Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10

அகரமுதல

      08 November 2021      No Comment



(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9. தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்

அத்தியாயம் 3 தொடர்ச்சி

கமலா – அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் – மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக ‘கமலா’ என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு கொண்டு ‘பூரணியா?’ என்று கேட்டவாறு கமலா எழுந்து வந்தாள்.

“உனக்கு வருவதற்கு இப்போதுதான் ஒழிந்ததோ, அம்மா? பகலில் வந்து என்னோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தால் பிடித்துக்கொண்டு விடுவேன் என்ற பயமா?”

“அதற்காக இப்போது வரவில்லையடி கமலா? இப்படி வா உன்னிடம் சொல்கிறேன்” என்று கமலாவை அருகில் வரச்செய்து காதோடு மெல்லத் தான் வந்த வேலையைச் சொன்னாள் பூரணி.

“வசதியான சந்நிதித் தெருவை விட்டுவிட்டு இங்கே இந்த சந்துக்கா வரவேண்டும் என்கிறாய்? மதுரைக்குப் போக வர சந்நிதித் தெருவுக்குப் பக்கத்தில் நினைத்த நேரம் பஸ் ஏறலாம். இங்கே வந்துவிட்டால் அவ்வளவு தூரம் நடந்து போய்த்தான் ஆகவேண்டும். உன் தம்பிகளுக்குப் பள்ளிக்கூடம் போக இன்னும் நடை அதிகமாகுமே. எல்லாம் யோசனை பண்ணிக்கொண்டு செய்.”

வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்பட முடியும் கமலா. ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாம் வசதி குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்” பூரணி ஏக்கத்தோடு சொன்னாள். கமலா இதற்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை.

“உன்னிடம் பேசி வெற்றி கொள்ள என்னால் முடியாது அம்மா. ஒரு தடவை பள்ளிக்கூடத்துப் பேச்சுப் போட்டியில் உனக்கு எதிராகப் பேசித் தோற்றது போதும். தமிழ், தத்துவம் எல்லாம் உனக்குத் தண்ணீர் பட்டபாடு. நான் என்ன உன்னைப் போல் தமிழ் அறிஞரின் மகளா? சாதாரண விவசாயியின் பெண். என்னை விட்டுவிடு. கரையில் ஒரு  ஃச்டோர் (குடித்தனப்பகுதி) இருக்கிறது. இப்போதே போய்ப் பார்த்துவிட்டு வரலாம். நிலா வெளிச்சத்தில் உலாவி வந்தாற் போலவும் இருக்கும். பள்ளிக்கூட நாட்களுக்குப் பின் நாம் சேர்ந்தாற்போல் நடந்து செல்ல சமயமே வாய்த்ததில்லை.”

“நான் வரத்தயார். உன்னைத்தான் உன் அம்மா இந்த நேரத்தில் என்னுடன் அனுப்புவார்களா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது.”

“தாராளமாய் அனுப்புவார்கள். இப்போதெல்லாம் இந்தப் பக்கம் எவ்வளவு நேரமானாலும் ஒரு பயமுமில்லை. சினிமாக் கொட்டகையும், பொறியியல் தொழிற் கல்லூரியும் வந்த பிறகே ஊரே பெரிதாகப் போய்விட்டது. இதோ அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு கமலா தன் தாயிடம் சொல்லி வரச் சென்றாள். கமலாவுக்குப் பூரணியை விட நாலைந்து வயது குறைவு. இருவரும் பல ஆண்டுகள் சேர்ந்து படித்தவர்கள். படிப்பு முடிந்த பிறகும் அந்த நட்பு நிலைத்தது என்றால் அதற்குக் காரணம் பூரணிதான். மிக சில விநாடிகளே தன்னோடு பழகியவர்களும் தன்னை தன் முகத்தை தன் கண்களை தன் பேச்சை மறக்க முடியாதபடி செய்து அனுப்பி விடுகிற ஓர் அரிய கம்பீரம் அவளிடம் இருந்தது. சில் விநாடிகள் பழகியவர்களே இப்படியானால் பூரணியுடன் பல ஆண்டுகள் சிறு வயதிலிருந்து சேர்ந்து படித்த கமலாவுக்கு அவளிடம் ஒரு பற்றும் பாசமும் இருந்ததில் வியப்பென்ன?

கமலா வந்தாள். பூரணியோடு கிழக்கு நோக்கி நடந்தாள். “சீக்கிரம் வந்துவிடு, பெண்ணே” என்று கமலாவின் தாயார் தெரு திரும்பும் போது வீட்டு வாயிலில் வந்து நின்று சொல்லிவிட்டுப் போனாள். கிழக்கே போகப் போக வீதி அகன்றது. வீடுகள் குறைந்தன. தோட்டங்களும் வெளிகளும் தாமரை இலைகளும் மொட்டுகளும் மண்டிக்கிடக்கும் சரவணப் பொய்கை நீர்ப் பரப்பும் மலையையொட்டிக் காட்சியளித்தன. வடப்புறம் ‘கூடை தட்டிப் பறம்பு’ என்னும் மொட்டைச் செம்மண் குன்று சமீபத்து மழையினால் விளைந்த சிறிது பசுமையை நிலவுக்குக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது போலும். இருவரும் நடந்து வந்து அறை அறையாகப் பிரிந்த ஒரு கட்டிடத்தின் முன் நின்றார்கள்.

“இதுதான் அந்த ஃச்டோர். ஊரைவிட்டு விலகி இருக்கிறது. மின்சார விளக்குகள் கிடையாது. இனிமேல் தான் விளக்குத் தொடர்பு கிடைக்க வேண்டும். வீட்டுக்காரர் மின்சாரத் தொடர்புக்கு முயன்றுகொண்டிருக்கிறார். இன்னும் பல அறைகளுக்கு ஆட்கள் குடிவரவில்லை. வாடகை மிகவும் குறைவு. ஒரு சமையல் கட்டு, சிறு கூடம், முன்புறம் வராந்தா மூன்றும் கொண்ட ஓர் அறைக்கு வாடகை பன்னிரண்டு ரூபாய்தான்” கமலா சொல்லி முடித்தாள்.

வாடகை மிகவும் குறைவாக இருந்தாலும் அந்த இடம் ஊரிலிருந்து அதிகம் தள்ளியிருப்பதாக நினைத்தாள் பூரணி. சினிமாக் கொட்டகையையும் கடந்து சிறிதளவு தொலைவு அப்பால் இருந்தது அந்த ஃச்டோர். அந்த நேரத்திலேயே அந்த ஃச்டோர், அதைச் சுற்றியிருந்த இடங்களிலும் ஊர் அடங்கினாற் போன்று சில்வண்டு கீச்சிடும் அமைதி படர்ந்துவிட்டிருந்தது. ஃச்டோர் வாசலில் வேப்ப மரத்தின் கீழே பீடிப் புகையை இழுத்தவாறு உட்கார்ந்திருந்த ஓர் ஆள் அவர்கள் கூப்பிடாமலே எழுந்து வந்து தானாகச் சில விவரங்களை அன்போடு அவளுக்குச் சொன்னான்.

“செட்டியாரு விளக்கு இணைப்பு வாங்கிட்டாரு அம்மா! இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாற விளக்கு வந்து விடும். நீங்க சொன்னாப்போல் நாலஞ்சி  அறை காலியில்லை. இப்போ எல்லாம் வந்து முன்பணம் கொடுத்திட்டுப் போயிட்டாங்க. ஒரே அறை தான் இருந்திச்சு; நானும் ஃச்டோர்காரச் செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மரத்தடியிலேதான் பேசிக்கிட்டிருந்தோம். இப்பதான் ஓர் ஆளு முன்பணத்தோட வந்து கெஞ்சினாரு. செட்டியாரும் அவருமாப் பேசிக்கிட்டே சரவணப் பொய்கை ஓரமா நடந்து போனாங்க. அவருக்கிட்ட இருந்து செட்டியார் முன்பணம் வாங்குறதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்கன்னா ஒரு வேளை பெண் பிள்ளைன்னு இரக்கப்பட்டு அறையை உங்களுக்கு விட்டாலும் விடுவாரு”. நரைத்த மீசையும் பூனைக் கண்களுமாகத் தோன்றும் அந்த நோஞ்சான் கிழவன் சமயத்தில் வந்து கூறியிராவிட்டால் ‘நாளைக்கு வந்து பார்த்துப் பேசிக் கொள்ளலாம்’ என்று பூரணியும் கமலாவும் திரும்பிப் போயிருப்பார்கள்.

“இப்போது இருக்கிற ஏழ்மையில் பன்னிரண்டு ரூபாய்க்கு வீடு கிடைத்தால் எனக்கு எவ்வளவோ நல்லது கமலா? இதையே பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். தம்பிகளுக்கும் எனக்கும் நடை முன்னைவிடக் கூடும். அதைப் பார்த்தால் முடியாது” என்று கமலாவின் காதில் மெல்லச் சொன்னாள் பூரணி. கமலாவுக்கு பூரணியின் அவசியம் புரிந்தது.

“எனக்கு இந்த ஃச்டோர்காரச் செட்டியாரை நன்றாகத் தெரியும் பெரியவரே! நான் சொன்னால் அவர் தட்டமாட்டார். என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் அவர். நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு அவர் இருக்கிற இடத்தைக் காட்டி உதவினால் நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என்று கமலா அந்தப் பூனைக்கண் கிழவனைக் கேட்டாள்.

“இடத்தைக் காட்டறதாவது, நான் உங்ககூட துணைக்கு வரேன் அம்மா! சரவணப் பொய்கை கரையிலே அந்த நாவல் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பாரு செட்டியாரு. பார்த்து ஒரு வார்த்தை காதிலே போட்டுட்டா வேற யாருக்கும் விடமாட்டாரு. நமக்கு உறுதி சொன்னது போலத் திருப்தியாயிடும். . .” என்று உற்சாகமாகக் கூறித் தானும் உடன் புறப்பட்டான் கிழவன். முன்னால் கிழவனும், அடுத்தாற்போல் கமலாவும், கடைசியாகப் பூரணியும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். தண்ணீர் பாயும் ஒலி, வயல்களில் தவளைக் கூச்சல், மலையில் காற்று மோதிச் சுளிக்கும் ‘சுர்ர்’ ஓசை, இவை தவிர, இரவின் அமைதி சூழ்ந்திருந்த அத்துவானமாக இருந்தது அந்த இடம். தூரத்திலிருந்து டூரிங் சினிமா ஒலி நைந்து வந்தது.

மர நிழல்களின் ஊடே சிவந்த மேனியில் தேமல் போல் நிலவொளியும் நிழலும் கலந்து பூமியில் படரும் அழகைப் பார்த்துக் கொண்டே பூரணி தரைநோக்கி நடந்துகொண்டிருந்தாள்.

திடீரென்று, “ஐயோ! சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுகிறானே” என்று கமலாவின் அலறலும் திடுதிடுவென்று ஓடும் ஒலியும் அவளைத் தூக்கிவாரிப் போடச் செய்தன. எதிரே பார்த்தாள். கமலாவும் அந்த ஆளும் தனக்கு மிகவும் முன்னால் போயிருந்தது தெரிந்தது. கமலா பதறி நின்றாள். அந்தப் பூனைக் கண் கிழவன் தான் முன்புறம் ஓடிக் கொண்டிருந்தான். பூரணியின் உடம்பில் எங்கிருந்துதான் அந்தப் பலம் வந்து புகுந்ததுவோ, அவனைத் துரத்தி ஓடலானாள். கீழே கிடந்த ஒரு குச்சுக்கல்லை எடுத்து ஓடுகிறவன் பிடறியைக் குறிவைத்து வீசினாள். அடுத்த கணம் குரூரமாக அலறி விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். பூரணி விடவில்லை. அருகில் நெருங்கி அவனைப் பிடித்துவிட்டாள். நாயைச் சங்கிலியால் பிணைக்கிற மாதிரி அவனுடைய அழுக்குத் துண்டாலேயே அவன் கைகளைக் கட்டினாள்.


(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue