Skip to main content

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 3/3

 

அகரமுதல




(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 2/3தொடர்ச்சி)

“சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு

1) காற்று: உயிரினம் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தமையால் காற்று என்பதற்கு, ‘உயிர்ப்பு’ என மற்றொரு பெயரையும் நம் முன்னோர்கள் வைத்தனர். காற்று அங்கும் இங்கும் அசைவதால் ‘சலனம்’ எனப்பட்டது. உலவியதால் ‘உலவை’ எனப்பட்டது.

வடக்கில் இருந்து வரும் காற்று வடந்தை எனப்பட்டது. அது வாட்டும் தன்மையால் வாடை எனப்பட்டது.

மேற்கே இருந்து வருவதால் அது மேல் காற்று, எனப்பட்டது. அது கோடை
கிழக்கே இருந்து வருவதால் அது கீழ்க் காற்று எனப்பட்டது. அது கொண்டல். தெற்கே இருந்து வருவதால் அது தென்றல் எனப்பட்டது.

ஓரிடத்தில் எப் பொருளும் இல்லையெனில் அது காலி இடம். கால்+இ=காலி (கால்=காற்று).

உலவுவதால் உலகம் எனப்பட்டது.

உருள்வதால் சக்கரம் எனப்பட்டது.

கொள வடிவு உடையதால் பூகோளம் எனப்பட்டது..

செந்நிறத்தில் உள்ளது செவ்வாய் எனப்பட்டது.

சூரிய மண்டலத்தின் அருகில் அதன் வாயிலாக உள்ளதால் புதன் எனப்பட்டது.

அகன்ற பரப்புள்ளதால் வியாழன் எனப்பட்டது.

மிகுந்த ஒளி உள்ளதால் வெள்ளி எனப்பட்டது.

கரு நிறத்தில் உள்ளதால் காரி. (சனி) எனப்பட்டது.

இப்படி ஏராளமான சொற்களுக்கு உள்ள அறிவியல் தன்மையை அவர் எடுத்துக் காட்டுகிறார். பிற்காலத்தில் தமிழை அழிப்பதற்காக ஆரியர்கள் பெரும்பாலான தமிழ்ச் சொற்களை  சமக்கிருதச் சொற்களாக மாற்றி விட்டனர். இனி வரும் நாட்களில் நாம் வடமொழிச் சொற்களை நீக்கி தூய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும்.
ஏழாவது கட்டுரை, “இன்றைய தேவை குறுஞ்சொற்களே” என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.
இது ஓர் அற்புதமான கட்டுரை. அறிவுக்கு அழகு சேர்க்கும் கட்டுரை. நூறு கவிதை எழுதுவதை விட ஒரு புதிய கலைச் சொல்லை உருவாக்கிப் பார்க்கலாம். ஒரு காவியத்தை எழுதித் தமிழன்னையின் இடுப்புக்கு ஒட்டியாணமாய் அணிவிப்பதைவிட இப்படி ஒரு புதிய கலைச் சொல்லை உருவாக்கித் தமிழன்னையின் விரலுக்கு ஒரு வைரக்கல் மோதிரமாய் அணிவிப்பதே சிறப்பாகும். ஆகா, இக் கட்டுரையை நினைக்க நினைக்க மனம் இறும்பூதெய்துகிறது.

“கலைச் சொற்கள் உருவாக்கப்படும்போது கூடியவரை தனிச் சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவை குறுஞ்சொற்களாக இருத்தல் வேண்டும். நெடுஞ்சொல்லுக்கு அஞ்சி அயல் மொழியில் உள்ள குறுஞ் சொல்லையே எடுத்தாளக் கூடாது” என்பதை வலியுறுத்துவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.


அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை உருவாக்கும்போது அங்கே சொல் மறைந்து தொடரே ஆட்சி செய்கிறது. அப்படி உருவாக்கப்படும் தொடர்ச் சொற்கள் உரிய பயன்பாட்டை இழந்து விடுகின்றன. ஆகவே சுருக்கமான அயற்சொல்லே எளிதாக உள்ளது எனப் பலரும் கருதுவதால் அயற்சொற்களே நிலைத்து விடுகின்றன.

மேலும் கீழ்க்காணும் சொல்லாக்க நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு கலைச்சொற்களை ஆக்க வேண்டும் என்கிறார் ஆட்சித் தமிழறிஞர்.

1) சொல்லுக்கு ஏற்ற சொல்லை அமைக்காமல் பொருளுக்கு ஏற்ற சொல்லை அமைக்க வேண்டும்.

2) சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும்.
3) பண்பாட்டுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பெற வேண்டும்.
4) நன்னூலார் எடுத்துச் சொல்லும் குற்றங்கள் பத்தும் இல்லாமல் அழகுகள் பத்தும் கொண்டதாக இருக்க வேண்டும்.
5) அயற் சொல் கலப்பை அறவே நீக்க வேண்டும்.
6) எளிய பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

1938 ஆம் ஆண்டிலேயே வெடிகள், நீறியம், நிறமியம், பசியம் போன்ற கலைச்சொற்கள் குறுஞ்சொற்களாக உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்பொழுது Caliper என்பதற்கு முடம் நீக்க உதவும் சாதனம் என்று மொழிபெயர்க்கின்றனர். இதற்கு மாறாக இதனை ‘ஊன்றணி’ எனலாமே என்கிறார்.


தெரி பொருள் என்னும் அடிப்படையில் கூட்டுச் சொற்கள் அமைந்து பின்னர் புரி பொருள் அடிப்படையில் குறுஞ்சொல்லாக மாறுவதும் உண்டு.

சான்று: District collector என்பது தெரி பொருள் அடிப்படையில் மாவட்டத் தண்டல் அலுவலர் என்றும் பின்னர் மாவட்டத் தண்டலர் என்றும் அதன் பின்னர் புரி பொருள் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் என்றும் பின்னர் மாவட்ட ஆட்சியாளர் என்று மாறி அதன்பின் மாவட்ட ஆட்சியர் என்றும் குறுஞ்சொல்லாக மாறியது. இவ்வாறு எல்லாச் சொற்களும் அமைய வேண்டும். அதுதான் சிறப்பு.


கலைச்சொற்களை எவ்வாறு உருவாக்க வேண்டும்? அப்படி உருவாக்கும் போது எதையெதைச் சிந்தனையில் நிறுத்த வேண்டும்? என்பதை இக்கட்டுரை நமக்குச் சொல்லித் தருகிறது. ஒரு சொல்லை வெற்றிகரமாக உருவாக்கி முடித்ததும் மனத்திற்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறதே அதற்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்? தமிழர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கலைச் சொல்லாக்கத்தைப் புரிந்துகொள்வது தமிழன்னைக்குச் சிறப்பு செய்வதாகும்.


திருக்குறளில் கலைச்சொற்கள்” என்பது எட்டாவது கட்டுரையாக இடம் பெற்றுள்ளது.


திருக்குறளில் உள்ள ஏராளமான சொற்கள் இப்போது வழக்கிழந்து விட்டன என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவை யாவும் கலைச் சொற்களாகவும் உள்ளன; அச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு நம்மால் கலைச்சொற்களை உருவாக்க முடியும் என்று கட்டுரையாளர் ஆணித்தரமாக எடுத்தியம்புகிறார்.


திருக்குறளில் உள்ள சொற்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்கிறார்.

1) திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன.

2) பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக் காலமாக இருக்கக் கூடிய சொற்கள்.

3) புதிய சொற்கள்.

திருக்குறளில் இடம் பெற்றுள்ள சில கலைச்சொற்களை இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள,

வாரி (குறள் 14, 512) என்னும் சொல்லுக்கு  Source of Income  என்று பொருள்.
ஈட்டல் (குறள் 385), ஈட்டம் (குறள் 1003) என்னும் சொல்லுக்கு  Collection of wealth  என்று பொருள்.

ஆகாறு (குறள் 478) என்னும் சொல்லுக்கு Way of Income என்று பொருள்.
போகாறு (குறள் 478) என்னும் சொல்லுக்கு Way of expenditure என்று பொருள்.

இவ்வாறே எழிலி, அரணறை, அதரி, அஞர், இணர், இலக்கம், பொருள்வைப்புழி போன்ற சொற்களையும் கலைச் சொற்களாகக் கண்டுள்ளார். இச் சொற்களுக்கான பொருள், துவக்கத்தில் கடினமாகத் தோன்றினாலும் பழகப் பழக அவை எளிமையாகிவிடும். கலைச்சொல்லாக்கத்தின் பார்வையோடு திருக்குறளைப் பார்ப்பவர்களுக்கு ஏராளமான கலைச்சொற்கள் கிடைக்கும் என்பது திண்ணம். அந்தப் பார்வையை எப்படிப் பார்க்க வேண்டும் என்று இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் நமக்கு எடுத்துச் சொல்லுகிறார்.

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை” என்பது ஒன்பதாம் கட்டுரை. இக் கட்டுரை கீழே வரும் செய்திகளை நமக்கு எடுத்துச் செல்லுகிறது.


“தமிழில் அளவில்லாத கலைச்சொற்கள் தேவைப்படுகின்றன. இக் கலைச் சொற்களை உருவாக்கப் பழந்தமிழ்ச் சொற்களை மீட்டுருவாக்கம் செய்தாலே போதும்.


“வற்றாச் சொற்கடலாகத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் உள்ளன. இவற்றிலிருந்து மேலாண்மைக் கலைச்சொற்களைக் கண்டறிய வேண்டும்.

“தமிழ்க் கலைச்சொல் என்பது தமிழாகத்தான் இருக்க வேண்டும். பிறமொழிச் சொல்லாகவோ பிறமொழி எழுத்தைப் பயன்படுத்திய சொல்லாகவோ இருத்தல் கூடாது.


“கலைச்சொல் என்பது சுருங்கிய வடிவில் இருக்க வேண்டும்.

“ஒரு சொல் நேரடியாக உணர்த்தும் பொருளைவிட அச் சொல் பயன்படும் இடத்தில் என்ன பொருளில் அமைகிறது என்று பார்த்துத்தான் கலைச்சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும்.

“சான்று: Super dust tea. Dust என்றால் தூசு அல்லவா? ஆனால் உண்மையில் dust என்றால் தூள் என்று பொருள். பிற்காலத்தில் dust என்பது புழுதி என்னும் பொருளையும் குறிக்கலாயிற்று. எனவே உயர்ந்த தேயிலைத் தூள் என்னும் பொருளைத்தான் super dust tea உணர்த்துகிறது. ஆகவே dust என்பதற்கு நேரடியான பொருள் தூசு என்பது. ஆனால் இது பயன்படும் இடத்தில் தூள் என்னும் பொருளில் அமைகிறது என்பதை நாம் உணர வேண்டும்”.

எனவே சொல்லாக்கத்தில் இறங்க விழைவோர் சொல்லாக்க நெறிமுறைகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கட்டுரையாளர்.

அருமையான நூல். தமிழர்கள் அனைவரும் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய நூல்.


திறனாய்வாளர்:

முனைவர் புதேரி தானப்பன், புது தில்லி

நூற்பெயர்: “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்

ஆசிரியர்: ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன். பேச: 9884481652.

வெளியீடு: மலர்க்கொடி வெளியீட்டகம், சென்னை. பேச: 7401292612.

பக்கங்கள்: 124; விலை உரூ. 120/-

நன்றி : தமிழணங்கு, மலர் 1: இதழ் 3, பக்கங்கள் 39-49

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue