Skip to main content

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,22, பொதுவறுசிறப்பின் புகார் பிற்பகுதி

      20 September 2024      கரமுதல



(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,21, பொதுவறு சிறப்பின் புகார்-தொடர்ச்சி)

மகதச் சிற்பரும், மராட்டக் கொல்லரும், யவனத் தச்சரும், கூடிக் கண்ணை கவரும் வனப்புடன் அமைத்த அரசன் பெருங்கோயில் இருப்பது பட்டினப்பாக்கம்; பெரு வாணிகத் தெருவும், மன்னரும் விழையும் மாநிதி படைத்த வாணிகப் பெருமக்களின் மாட மாளிகைகள் நிறைந்த நெடிய வீதியும், வேதம் வல்லமறைவோரும். வேள்குடிவத்தோரும் வாழும் வீதிகளும், அரண்மனையைச் சூழ் அமைந்திருந்தன. மருத்துவரும், நாளறிந்து கூறும் கணியரும் தனித்தனியே வாழும் வீதிகளும், முத்துக் கோப்போர், வளையல் அறுப்போர் நாழிகைக் கணக்கர், காவற்கணிகையர், நாடகமகளிர், நகை வேழம்பர் முதலானோர் வாழும் வீதிகளும் ஆண்டே; கடும்பரி கடவுநர் களிற்றின்பாகர், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண் மறவர் என்ற நாற்படை வீரர்கள் வாழும் வீதிகள் அரண்மனைக்கு அணித்தாகவே அமைந்திருந்தன.13

வடவேங்கடம் தென்குமரிகட்கு இடைப்பட்ட தமிழகம் முழுவதையும் தன் ஆணைக்கீழ்க் கொண்டு வந்து அடக்கிய பின்னர், கரிகாலன், வடநாடு நோக்கிச் சென்றான் ; சென்றானை இமயம் இடைநின்று தடுத்துவிட்டது. அதனால் சினங்கொண்ட சோழன் அதன் உச்சியில் தன் புலி இலச்சினை பொறித்து மீண்டான்; மீளுங்கால் வச்சிர நாட்டு வேந்தன் முத்துப் பந்தலும், மகத நாட்டு மன்னன் பட்டிமண்டபமும் அவந்தி நாட்டு அரசன் தோரணவாயிலும் அளித்து அவனுக்கு நண்பராயினர்; கரிகாலன் ஆங்குப்பெற்ற அவ்வெற்றிச் சின்னங்கள், காவிரிப் பூம்பட்டினத்திற்குச் சிறப்பளித்து நின்றன.14

புகார் நகருக்கு வரும் புதியோர், பொருளின் பெயரும் பொருளுக்கு உரியோர் பெயரும், அப்பொருளின் அளவும் நிறையும் பொறித்துக் கொணர்ந்த பண்டப் பொதிகள்; அவர்கள் ஊர்ப் பொதுவிடத்தே தங்குவதால் காப்பாரற்றுக் கிடப்பக்காணும் கள்வர், அவற்றைக் கவர்ந்து கொண்டால் அவரைக் களவும் கையுமாய்ப் பிடித்துக், களவாடிய பண்டப் பொதிகளை அவர் தலையில் ஏற்றி, நகர் மக்கள் கண்டு நகையாடி வெறுக்குமாறு, நகர வீதியில் வலம். வரப்பண்ணி களவினைக் கனவிலும் கருதாக் கருத்துடையராக்கி அனுப்பும் உயர்நீதி மன்றம் ஒன்றும் அப்புகார் நகரில் இருந்தது.15

தன்நீரில் படித்து மூழ்கித் தன்னை வலம்வரும், கூனர் குறுகிய வடிவினர், ஊமர், செவிடர், தொழுநோயாளர்முதலாம் ‘கொடிய நோயாளர்களின் நோய் போக்கி’ நல்லுடல் அளிக்கும் மருத்துவ மாண்பு மிக்க பொய்கையை உள்ளடக்கி நின்ற உயர்ந்த மன்றம் ஒன்றும் ஆங்கிருந்தது.16

பகைவரால் வஞ்சிக்கப்பட்டு மயக்க மருந்து ஊட்டப் பெற்றவரும், நஞ்சுண்டு உயிர்போகும் நிவையுற்றோரும் பாம்பின் வாய்ப்பட்டோரும், பேயால் பற்றப்பட்டோரும், வந்து தன்னை வலம்வர, அவர்மீது தன் நிழல்பட்ட அப்போதே அவர் துயர்போக்கி வாழ்வளிக்கவல்ல ஒளியை வீசும் ஒருவகைக்கல் நாட்டப் பெற்ற மன்றம் அந்நகருக்கு மாண்பளித்திருந்தது.17

தவநெறியுடையோர்போல் வெளிவேடம் தாங்கிப் பிறர் காணாவாறு பழிபாவம் புரியும் ஒமுக்கநெறி இகந்தோர், கணவன் அறியாவாறு கற்பிழக்கும் காரிகையர், அரசரோடு உடன் வாழ்ந்தே, அவர்க்கு அவர் அறியாவாறு அழிவுதேடும் அமைச்சர், மணந்த மனைவியை மறந்து, பிறர் மனைவியரின் பின் திரிவோர், மன்றில் பொய்ச்சான்று கூறுவார், ஒருவரைக் கண்டவிடத்துப் புகழ்ந்து, காணா விடத்துப் பழிக்கும் புறங்கூறுவார் போன்ற கொடியோர்களை கைப்பாசத்தால் கட்டி ஈர்த்துக்கொன்று உயிர் போக்குவேன் என, நகரில் நான்கு எல்லையும் கேட்டுமாறு உரத்துக்கூறி, கூறியதோடு நில்லாது அத்தகையாரைப் பற்றி ஒறுத்து அறம் காக்கும் காவல் பூதம் நிற்கும் மன்றம் புகார் நகருக்குப் பெருமையளித்திருந்தது.18

ஆளும் முறையை அரசர் மறந்தால், அறநூல் கூறும் நெறிமுறை விடுத்து, ஒருதலை தீர்ப்பளிக்க, அறம் வழங்கும் ஆன்றோர்கள் துணிந்தால், நாட்டில் நிகழும் அக்கேடுகளை நாவால் எடுத்துக்கூறாது, கண்ணிர் வடித்துக் கலங்கிக் காட்டும் பாவையைக் கொண்ட பாவை மன்றம், புகார் நகரின் வாழ்விற்கு அருந்துணை அளித்தது.19புகார் நகரில், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் சோமகுண்டம், சூரியகுண்டம் எனப் பெயர் பூண்ட இரு பொய்கைகள் இருந்தன; அவற்றில் மூழ்கி, அவற்றின் கரைக்கண் இருந்த காமவேள் கோட்டத்துக் கடவுளை வணங்கினால் மகளிர், கணவரைப் பிரியாது வாழும் பெருவாழ்வை இம்மையில் பெற்று, மறுமையில், போக பூமியில் அவரோடு பிறந்து பேரின்பம் நுகர்வர்.20

பூத்து மணம் பரப்பும் தொழில்களால் பொலிவு பெற்றது புகார். மன்னர்க்கு ஏற்றனவும் மக்களுக்கு ஏற்றனவும், மாதவர்க்கு ஏற்றனவும் ஆகிய பூஞ்சோலைகள் பல புகார் நகரில் இடம் பெற்றிருந்தன. வடிவாலும், வண்ணத்தாலும், வாசனையாலும், வேறுபட்ட வகை வகையான மலர் மரங்களைக் கொண்ட இலவந்திகைச் சோலை, அவற்றுள் ஒன்று; அதனிடையே அழகிய பொய்கை ஒன்றும் இருந்தது. அப்பொய்கையில் வேண்டுமளவு நீரை வேண்டும் பொழுது நிறைக்கவும் போக்கவும் வல்ல பொறி பொறுத்தப் பெற்றிருந்தது. அத்தகைய மாண்புமிக்க அம்மலர்ச் சோலையில் மன்னர் மட்டுமே மகிழ்ந்து வாழ்வர்.21

உவவனம் என்பது புகாரில் இருந்த மற்றொரு பூஞ்சோலை; மக்கள் செல்லும் உரிமை வாய்ந்தது அம்மலர்ச் சோலை. பளிங்கால் ஆன அழகிய மண்டபம் ஒன்று அதன் இடையே இருந்தது. அகத்தே இருப்போரின் வடிவைப் புறத்தே புலப்படுத்தும் அது, ஆங்கு அவர் எழுப்பும் ஒலியை, ஒரு சிறிதும் புறம்போகவிடாது அடக்கிக் கொள்ளவல்லது. அம்மண்டபத்தின் இடையில் புத்தன் பாதம் பொறித்த தாமரைப்பீடம் ஒன்றை அமைத்திருந்தனர். அப்பீடத்தில் இட்ட அரும்புகள், இட்டவுடனே மலர்ந்து மணம் வீசும்; மலர்கள் வாடா, தேனுண்ணும் வண்டு, அம்மலரை மொய்க்காது; அத்துணை அருமை வாய்ந்தது அப்பூஞ்சோலை.22உய்யானம் எனும் பெயர் பூண்ட, பூதக்காவல் பெற்ற பூஞ்சோலையும், சடாயு எனும் பறவை அரசன் பிறந்த சம்பாதியின் நினைவாகவும்; காவிரியாறு தோன்றத் துணைபுரிந்த கவேரன் எனும் முனிவன் நினைவாகவும் வளர்த்த சம்பாதிவனம், கவேரவனம் என்ற பூஞ்சோலை களும், புகார் நகருக்கு பெருமையளித்திருந்தன.23

புகார், பலவகைச் சமய மக்களும் கலந்து வாழ்ந்த ஒரு பேரூர்; இதனால் ஆங்கு பல்வேறு சமயச் சார்பான கோயில்கள் சிறப்புற அமைந்திருந்தன: சிவன், திருமால், முருகன், பலராமன், இந்திரன், அவனுக்குரிய வச்சிராயுதம், வெள்ளை யானை அவன் நாட்டுக் கற்பகத் தரு, ஞாயிறு, திங்கள். ஐயன், அருகன் ஆகிய அனைவருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தார் கோயில்கட்டி விழாச் செய்தனர்.24

சக்கரவாளக்கோட்டம் என்ற சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்புெறும், புகார் நகரத்துப் புறங்காடு, பழக்க வழக்கங்களால் வேறுபட்ட பல இனத்து மக்களுக்கும் ஏற்றவாறு அமைந்திருந்தது. அப்புறங்காடு, அந்நகர் வாழ் மக்களின் நாகரீக வளர்ச்சிக்கேற்பு வாய்ப்பும் வனப்பும் பொருந்தியிருந்தது.25

மழை வளம் குறையாப் பெரிய மலையில் தோன்றி, வெள்ளம் பெருக்கெடுத்தோடப் பாய்ந்து வரும் பெரிய பெரிய ஆறுகள்போல், உலக மக்களெல்லாம், ஒருங்கே விரைந்து நுழையவல்ல உயர்வும் அகலமும் உடைய, புகார் நகரத்துப் புறவாயில்கள். அவற்றுள், காவிரியாற்றுக்குக் கொண்டு விடும் மேற்றிசை வாயிலுக்குப் போகும் வழியின் இரு மருங்கும், நிழல் தரு மரங்களை வரிசையாக வளர்த்திருந்தனர்.26காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையின் மாலைக் காட்சி மனம் நிறையும் மகிழ்ச்சிதரும் மாண்புடையதாகும். கடல் கடந்த நாடுகளினின்றும் வந்து வாழும் வணிக மக்கள் கடற்கரை மணல்மீது, வகை வகையான பொருள்களை வரிசை வரிசையாக பரப்பி வைத்து, விலையை வாயாற்கூறாது, எல்லோரும் காண எழுதி வைத்து வாணிகம் புரிந்திருப்பர்.

அக்கடற்கரையில், மாலைக் காலத்தில் ஏற்றும் விளக்குகளை எண்ணிக் காணல் எவர்க்கும் இயலாது; சுண்ணம் முதலாம் வாசனைப் பொருள்களை விற்பவர் ஏற்றிய விளக்குகளும், பொற் கொல்லர் முதலாம் பல்வேறு தொழிலாளர்கள், தங்கள் தங்கள் தொழில் நிலையங்களில் ஏற்றிய விளக்குகளும், அப்ப வணிகரும், பிட்டு வணிகரும் குடத் தண்டுகள் மீது ஏற்றி வைத்த விளக்குகளும், பல்வகைப் பண்டங்களையும் விலை கூறி விற்கும் மகளிர், தம் கடைகளில் ஏற்றிய விளக்குகளும், கரையில் இருந்தவாறே,கடலில் செல்லும் கலன்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கும், கடல் மேல் சென்று மீன் பிடித்து வாழும் பரதவர், தாம் ஏறிச் செல்லும் திமில்களில் ஏற்றிய விளக்குகளும், வெளிநாட்டு மக்கள், தம் மாடங்களில் ஏற்றிய மணிவிளக்குகளும், பண்டப் பொதிகளை காத்துக் கிடக்கும் காவலர், அப்பண்டப் பொதிகளை சுற்றி ஏற்றி வைத்த விளக்குகளும் ஒன்று கூடி, கடற்கரை வெண்மணலில் வீழ்ந்த வெண்சிறு கடுகையும் எளிதில் எடுக்கவல்ல பேரொளி வீசிக் காவிரிப் பூம்பட்டினத்துக் கடற்கரையைக் கண்ணொளிகெடுக்கும் ஒளியுடையதாக்கிக் கவின் அளிக்கும்.27

ஆன்றோர் உண்மையால் அழியாது எனப் பாராட்டப் பெற்ற புகார் அழிந்து விட்டது. “என்னை குறித்து எடுக்கும் விழாவைப், புகார்நகர் மக்கள் என்று மறுக்கின்றனரோ, அன்றே அந்நகர் அழியும்” என்று இந்திரன் ஒரு சாபம் அளித்திருந்தான். கடல் கடந்த நாட்டில் பிறந்து, கலம் ஏறித் தன்னை நோக்கி வந்த தன் மகன் இடைவழியில் கலம் கவிழக் கடலில் வீழ்ந்து காணாது போயினன் என அறிந்த புகார் நகர் வேந்தன் வடிவேற் கிள்ளி, வருத்த மிகுதியால் விழா வெடுக்காது விடுத்தனாகப் புகாரைக் கடல் விழுங்கிற்று.28 இந்திர சாபம் உண்டோ, இல்லையோ புகார் இன்று இல்லை. அன்று புகார் இருந்த இடத்தில் இன்று, கடல் தன் ஆட்சி செலுத்துகிறது. புகார் மறைந்த மாநகரமாகி விட்டது.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

13. -சிலம்பு : 5.40-58

14. “மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்

கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்

மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்

பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்

அவத்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த

நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்”

-சிலம்பு 4:5:99-104.

15. வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த

கண்ணெழுத்துப் படுத்த, எண்ணுப் பல் பொதிக்

கடைமுக வாயிலும் கருத்தாழ்க் காவலும்

உடையோர் காவலும் ஒர் இயவாகிக்

கட்போர் உளர்எனின், கடுப்பத் தலை ஏற்றிக்

கொட்பினல்லது கொடுத்தல் ஈயாது

உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றம்”

-சிலம்பு : 5:111-11716. “கூனும் குறளும் ஊமும் செவிடும்

அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடிப்

பழுதில் காட்சி நன்நிறம் பெற்று

வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றம்”

சிலம்பு : 5:118-121

17. வஞ்சம் உண்டு மயற்பகை உற்றோர்,

நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்:

அமுல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்.

கழல் கண் கூளிக் கடுநவைப் பட்டோர்

சுழல வந்து தொழத் துயர்நீங்கும்

நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம்”

சிலம்பு : 5:122-127

18. “தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்,

அவம் மறைத்து ஒழுகும் அலவற் பெண்டிர்,

அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர்

பொய்க் கரியாளர், புறங் கூற்றாளர் என்

கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்

காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்

பூதம் புடைத்துணும் பூதசதுக்கம்”

சிலம்பு : 5:128-134

19. “அரைசு கோல் கோடினும், அறம்கூறு அவையத்து

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்

நாவொடு நவிலாது, நவைநீர் உகுத்துப்

பாவைநின்று அழுடம் பாவை மன்றம்”

சிலம்பு : 5:135-138

20. “கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில்

மடல் அவிழ் நெய்தலங்கானல் தடம்உளசோம குண்டம், சூரிய குண்டம், துறைமுழ்கிக்

காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு

தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்

போகம்செய் பூமியிலும் போய்ப் பிறப்பர்”

-சிலம்பு ; 9 : 57-62

21. “உயர் கோட்டத்து.

முருகு அமர்பூ முரன்கிடக்கை

வரியணி சுடர் வான் பொய்கை

இருகாமத்து இனை ஏரி”

பட்டினப் பாலை :36-39

“மலய மாருதம் மன்னர்க்கு இறுக்கும்

பன்மலர் அடுக்கிய நன் மரப்பந்தர்

இலவந்திகை”

சிலம்பு :10; 29-31

22. “இலவந்திகையின் எயிற்புறம் போகின்,

உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்.

மணி : 3:45-46

“உவவனம் என்பது ஒன்று உண்டு; அதன் உள்ளது

விளிப்பு அறை போகாது, மெய்புறத்து இடூஉம்

பளிக்கறை மண்டபம் உண்டு; அதன் உள்ளது

தூநிற மாமணிச் சுட்ரொளி விரிந்த

தாமரைப் பீடிகை தாமுண்டு; ஆங்கு இடில்

அரும்பு அவிழ்செய்யும்; மலர்ந்தன வாடா;

சுரும்பினம் மூசா”

மணி : 3; 62-68

23. மணி :3:49-53

24. சிலம்பு : 5:169-172; 9:9-13

25. மணி : 6:37-202.

26. சிலம்பு 10:26-27;32-33

27. “…………………………………விளக்கமும்

எண்ணும் வரம்பு அறிய இயைந்து ஒருங்கு

ஈண்டி

இடிக்கலப்பு அன்ன ஈர்அயிர் மருங்கில்

கடிப்பகை காணும் காட்சியது ஆகிய”

-சிலம்பு : 6:144-141

28. “மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்

தன் மணிஇழந்த நாகம் போன்று

கானலும் கடலும் கரையும் தேர்வுழி

வானவன் விழாக்கொள் மாநகர் ஒழிந்தது;

மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்

அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென

விட்டவள் சாபம்; பட்டது இதுவால்”

மணி: 25: 194-200

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்