Skip to main content

அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 30-32

 




(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 27-29-தொடர்ச்சி)

மாலை வேளையில் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்த தாசியொருத்தி, கீழேயிருந்த தன் வேலைக்காரியை அழைத்து, “நம் வீதி வழியே ஒரு பெரியவரின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நீ போய் அவரது ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா – நரகத்துக்குப் போகிறதா என்று பார்த்து வா” என்றாள். மறுநிமிடமே, அவள் திரும்பிவந்து, “அம்மா, அந்த ஆன்மா மோட்சத்துக்குப் போய்விட்டது” என்று சொன்னாள்.

இவற்றையெல்லாம் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சந்நியாசி, வியந்துபோய் வேலைக்காரியின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சுகிறார். “அம்மா அறுபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி. இறந்த ஆன்மா எங்கே போகிறது என்று ஆராய்ந்து வருகிறேன். பல பெரியோர்களை அணுகியும் விச்சாரித்தேன். இன்னும் எனக்கு விடை கிடைக்கவில்லை. இப்போது நீதான் என் குரு. ஓர் ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா, அல்லது நரகத்துக்குப் போகிறதா என்னும் கலையை அறிவது எப்படி?” என்று வேண்டினார்.

“சுவாமி, இது தெரியாதா உங்களுக்கு- பிணம் தாக்கிச் செல்வோர் பின்னே நானும் சிறிது தூரம் நடந்து சென்றேன். சாலையின் இருபுறமும் உள்ள மக்களும், உடன் செல்வோரும், “ஐயோ! நல்ல மனிதன் போய் விட்டாரே! புண்ணியவான் இன்னும் கொஞ்ச காலம் இருக்கக் கூடாதா? தருமவானாச்சே! பலருக்கும் உதவி வந்தார்: இன்றைக்குப் போய்விட்டாரே! என்று, பலவாறாக அழுது புலம்பினர். அதனால், அந்த ஆன்மா ‘மோட்சத்துக்குப் போகிறது” என்று நான் சொன்னேன்.

“நேற்று இப்படியொரு பிணம் சென்றபோது நானும் பின்னால் தொடர்ந்து சென்றேன். அப்போது மக்கள் எல்லாரும், பாவி! ஒருவழியாகத் தொலைந்தான், இனி மேல் நல்லகாலந்தான். இந்த ஊரைப் பிடித்த பீடை ஒழிந்தது” என்று பலவாறாகப் பேசினார்கள். ஆகவே, அந்த ஆன்மா ‘நரகத்துக்குப் போய்விட்டது’ என்று சொன்னேன்” என்றாள்:

பாவம்! சந்நியாசி வெட்கித்தலை குனிந்தார்.
—————

முதிய துறவி ஒருவர், இளந்துறவி ஒருவருடன் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டுத் தன் ஆசிரமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

வழியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது, இவர்களுக்கு முன்னே இளம்பெண் ஒருத்தி, இரண்டுமாதக் கைக்குழந்தையுடன், செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் ஆற்றைக் கடந்து அக்கரை போகாவிட்டால், கணவனும் மாமியாரும் சண்டையிடுவார்கள். திரும்பித் தாய் வீட்டுக்குப் போகலாம் என்றாலோ ஒரே இருட்டு; காட்டு வழிப்பாதை. ஆற்றைக் கடக்கவும் முடியாமல் திரும்பிச் செல்லவும் வழியில்லாமல் அவள் துடித்துக் கொண்டிருந்தாள்.

இந்தத் துறவிகள் இருவரையும் அந்த நேரத்தில் அங்கே கண்டதும், அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயம் அவர்கள் உதவி செய்வார்கள் என்று, நம்பினாள்.

முதிய துறவியோ, இளம்பெண்ணைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி ஆற்றிலே இறங்கி நடக்கத் தொடங்கி விட்டார். இதைக் கண்டதும், அவளுக்கு ஒரே நடுக்கமாகப் போய்விட்டது.

அவளது துயரத்தைக் கண்ட இளம்துறவி, அவள்மீது இரக்கம்கொண்டு, ‘அம்மா குழந்தையை நீ உன் தோளில் பத்திரமாக வைத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு, அப்படியே அவளைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்து, அக்கரை போய்ச் சேர்ந்த உடன் அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.

இதைக் கண்ட முதிய துறவிக்கு, இளந்துறவிமேல் கோபமோ கோபம்! அன்று முழுவதும் அவருடன் பேசவேயில்லை. அடுத்த நாள் மாலைக் கூட்டத்தில் ‘மாசற்ற மனம்’ என்ற தலைப்பில் முதிய துறவி பேச விருந்தார். அப்போது முன்வரிசையில் இளந்துறவியைக் கண்ட அவருக்கு ஆத்திரம் பொங்கியது.

அவரைப் பார்த்து, “நீ எழுந்திரு. இந்த இடத்தில் உனக்கு வேலையில்லை. நீ ஓர் இளம் பெண்ணைத் தொட்டுத் தோளில் சுமந்தது பெரிய தவறு. சந்நியாசத்துக்கு இழுக்கு. துறவுக்குப் பழி. ஆசிரமத்திற்கே மானக் கேடு” என்று இரைந்தார்.

இவையனைத்தையும், சற்றும் படபடப்புக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டு, நிதானமாக எழுந்து நின்று, இளந்துறவி சொன்னார் :

“சுவாமி, நான் அப்போதே ஆற்றங்கரையிலேயே அவளை இறக்கி விட்டுவிட்டேனே! இரண்டு நாளாக்ச் கவாமிகள் அப்பெண்ணை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்களே! – ஏன்?” என்று கேட்டார். அவ்வளவுதான்!

முதிய துறவி இதற்குப் பதில் கூற முடியாமலும், மாசற்ற மனத்தைப் பற்றிப் பேச முடியாமலும், அவ்விடத்தை விட்டு எழுந்து போய்விட்டார்.

எப்படி இந்த மாசற்ற மனம்?
—————-

சுவாமி சச்சிதானந்தா என்ற தமிழகத்துத் துறவி, அமெரிக்காவில் ‘யோகிராசு’ என்ற சிறப்புடன் அமெரிக்க மக்களுக்கு ‘யோகாசனப் பயிற்சி’ அளித்துவருகிறார். இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர் அவருக்குச் சீடராக இருந்து யோகப் பயிற்சி பெறுகின்றனர். அந்த ஆசிரமத்திற்கு அமெரிக்க அரசாங்கமே அருந் துணையாக இருந்து பேருதவி செய்துவருகின்றது.

சென்ற ஆண்டு, தில்லி மாநகரில், காய்கறி உணவு மாநாடு நடந்தது. அதற்குத் தலைமைதாங்க இந்தியப் பேரரசு இப் பெருந் துறவியை அழைத்தது.

அப்போது, தொழிலதிபர், பொள்ளாச்சி திரு. மகாலிங்கம் அவர்கள், அவரைச் சென்னைக்கு வரவழைத்து, அவருக்கும் அவரது சீடர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு நிகழ்த்தினார்.

அவர்கள் சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்குமுன், நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து திருச்சியிலே அவர்களுக்கு ஒரு வரவேற்பு விழாவினை ஏற்பாடு செய்தோம். சுவாமியும் வந்தார்கள்.

அந்த விழாவில் சுவாமி யோகிராஜ், அவரது சீடர்கள் 32 பேர், நாங்கள், எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பொதுமக்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் 90 பேர்தான் அங்குக் கூடியிருந்தோம்!

அதே மன்றத்தில், அடுத்து நாள், ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகைக்கு பாராட்டுவிழா நடந்ததில், அவரைப் பார்க்க ஐயாயிரம் பேர் கூடிக் கொட்டகையில் புகுந்து இடித்துக் கதவு சன்னல் எல்லாம் பெயர்ந்துபோய், நாற்காலி எல்லாம் உடைந்து, அவரைப் பார்த்தவர் பார்க்காதவரெல்லாம் சட்டைகள் கிழிந்து, வீடுபோய்ச் சேர்ந்தனர் என்ற செய்தி என்னை மிகவும் வருத்தியது.

இது நம்நாடு அறிவாளிகளின் பின்னே போகவில்லை என்பதையும், யார் பின்னாலேயோ போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் காட்டிக் கொண்டிருக்கிறது.
————

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்