அகிலத்தில் அமைதி காப்போம் ! – எம். செயராம(சர்மா), மெல்பேண்
சமயத்தின் பெயரால் சண்டை
சாதியின் பெயரால் சண்டை
குமைகின்ற உள்ளங் கொண்டார்
குழப்பமே செய்வார் நாளும்
அமைதியை எண்ணிப் பாரார்
ஆரையும் மனதில் கொள்ளார்
அழித்தலை மட்டும் நாடி
அனைத்தையும் ஆற்ற வந்தார்
வெறி தலை கொண்டதாலே
நெறி தனை மறந்தேவிட்டார்
அறி வெலாம் மங்கிப்போக
அரக்கராய் மாறி விட்டார்
தூய்மையாம் சமயம் தன்னை
தூய்மையாய் பார்க்கா நின்று
பேயென உருவம் கொண்டு
பிணக்காடாய் மாற்று கின்றார்
கடவுளின் பெயரைச் சொல்லி
கருணையை வெட்டி வீழ்த்தி
தெருவெலாம் குருதி ஓட
செய்கிறார் நாளும் எங்கும்
குண்டுகள் வெடிக்கும் வேளை
குரூரமே நிகழும் அங்கே
மண்டைகள் சிதறி மண்மேல்
வாரியே உதிரம் ஓடும்
மருத்துவச் சாலை கோவில்
முதியோர் தங்கும் இல்லம்
சித்தத்தில் வைக்கா வண்ணம்
சிதைக்குமே வைத்த குண்டு
எத்தனை உயிர்கள் போயும்
இரக்கமே வாரா நிற்கும்
அத்தனை அரக்கர் தம்மால்
அகிலத்தின் அமைதி போச்சே
ஆதியென நிற்கின்ற கடவுள்தானும்
அரக்ககுணம் கொண்டாரை அருகில்வையார்
பேதமெலாம் கடவுளுக்கு இல்லையப்பா
பேய்மனத்தை ஆண்டவனும் ஏற்கமாட்டான்
ஆண்டவன் படைப்பில் நாங்கள்
அனைவரும் மனிதர் அன்றோ
வேண்டாத அழிவைச் செய்து
விளைந்தது என்ன கண்டீர்
ஆண்டவன் படைத்த இந்த
அற்புத அகிலம் தன்னில்
அமைதியை காப்போ மானால்
ஆனந்தம் அடைவோம் நாளும்
வேண்டிய விதத்தில் வாழ
விண்ணையும் தொட்டு நிற்க
ஆண்டவன் அருளைப் பெற்று
அகிலத்தில் அமைதி காப்போம்
காட்டேறி போலிருக்கும் காட்டுமிராண்டிகளே
கடவுள் தந்தபூமிதனை கந்தகமாய் ஆக்காதீர்
அறநெறியில் வாழுங்கள் அருளதனைப் பேணுங்கள்
அகிலமெங்கும் அமைதிதனை ஆக்கிடுவோம் வாருங்கள் !
Comments
Post a Comment