Skip to main content

திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

 

அகரமுதல




(தந்தை பெரியார் சிந்தனைகள் 19 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 20

 

2 . திருமணம் தொடர்ச்சி

 

(3) சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால் அதைத் தடுக்கும் அதிகாரமும் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும்.

(4) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவதால் சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்து விடுகின்ற காரணத்தால் சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவற்றிற்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

திருமண அடையாளம்: திருமணத்தில் தாலிகட்டப் பெறுகின்றது. இதுபற்றிப் பெரியார் சிந்தனைகள்:

(அ) தாலிகட்டுவது என்பது பெண்களுக்குமட்டும் ஆண்கள் தாலிகட்டுவதால் அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும், தாலிகட்டினவன் அப்பெண்ணுக்கு எசமான் என்றும் தாலி அடிமைச்சின்னம் என்றும் விளங்குகிறது. ஆண்பெண் இருவரும் சமநிலை உள்ளவர்கள் என்பதற்கு இருவர்கழுத்திலும் தாலி கட்டிக்கொள்ளவேண்டும். இல்லையேல் இருவருக்கும் இல்லாமல் இருக்கவேண்டும் (மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் ஏற்பாடு செய்யலாம்).

(ஆ) தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம்கட்டும் பட்டை போன்றது. தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம். தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள். பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது.

(இ) தாலி கட்டுவது எதற்காக? அஃது எதற்காகப் பயன்படுவது என்றால் பெண்களை முண்டச்சியாக்கப் பயன்படுகின்றது. அறுப்பதற்காகவே பயன்படுகின்றது.

(ஈ) தாலி என்ற அடிமைச்சின்னம் சீர்த்திருத்தத் திருமணங் களிலும்- நூற்றுக்குத் தொண்ணுறு திருமணங்களில்கட்டப்பெறுகின்றது. இது மாறவேண்டும். (உ) மணமானவள் என்று தெரிந்து கொள்வதற்காகத் தாலி கட்டுவது என்று கூறுகின்றனர். ஆனால் ஆண்கள் திருமணமானவர் என்று தெரிந்து கொள்ள அவர்கள் கழுத்திலும் தாலி கட்ட வேண்டாமா? இதில் ஆண்களுக்கும் மட்டிலும் விதிவிலக்கு ஏன்?

ஐயா வாழ்க்கையில்: 19 வயதில் திருமணம். அப்போது தாலிகட்டிதான் திருமணம் நடைபெற்று (1898) வந்தது. அந்த வயதில் தாலியைப் பற்றி எதிர்ப்பு செய்யவே இல்லை[குறிப்பு 1]. ஒருநாள் இரவு ஐயா தாலியைக் கழற்றும்படி கூறினார். அம்மையார் மறுத்தார். “நானே பக்கத்தில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் ஊரில் இல்லாதபோதுதான் அது இல்லாமல் இருக்கக்கூடாது” என்று அளந்த அளப்பில் நாதன்சொல் உண்மை என நம்பி தாலியைக் கழற்றிக்கொடுத்தார். ஈ.வெ.ரா. அதனைத் தம் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு உறங்கிவிட்டார். விடிந்தவுடன் அம்மையாரும் தாலியைக் கேட்க மறந்துவிட்டார். கணவரும் அதனைத்தர மறந்தார். அவரும் தாலியின் நினைவில்லாமலேயே சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.

இப்போது நாகம்மையாருக்கு தாலியின் நினைப்பு வந்துவிட்டது. கழுத்தில் தாலியில்லாமலிருப்பதை யாரேனும் கண்டால் ஏளனம் செய்வார்களே என்று நாணப்பட்டுக் கூடியவரை தம் கழுத்தைப் பிறர் காணாதபடி மறைத்துக் கொண்டே வேலை பார்த்து வந்தார். தம் கழுத்து வெளியில் தெரியாதபடி அடிக்கடித் துணியை இழுத்து இழுத்து மூடிக் கொண்டு வேலை செய்வதை மாமியார் கவனித்து விட்டார். உடனே ‘தாலி எங்கே?’ என்று வினவ, மருமகள் விடைகூற முடியாமல் ஏதேதோ சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தார். இதற்குள் இன்னும் சில பெண்கள் கூடிவிட்டனர். அவர்கள் நாகம்மையாரை நக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர். அம்மையாருக்குச் சினம் பொங்கி எழுந்தது. “உங்களுக்கு என்ன தெரியும்? கணவர் ஊரில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?” என்று ஒரு போடு போடவே, நக்கல் பண்ணிய பெண்கள் மறுமொழிகூற முடியாமல் வாயடைத்துப் போனார்கள். “கணவனுக்கேற்ற மனைவி; நாம் என்ன சொல்வது?” என்று சொல்லிக்கொண்டே நழுவி விட்டனர். இந்த நிகழ்ச்சியை,

தாலி என்னும் சங்கிலிதான், பெண்ணினத்தைப்
⁠பிணித்திருக்கும் தளைஎன் றெண்ணித்
தாலிதனைக் கழற்றென்னத் தன்மனைவி
⁠மறுத்துரைக்க, ‘நானி ருக்கத்
தாலிகட்டிக் கொள்ளுவதன் பொருளென்ன?
⁠எனக்கேட்டு வாங்கிக் கொண்டார்.
‘தாலிஎங்கே?’ எனக்கேலி செய்த பெண்கள்
⁠தமைக்கண்டு சினந்தார் அம்மை!

-ஈரோட்டுத்தாத்தா-பக்.7

என்ற பாட்டாக வடித்துக் காட்டுவார் கவிஞர் நாச்சியப்பன்.

மூடநம்பிக்கை: திருமணம் பற்றிய சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவைபற்றிய பெரியாரின் சிந்தனைகள்.

(அ) சாத்திரப்படி பெண் சுதந்திரமற்றவள், அவள் காவலில் வைக்கப் பெறவேண்டியவள் என்பது. இஃது ஒருபுறம் இருக்க மனிதன் ‘புத்’ என்னும் நரகத்திற்குப் போகாமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கட்கு இறுதிக்கடன், திதி முதலியவை செய்ய ஒரு பிள்ளையைப் பெறவும் என்பதாகவும் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறது.

(ஆ) பொருத்தம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்பது மிக மிக முட்டாள்தனம். பொருத்தம் பார்க்கும் சோதிடனுக்கு ஆணையோ பெண்ணையோ தெரியாது. இருந்தாலும் பொருத்தம் பார்க்கிறார்கள். இரண்டு ஆண்களின் சாதகத்தையோ இரண்டு பெண்களின் சாதகத்தையோ கொடுத்தால் இவை பொருத்த மற்றவை என்று எவனாவது கூறமுடியுமா?

(இ) தாரைவார்த்து வாங்கினவன் வாங்கின பெண்ணை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். வாடகைக்கு விடலாம். அடகுவைக்கலாம். அவனுக்கு உரிமை உள்ளது. ஏன் என்று கேட்க முடியாது. இங்ஙனம் புராண இதிகாசங்களில் நடந்துள்ளது. தருமன் திரெளபதியை பணயம் வைத்துச் சூதாடினான். அரிச்சந்திரன் தன்மனைவியை வேறு ஒருவனிடம் விற்றான். இயற்பகை நாயனார் தன் மனைவியை சிவனடியார் ஒருவருக்கு கூட்டிக் கொடுத்தார். அவமானம் உள்ள கதைகள்!

(ஈ) இன்றைக்குப் பொருத்தம் சோதிடனைக் கொண்டுதான் பார்க்கப்பெறுகின்றதே ஒழிய வயதுப் பொருத்தம், உடற்கட்டு, குருதிக்குழுப்பொருத்தம், அழகு, பண்பு, படிப்புப் பொருத்தம் முதலியவற்றை எவன் பார்க்கின்றான்? இன்றைக்கு இப்படிப்பட்ட முட்டாள்தனமான பொருத்தம் படித்தவன்-பணக்காரன் இடத்தில்தான் குடிகொண்டுள்ளது.

நாகம்மையின் மூடப்பழக்கத்தைக் களைதல்: இரண்டு நிகழ்ச்சிகளை ஈண்டுக் காட்டுவேன்.

(1) விரத ஒழிப்பு: இராமசாமியாரைப்போல் நாகம்மையாரையும் ஆசாரமில்லாதவராக விடக்கூடாது என்பது மாமனார்-மாமியார் கருத்து. கணவருக்கு வேண்டிய புலால் உணவைத் தன்னிச்சையாகச் சமைப்பார். பரிமாறுவார். பிறகு நீராடி விட்டுதான் சமையல் அறைக்குள் போவார். கணவர் வெளியில் அமர்ந்துதான் உணவு உண்ண வேண்டும். சமையல் அறைக்குள் எப்போதும் நுழையக்கூடாது.

நாகம்மையார் வெள்ளிக்கிழமைதோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்டகட்டளை. மக்கட்பேறு இல்லை என்பதற்காகவே இந்த நோன்பு ஏற்பாடு. என்றைக்கு விரத நாளோ அன்றுதான் தவறாமல் இராமசாமியாருக்குப் புலால் உணவு சமைக்கவேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இஃது இராமசாமியாரின் பிடிவாதம். நாகம்மையாரும் கணவன் முகம் கோணாமல் அவர் விருப்புப்படி புலால் உணவு சமைப்பார். பரிமாறுவார். உடனே நீராடச் சென்றுவிடுவார்.

இச்சமயத்தில் இராமசாமியார் சமையலறைக்குள் புகுந்து அம்மையார் அருந்துவதற்கெனத் தனியாக மூடிவைத்திருக்கும் விரதச் சோற்றைத் திறந்து அதற்குள் எலும்புத்துண்டைப் புதைத்துவிட்டுப் போய்விடுவார். அம்மையார் சாப்பிடும்போது சோற்றுக்குள்ளிருந்த எலும்புத்துண்டு தலைநீட்டும். இது கணவரின் திருவிளையாடல் என்பதை அவர் உணர்ந்து கொள்வார். அவ்வளவுதான்; நோன்புக்கு முற்றுப்புள்ளி. அம்மையார் பட்டினி. இக்குறும்புத்தனம் ஈ.வெ.இரா பெற்றோர்கட்கு தெரிந்தது. அவர்களும் கண்டித்தனர். ஆயினும் நிற்கவில்லை. இறுதியில் மாமியார் மருமகளை அழைத்து ‘இந்தக் கணவனைக் கட்டிக்கொண்டு நீ வாழ்ந்தது போதும். நிறுத்திவிடு ’ என்று சொல்லிவிட்டார். இவ்வளவோடு நாகம்மையாரின் வெள்ளிக் கிழமை விரதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பெற்றது. மற்ற விரதங்களும் நாளடைவில் பறந்தன. இந்த நிகழ்ச்சியை கவிஞர் நாச்சியப்பன்,

தன்மனைவி தனைத்தொட்டால் தீட்டென்று
தலைமுழுகிப் பிள்ளைப் பேற்றிற்கு
என்று வெள்ளிக் கிழமைதொறும் நோன்பிருக்கும்
நிலைபோக்க எண்ணி, ஆய்ந்து
சின்னவோர் எலும்பெடுத்துச் சோற்றுக்குள்
புதைத்திடுவார்! சென்ற வம்மை
தன்னுணவை உண்ணுங்கால் தலைநீட்டும்
எலும்புகண்டு நோன்பி ழப்பார்!

-ஈரோட்டுத்தாத்தா-பக்.7.

என்ற பாடலால் வார்த்துக் காட்டுவார்.

(2) கோயில் செல்லல் ஒழிப்பு: நாகம்மையார் விழாக் காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வெ.இராவின் திட்டம். இதற்காக இவர் செய்த குறும்பு மிக வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ ஒரு திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஈ.வெ.ரா. தம் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தாம் மைனர் கோலம்பூண்டு அம்மையார் தம்மை நன்கு பார்க்க முடியாதபடி ஓர் ஒதுக்கிடத்தில் நின்று கொண்டார். நாகம்மையாரைத் தம் கூட்டாளிகளுக்குக் காட்டி ‘இவள் யாரோ ஒரு புதியதாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசப்படுத்தவேண்டும்; நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள் என்றார்.’ அவர்களும் அவ்வம்மையார் நின்றிருந்த இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனம் செய்யத் தொடங்கினர். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கைகளைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்கமுடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய் விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்துவிட்டார். திருக்கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டர். மறுநாளே கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி தம் கணவரின் சூழ்ச்சி மிக்க திருவிளையாடல்தான் என்று உணர்ந்து கொண்டார்.

 

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல்தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு 

  1.  1930-இல் விருது நகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்தான் தாலி கட்டும் பழக்கத்தை எதிர்த்ததாகத் தெரிகிறது. அதற்குமுன் பல சுயமரியாதைத் திருமணங்களில் தாலிகட்டும் வழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. வி. செய்வித்த தமிழ்த்திருமணங்களில் இப்பழக்கம் தொடக்கத்தில் இருந்து வந்தது.



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue