ்மொழி அக்காலம் தொடங்கி மக்கள் மொழியாகப் பயன்பட்டு வருகின்றமை அறியலாகும்.

  ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் வழங்கிய மொழி தமிழேயாகும் என்பதை ஆரியமொழி நூல்களும் பிற வட இந்திய மொழிகளும் தெற்றென விளக்குகின்றன.  தமிழின் தொடர்பால்  ஆரியம் பல மாறுபாடுகளை அடைந்துள்ளது; அது தனக்கு வரி வடிவ எழுத்துகளைப் படைத்துக் கொண்டது. ஆரியமும் தமிழும் இணைந்து கலப்புற்றதனால் உண்டான விளைவே, இவை ஒழிந்த இந்திய மொழிகளின் தோற்றமாகும். ஆரியத்தின் வருகையால்தான் வேற்றுரு அடைந்து வட இந்திய மொழிகளாகவும் தென்னிந்திய மொழிகளாகவும் கிளைக்கும் நிலை உண்டாயது.

  தமிழ்மொழி வரலாற்றுக் காலத்தைப் பின்வருமாறு வகுத்துக் கொள்ளலாம்:

            1. ஆரியர் வருகைக்கு முன்னர்த் தமிழின் நிலைமை.

            2. தொல்காப்பியர் காலத்தில் தமிழின் நிலைமை.

            3. திருவள்ளுவர் காலத்தில் தமிழின் நிலைமை.

            4. இளங்கோ அடிகள் காலத்தில் தமிழின் நிலைமை.

            5.  பவணந்தி காலத்தில் தமிழின் நிலைமை.

            6.  பவணந்திக்குப் பின்னர் இன்றுவரை தமிழின் நிலைமை.

  ஆரியர் வருகைக்கு முன்னர்த் தமிழின் நிலைமை:

  ஆரியர் வருவதற்கு முன்னர் உள்ள தமிழின்  நிலையை அறிவதற்குப் பெரிதும் துணை புரிவன மறைந்த மாநகரங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களில் காணப்படும் எழுத்துகளும், ஆரிய மொழியில் உள்ள பழைய மறைகளும், தமிழில் உள்ள பழைய இலக்கியங்களும் ஆம்.

  மறைந்த மாநகரங்களில் வழங்கிய மொழிபற்றி அறிஞர் ஈராசு பின்வருமாறு கூறுகின்றார்:

            1.         மோகஞ்சதரோ மக்கள் மொழி இன்று நிலவும் திராவிட  மொழிகளுள் ஒன்றன்று. மிகப் பழைய        மொழியாகும்; இன்று நிலவும் மொழிகளின் தாயாகும் திராவிடமுதல்மொழி என்று அழைக்கலாம்.

            2.         திராவிட முதல் மொழியின் சொல்லியல்           ஆராய்ச்சி அம் மொழியில் உள்ள சொற்களின் வேர்களாலும் அவற்றின் மூலப்பொருள்களாலும், வேர்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்களாலும் அவற்றின் கிளைப்பொருள்களாலும் நிகழ்த்தப்பெறும்.

            3.         திராவிட முதல் மொழியின் இலக்கணம் வளர்ச்சியுறாக் குழந்தை நிலையில் இருந்திருக்க  வேண்டும்.

                        பெயர் வினை இடை உரிகளை வெளிப்படுத்தத் தனித் தனிச் சொல் வடிவங்கள் இருந்தில. ஒரு சொல்லே வெவ்வேறு முறையில் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். கண் என்ற சொல் கண் எனும் உறுப்பையும், கண் பார்வையையும், காண்டல் தொழிலையும் காணப்பட்ட பொருளையும் அறிவித்திருக்கலாம், பண்பட்ட இலக்கணத்தைப் பெற்றிராத மொழிகளில் இன்னும் பெயர்க்கும் வினைக்கும் வேறுபாடில்லாமல் வழங்கும் சொற்களையுடைய பாசுகு(Bas-que)            மொழியே சான்றாகும்.

  இக்கூற்று அவ்வளவு பொருத்தமுடையதன்று. பண்பட்ட இலக்கணம் கொண்டுள்ள இன்றைய தமிழிலும் ஒரு சொல்லே இரண்டு மூன்று நிலைகளில் பயன்படக் காணலாம். அடி எனும் சொல் பெயராக நின்று ஓர் அடியையும் உணர்த்தும்; வினையாக நின்று அடி என்ற ஏவல் வினையையும்  உணர்த்தும். அறிஞர் ஈராசோ இம் முறை ஆங்கிலத்திலும் உண்டு என்று கூறி Walk என்பது பெயராக நின்று நடத்தலையும் (I go for a walk), வினையாக நின்று நடக்கும் செயலைக் குறிக்க வருதலையும்  (I go to walk)  எடுத்துக் காட்டியுள்ளார். ஆதலின் இவ் வழக்கால் அம்மொழியின் இலக்கணம் பண்பட்ட நிலையை அடைந்திராது என்று கூறிவிடல் சாலாது.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue