Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 38 : அரங்கின் தோற்றம்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 : பூங்கொடிக்கு வரவேற்பு – தொடர்ச்சி)

பூங்கொடி

அரங்கின் தோற்றம்

பொய்யும் புளுகும் துணையாய் வாழ்வோர்,

தெய்வப் பெயரால் தீங்குகள் இழைப்போர்,

பதுங்கி நின்று பார்த்தனர்; பூங்கொடி

          ஒதுங்கிநின் றாரும் உணரும் வகையால்     70

          விளக்கி உரைத்தனள், வீணுரை யின்றித்

துளக்கம் இலளாய்த் தொகுத்தும் வகுத்தும்

இடையறா தருவி இழிதரல் மான

நடைஎழில் காட்டும் நல்லதோர் சொன்மழை     

          பொழிந்தனள்; மக்கள் புதுமழை கண்டு     75

          விளைந்தெழு பயிர்போல் விம்மிதம் கொண்டனர்,

குளிர்ந்தனர் நெஞ்செலாம், கொடும்அறி யாமைக்

களைகளைந் தெறிந்தனர், கருத்தினில் அடிமைத்

தளைகள் தறிந்தனர், விடுதலை தாங்கினர்;

அரங்கின் தோற்றம்

          மக்கட் பரப்பு வான்கடற் பரப்பென 80

          மிக்குக் கிடந்தது, மேடைஓர் மரக்கலம்

போல விளங்கிப் பொலிந்தது, பூங்கொடி

மாலுமி என்ன மதர்த்து நின்றனள்,

கயல்புலி விற்கொடி கப்பற் கொடிபோல் 

          உயர்வான் மிசையே ஓங்கிப் பொலிந்தது,  85

          அலையிடை மணியென ஆங்காங் கவிரொளி

நிலைவிளக் கெரிந்து நீளொளி பரப்பின,

எங்கணும் அமைதி இலங்க ஐம்பொறி

பொங்கும் உணர்வெலாம் புதியதோர் உணர்வாய்க்      

          குவிந்தன மேடையில்; குள்ள நரிச்செயல்   90

          பொதிந்த நெஞ்சினர் பொல்லாங் கிழைத்தனர்;  

—————————————————————

          துளக்கம் – நடுக்கம், இழிதரல் – இறங்குதல், மான – போல, சொன்மழை – சொற்பொழிவு, விம்மிதம் – பெருமிதம், தறிந்தனர் – அறுத்தனர், மதர்த்து – பெருமிதமுற்று.

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue