செஞ்சீனா சென்றுவந்தேன் 16 – பொறி.க.அருணபாரதி
(புரட்டாசி 19, 2045 / 05 அக்தோபர் 2014 இன் தொடர்ச்சி)
16. பொறாமைப்படத்தக்க இரு நிகழ்வுகள்
அன்றொரு ஞாயிற்றுக்கிழமை, சீன மக்கள் மீது ஆர்வமும் பொறாமையும் ஏற்படும் அளவிற்கு இரண்டு நிகழ்வுகள் கண்டேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்,
காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியாக எழுந்திருந்தேன். என் அறைக்கு ஒரு பெண்,
கையில் ஒரு பெட்டியுடன், நவநாகரிக உடையணிந்து கொண்டு வந்திருந்தார்.
பார்ப்பதற்கு, நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகள் போல் இருந்தாள்.
என்னைப் பார்த்ததும், “நீ ஃகௌ” (NI HAO / 你好) எனச் சீனத்தில் வணக்கம்
சொல்லிவிட்டு, வீட்டு உரிமையாளரிடம் என்னைப் பார்த்து ஏதோ பேசினார்.
பின்பு, அறைக்குள் சென்றுவிட்டு, சற்று நேரம் கழித்து உரப்புக்காற்சட்டை
(Jeans pant), கொசுவுச்சட்டை(T-shirt) அணிந்து கொண்டு, கையில் ஒரு வீடு
துடைக்கும் துடைப்பத்துடன் வந்தாள். பின்பு, கழிவறையைத் துப்புரவாக்கினாள்.
வீடு முழுக்க தூய்மைப்படுத்தினாள். நான் வியப்புடன் பார்த்துக்
கொண்டிருந்தேன்.
வேலை முடிந்தவுடன், அவரும் அந்த வீட்டு
உரிமையாளர் மனைவியும் ஒன்றாக அமர்ந்து காநீர் குடித்தனர். தான்
கொண்டுவந்திருந்த கைப்பெட்டியிலிருந்து ஒரு மடி கணிணியை எடுத்த அந்தப்
பெண், இணையத்திற்குச் சென்று அந்த வீட்டு உரிமையாளரிடம் பல இணையப்
பக்கங்களைக் காட்டி, அவ்விருவரும் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
பிறகு, என்னை மெல்லிதான புன்னகையுடன் பார்த்துவிட்டுச் சென்றாள். அவள் போன
பிறகும், எனக்கு வியப்பு விலகவில்லை.
அன்று ஞாயிறு என்பதால், வெளியே
கடைகளுக்குச் சென்றிருந்தேன். வழியில், ஓரிடத்தில் ஒரு குழுவினர் கூட்டாக
நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களது கையில் காவல்துறையினரைப் போல்
நடைபேசி(walkie talkie) வைத்திருந்தனர். அவர்களுக்கு முன் ஒரு சுமையுந்து
நின்று கொண்டிருந்தது. அந்தச் சுமையுந்திலிருந்து ஒரு கம்பியை, அந்தச்
சாலையோரம் இருந்த சாக்கடை திறப்பிற்குள் விட்டிருந்தனர்.
ஒருவர் பல பாதுகாப்பு உடையணிகளுடன்
தலையில் விளக்கு வைத்துக் கொண்டு உள்ளே இறங்கியிருந்தார். மேலே,
நின்றிருந்தவர்கள் உள்ளே சென்றவருடன் நடைபேசியில் ஏதோ பேசிக்
கொண்டிருந்தனர். அவர்கள், சாக்கடை அடைப்பைச் சரி செய்யும் பணியில்
ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர முடிந்தது. அவர்களை வியப்போடு
பார்த்தேன். வெளிநாட்டவன் என்பதால் எல்லோரும் என்னை உற்றுப் பார்த்தபோது,
“நீ ஃகௌ” என்றேன். அனைவரும் சிரித்தனர்.
வீட்டைத் தூய்மையாக்கும் வேலையாள், கழிவறையைத் துப்புரவாக்கும் தொழிலாளி ஆகிய இவ்விரு தொழிலாளிகள் குறித்த இந்த இரண்டு நிகழ்வுகளையும், இந்திய – தமிழகச் சூழலில் பொருத்திப் பார்த்ததே, நான் வியப்படைந்ததற்கு அதி முதன்மைக் காரணம். வீட்டையும், வீட்டுக் கழிவறையையும் துப்புரவாக்கும் தொழிலாளியை நம் சமூகம் எப்படி நடத்தி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
“நம் வீட்டைத் தூய்மையாக்க வந்த தொழிலாளியாக இருக்கட்டும், அல்லது கழிவறையில் ஏற்பட்ட சிக்கல்களைச் சரி செய்ய, நாமே அழைத்து வந்த தொழிலாளியாக இருக்கட்டும், அவர்கள் செய்த பணிக்காக, அவர்களைச் சமமாக ஒரு நாற்காலி போட்டு அமரவைத்திருப்போமா? குறைந்தது ஒரு தேனீராவது நாம் பரிமாறியிருப்போமா?” என்று என் மனத்தில் ஓடியது.
அவர்களுக்குத் தேனீர் அளிப்பதற்குக் கூட, கடையிலிருந்து தேனீர் வாங்கி வந்து நெகிழிக் குவளைகளில்(plastic cups) அவர்களுக்குப் பரிறிமாயிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
மனிதக்கழிவுகளை – சாக்கடைகளைத் துப்புரவு செய்து செய்து அகற்றுகின்ற பணிகள், சில தொழில்நுட்பக் கருவிகளுடன் இங்கு பாதுகாப்பாக நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவிலோ உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் கூட, எந்தப் பாதுகாப்புக் கருவிகளும் வழங்கப்படாத நிலையில், உயிரைத் துச்சமென மதித்து தொழிலாளர்கள் இப்பணியை மேற்கொள்கின்றனர்.
இந்த நிகழ்வுகள் எனக்கு வியப்பளித்த
சிறிது நாளில், தமிழகத்திலிருந்து ஓர் அதிர்ச்சியான செய்தி வந்தது.
18.03.2014 அன்று, ஈரோட்டில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில்
பணிபுரிந்த 7 தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியே
அது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுகின்ற
இந்த இழிதொழிலை ஒழிக்கக் கோரியும், இதில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களுக்கு
10 இலட்ச உரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த
1993ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை அது ஆட்சியாளர்களால் சரிவர
பின்பற்றப்படுவதே இல்லை. உயிர்ப்பலி நடப்பதும், அதை ஆட்சியாளர்கள் மூடி
மறைக்க முனைவதும் தொடர்கின்றது.
கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட
மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவெங்கும் சற்றொப்ப 7.50 இலட்சம் பேர்,
இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்
கணிசமானவர்கள் பெண்கள் என்பதும், அதிலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதும் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இங்கு நீடிக்கும்
ஆணாதிக்கப் பார்ப்பனியத்தின் சமூக கட்டமைப்பாகவே அது வெளிப்படுகிறது.
2011ஆம் ஆண்டு, இத்தொழிலில்
ஈடுபட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய, இந்திய வரவு செலவுத்
திட்டத்தில் சற்றொப்ப 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2012-13ஆம் ஆண்டில்,
இது 98 கோடியாகக் குறைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்திய நாடாளுமன்றம்
இப்பணியை ஒழிக்க 2013ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. இத்தொழிலில் ஒருவரை
ஈடுபடுத்தினால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை என்றும் அச்சட்டம் சொல்கிறது.
ஆனால், உலகின் மிகப்பெரும்
இருப்புப்பாதை இணைப்பைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படும் இந்தியத்
தொடரித்துறை, எந்த வகையிலான கழிவறை சுத்திகரிப்பு வசதியை வைத்துக்
கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் எளிய உண்மையாகும். எனில்,
இந்தியத்தொடர்வண்டித் துறை அதிகாரிகளுக்கு இந்த 5 ஆண்டுகாலச் சிறை
பொருந்துமா என்பதை இந்திய அரசு இன்றுவரை சொல்லவில்லை.
இச்சட்டம் இயற்றியபின், இந்தத்
தொழில் ஒழிந்துவிட்டதாகவும் எனவே இந்த மறுவாழ்வு பணிக்கு வெறும் 20 கோடி
ரூபாய் போதும் என்றும் சொல்லிவிட்டது, இந்தியச் சமூகநீதி- செயலாக்கத்துறை.
மேலும், இதில் பெரும்பாலான நிதி இது குறித்து ஆய்வு செய்வதற்குத்தான்
பயன்படுத்தப்பட்டது என்றும் மறுவாழ்வளிக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதும்
கூடுதல் தகவல்! இப்படித்தான் இந்தியாவில் சக மனிதர்களை மதிக்கிறது.
அரசாங்கம்!
சீனாவில் கழிவுநீர் அகற்றுகின்ற
முறையாகட்டும், வீட்டுப் பணியாளர்களை நடத்துகின்ற விதமாகட்டும், மனிதநேயமே
மேலோங்கியுள்ளது. சீனாவின் நடுத்தர மக்கள் சமூகத்தின் கணிசமானவர்கள்,பிற
மனிதர்களைத் தொழிலாளர்கள் என்பதைத் தாண்டி மனிதர்கள் என மதிப்படுகின்றனர்.
எந்தவொரு வேலையும் கீழான வேலையல்ல, அனைத்தும் வேலைகளே என்ற பொதுப்புத்தி
இங்கு புதைந்து கிடக்கிறது. ஆகவே, யாரும் யாருடைய வேலையையும் கீழான வேலையாக
நினைப்பதில்லை.
ஆனால், சாதிக்கொரு நீதி பேசும்
பார்ப்பனியம் நீடிக்கும் நமது சமூகத்தில் இந்த நிலை இன்னும் வர நாம் எத்தனை
எத்தனைப் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது? பிறப்பு அடிப்படையில் அல்லது
செய்யும் தொழில் அடிப்படையில் என ஒவ்வொருவரையும், தமக்கு மேலா கீழா என
பிரித்துப் பார்த்து அணுகுகின்ற சாதிபுத்தி நம்மிடையே புரையோடிப்
போயிருக்கிறது. இதன் விளைவாகப் பிற மனிதரை மதிக்கின்ற மனிதப்பண்பு கூட
நம்மிடையே இல்லாமல் போகின்றது. இது மாற்றப்பட வேண்டும். அந்த
மாற்றத்திற்காக நாம் உழைக்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த 27.03.2014 அன்று
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, இந்த
இழிதொழில் இன்றும் தொடர்ந்து வருவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு,
அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களையும்
முன்மொழிந்துள்ளது ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
Comments
Post a Comment