Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 : பூங்கொடிக்கு வரவேற்பு

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 : கோமகன் மறுமொழி – தொடர்ச்சி)

பூங்கொடி

பூங்கொடிக்கு வரவேற்பு

அழகிய அல்லி மலையுறை யடிகள்

அருண்மொழி முதலோர் அன்புடன் விடைதரச்  

          சுருளலை எழுப்பும் கருநிறக் கடலுள்,

பகைபிளந் தோடும் பான்மையன் போல

மிகுபுனல் பிளந்து மிதந்து விரையும்

மரக்கலம் ஏறி, மணிநீர்க் கடல்தன்

புறத்தினில் சூழ்தரல் போன்று மடமை      45

          அகத்தினில் சூழ்தர அல்லற் பாடுறும்

கடல்நகர்த் துறைமுகம் கண்டனள்; ஆயிடை

மடமை துடைக்கும் மனமுளோர் குழுமி   50

பூங்கொடிக்கு வரவேற்பு

          ஆழி அடங்க ஆர்ப்பொலி எழுப்பினர்,

வாழி எனுமொலி வான்முக டுற்றது,

          கதிரோற் கண்ட கடிமலர் போலப்

புதியோர்க் காணலும் பொலிந்தன முகமெலாம்,

உள்ளம் உவகை ஊற்றெடுத் தனவே,

கள்ளவிழ் மலராற் கட்டிய தெரியல்

சூட்டி மகிழ்ந்தனர், தோரண வகைகள்       55

          காட்டிய வீதிகள் கடக்க வழியெலாம்

வண்ண மலர்கள் வாரி இறைத்தனர்,

கண்கள் இமைத்திலர் கண்டனர், இன்னியம்

செவிவழிப் புகுந்து சிந்தையை நிறைக்கப்

புவியிற் காணாப் புதுமை கண்டனர்; 60

பூங்கொடியின் சொன்மழை

          இவ்வணம் ஊர்வலம் எழுந்திடல் நோக்கி

அவ்விய நெஞ்சினர் அஞ்சினர் அவரெலாம்        65

—————————————————————         

சூழ்தரல் – சூழுதல், ஆயிடை – அங்கு, ஆழி – கடல், முகடு – உச்சி, கடிமலர் – மணமிக்கதாமரை, கள் – தேன், தெரியல் – மாலை, இன்னியம் – இன்னிசை, அவ்விய – பொறாமையுற்ற.

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue