Skip to main content

தமிழ் வளர்த்த நகரங்கள் 19 – அ. க. நவநீத கிருட்டிணன்: கூத்தன் ஆடும் அம்பலங்கள்

 




(தமிழ் வளர்த்த நகரங்கள் 18 – அ. க. நவநீத கிருட்டிணன்: புராணம் போற்றும் தில்லை – தொடர்ச்சி)

13. தில்லைத் திருக்கோவில் கூத்தன் ஆடும் அம்பலங்கள்


தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் திருக்கோவில், இறைவன் திருக்கூத்து நிகழ்த்தும் ஐந்து சபைகளில் ஒன்றாகும். பொன் மன்றம், மணி மன்றம், வெள்ளி மன்றம், செப்பு மன்றம், சித்திர மன்றம் ஆகிய ஐந்தனுள் முதன்மை வாய்ந்த பொன் மன்றமாகிய கனகசபை, தில்லையில்தான் அமைந்துள்ளது.

பொன்மன்றின் உள்ளமைந்த சிற்றம்பலத்தில் கூத்தப்பெருமான் காட்சியளிக்கிறான். இச் சிற்றம்பலமும் இதன் முன்னமைந்த பேரம்பலமுமே திருக் கோவிலின் பழைய அமைப்புகளாகும். இவை மரத்தால் அமைக்கப்பெற்றிருத்தலே பழமைக்குப் போதிய சான்றாகும். பல்லவர்கள் எழுப்பிய குகைக் கோவில், கற்கோவில்களுக்கு முந்தியன தில்லை யம்பலங்கள் என்பதை அறியலாம். அக் காலத்தில் இரண்டாம் சுற்றுவெளியில் உள்ள திருமூலட்டானேசுவரர் திருக்கோவிலும் சிறப்புற்றிருத்தல் வேண்டும்.

தில்லையிலுள்ள ஐந்து மன்றங்கள்

தில்லைக் கோவிலுள்ளேயே ஐந்து சபைகள் அமைந்துள்ளன. அவை சிற்றம்பலம், பேரம்பலமாகிய கனகசபை, தேவசபை, கிருத்தசபை, இராசசபை என்பனவாம். சிற்றம்பலத்தைச் சிற்சபையென்பர். இதுவே கூத்தப்பெருமான் சிவகாமசுந்தரியம்மையுடன் காட்சியளிக்கும் கருவறையாகும். இதன் சிகரத்தில் உள்ள பொன்னேடுகள் ஒவ்வொன்றிலும் ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை எழுதி வேய்ந்திருப்பதாகத் தில்லையுலாக் கூறுகின்றது. இப் பகுதியில்தான் சிதம்பர இரகசியம் அமைந்துள்ளது. இறைவன் வான் வடிவில் விளங்கும் உண்மையைப் புலப்படுத்த, மந்திர வடிவில் திருவம்பலச் சக்கரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிப் பொன்னாற் செய்த வில்வமாலையொன்று விளங்குவதைக் காணலாம்.

சிற்றம்பலத்தின் சிறப்பு

மேலும் இச் சிற்றம்பலத்தில் இறைவன் உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூவகைத் தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளான். கூத்தப்பெருமான் திருமேனி உருவம் ஆகும்; இரகசியம் அருவமாகும்; படிக இலிங்கமாகிய அழகிய சிற்றம்பலமுடையார் அருவுருவ மாகும். இங்கு இரத்தின சபாபதியும் சுவர்ணகால பைரவரும் காட்சியளிக்கின்றனர்.

பொன்னம்பலத்தின் பொலிவு

கனகசபையாகிய பொன்னம்பலம், சிற்றம்பலத்திற்கு எதிரே அமைந்த பேரம்பலமாகும். இதில்தான் பெருமானுக்கு எப்போதும் திருமுழுக்குச் சிறப்புகள் நடைபெறும். தேவசபையில் உற்சவ மூர்த்திகள் எழுங்தருளியுள்ளனர். இதனை அநபாய சோழன் பொன்னால் மெழுகிப் பொன்மயமாக்கினன் என்று பெரியபுராணம் பேசுகிறது.

நிருத்த சபை

நிருத்த சபை என்பது தேர் அம்பலமாகும். இது கூத்தப்பெருமான் திருமுன்னர்க்கொடிமரத்தின் தென் பால் அமைந்துள்ளது. இம் மண்டபம் குதிரைகள் பூட்டிய தேரின் அமைப்பைக் கொண்டதாகும். இது சித்திர வேலைப்பாடமைந்த ஐம்பத்தாறு தூண்களால் தாங்கப்பெற்றது. இதன்கண் ஊர்த்துவத் தாண்டவர் காண்டற்கினிய தோற்றத்துடன் விளங்குகிறார்.

இராசசபை

இராசசபை யென்பது ஆயிரக்கால் மண்டபமாகும். கூத்தப்பெருமான் ஆண்டில் இருமுறை ஆணித் திருமஞ்சன விழாவிலும் மார்கழித் திருவாதிரை விழாவிலும் இச் சபைக்கு எழுந்தருளுவான். தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் பாடியது இச் சபையிலிருந்து தான். இது தேவாசிரிய மண்டபம் என்றும் வழங்கும். இதில் வரிசைக்கு இருபத்து நான்கு தூண்களாக நாற்பத்தொரு வரிசைகள் அமைந்துள்ளன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் அழகிய யானை வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்வரிசைச் சுற்றுக்களில் கூத்தினர், இசையாளர் உருவங்கள் பெருவனப்புடன் அமைந்துள்ளன. கூத்தப்பெருமான் தில்லையில் உள்ள இவ்வைந்து சபைகளுக்கும் தலைவனதலின் அவனைச் சபாநாயகன், சபாநாதன், சபாபதி என்றெல்லாம் போற்றுவர்.

சிவகங்கைத் திருக்குளம்

ஆயிரக்கால் மண்டபமாகிய இராசசபைக்கு மேல்பால் மிகவும் தொன்மை வாய்ந்த தீர்த்தமாகிய சிவகங்கைக்குளம் அமைந்துள்ளது. இதில்தான் சிம்மவர்மனாகிய பல்லவ மன்னன் நீராடித் தனது வெம்மை நோய் விலகப்பெற்றான்; தனது மேனியும் பொன்னிறம் அடையப்பெற்றான். இத்தகைய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்குளத்தை அப் பல்லவன் புதுப்பித்தான். இதன் அழகிய திருச்சுற்று மண்டபத்தையும் படிகளையும் எடுப்பித்தவன் தொண்டை காட்டு மணவிற் கூத்தனாய காளிங்கராயன் என்பான். இவனை நரலோக வீரன் என்றும், பொன்னம்பலக் கூத்தன் என்றும் போற்றுவர்.

நரலோகவீரன் திருப்பணிகள்

சிறந்த சிவபத்தகிைய நரலோகவீரன் முதற் குலோத்துங்கனின் படைத்தலைவனாகப் பணிபுரிந்தவன், தில்லைக் கூத்தனிடம் எல்லையில்லாப் பேரன்பு பூண்டவன். அவன் திருக்குளத்தை அணிசெய்ததோடன்றி நூற்றுக்கால் மண்டபம் ஒன்றையும் அமைத்தான். சிவகாமியம்மனின் தனிக்கோயிலுக்குத் திருச் சுற்று மதில்களும் மீண்டபங்களும் சுற்றுவெளியும் அமைத்தான்.

அநபாயன் திருப்பணி

சிவகாமியம்மன் திருக்கோயில் அமைத்தவன் அநபாய சோழன், இரண்டாம் குலோத்துங்கனாவான். இதனை இராசராச சோழன் உலாவும் தக்கயாகப் பரணியும் குலோத்துங்கச் சோழன் உலாவும் கூறுகின்றன. இக் கோவிலின் முன்னமைந்த மகா மண்டபம் பெருமிதமான தோற்றமுடையது. இதன் கண் உள்ள இரட்டைத் தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத் தூண்களில் கற்சங்கிலித் தொடரைத் காணலாம். இக் கோவிலின் திருச்சுற்று மண்டபங்கள் சிற்பங்கள் நிறைந்தவை. கூத்தாடும் மகளிரும் வாத்தியக்காரரும் சிற்பங்களாகத் திகழ்கின்றனர்.

இராசகோபுரங்கள்

தில்லைக் கோவிலின் நான்கு பக்கங்களிலும் பெருமிதமாகக் காட்சி தரும் நான்கு இராசகோபுரங்கள் விளங்குகின்றன. இவை பல அரசர்களால் கட்டப் பெற்றவை. கோபுர வாயில்களில் உள்ள நிலைத் ததூண்கள் மூன்றடிச் சதுரமும் முப்பதடி உயரமும் உள்ள ஒரே கல்லால் ஆயவை. அவற்றின் மேல் முதல்தளம் கருங்கற்களாலும் அதன் மேற்றளங்கள் எல்லாம் செங்கற்களாலும் சுதையாலும் அமைக்கப் பெற்றவையாகும். கோபுரத்தின் மாடங்களில் இறைவனின் பல திருக்கோலங்கள் கண்டவர் உள்ளத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

கிழக்குக் கோபுரம்

இக் கோவிலின் கிழக்குக் கோபுரத்தை எழுநிலை மாடமாக எழுப்பியவன் இரண்டாம் குலோத்துங்கனாவான். இவனே வடக்குக் கோபுரத்தையும் கட்டத் தொடங்கியுள்ளான். கிழக்குக் கோபுரத்தைக் குலோத்துங்கனுக்குப்பின்னர்க், காடவர்கோனகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருத்தியமைத்தான். பிற்காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் பச்சையப்ப முதலியாரும் அவர் தமக்கை யாரும் இக் கோபுரத்தை மேலும் அழகுபடுத்தினர்.

இக் கோபுரத்தின் மாடங்களில் பரத சாத்திரத்தில் பகரப்பெறும் நூற்றெட்டு காட்டிய பேதச் சிற்பங்களைக் காணலாம். அச் சிற்பங்களின் மேல் பரத சாத்திரத்தில் கூறியுள்ளவாறே அவற்றைப்பற்றிய விளக்கங்களும் காணப்படுகின்றன. இக் கோபுரமெங்கணும் அற்புதச் சிற்பங்கள் பல காணப்படுகின்றன.

மேற்குக் கோபுரம்

மேற்கு இராச கோபுரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பெற்றதெனப் பல கல்வெட்டுகள் பகர்கின்றன. இதிலும் நாட்டியச் சிற்பங்கள் பல காணப் படுகின்றன. கோபுரத்தின் வெளிநிலையில் அமைந்துள்ள முருகன் திருக்கோவிலும் கற்பக விநாயகர், திருக்கோவிலும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை.

வடக்குக் கோபுரம்

வடக்கு இராச கோபுரம் விசயநகர மன்னரான கிருட்டிணதேவராயரால் கட்டப்பெற்றது. அவர், தாம்பெற்ற ஒரிசா வெற்றியின் அறிகுறியாகச் சிற்றம் பலவனை வழிபட்டு இதனைக் கட்டி மகிழ்ந்தார். இது கி. பி. 1516இல் கட்டப்பெற்றதெனக் கல்வெட்டுகள் சொல்லுகின்றன. இக் கோபுர வாயில் நிலைப்புரை யொன்றில் கிருட்டிணதேவராயரின் உருவச் சிலையொன்று காணப்படுகிறது. இதிலும் பரத நாட்டியச் சிறப்பை விளக்கும் பல சிற்பங்கள் உள்ளன.

தெற்குக் கோபுரம்

தெற்கு இராச கோபுரம் எழுநிலை மாடங்களை யுடையது. இது பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற் பகுதியில் கட்டப்பெற்றது. இதனைக் கட்டியவன்; சொக்கச்சியன் என்ற முதற் கோப்பெருஞ் சிங்கனாவான். அதனால் இக் கோபுரத்தைச் சொக்கச்சியன் எழுங்கலக் கோபுரம் என்று சொல்லுவர். இதில் இரண்டு கயல் உருவங்கள் காணப்படுகின்றன, அவற்றைக்கொண்டு இது சுந்தரபாண்டியனால் கட்டப் பெற்றதென்பர் சிலர். கோப்பெருஞ்சிங்கன் இதனைக் கட்டிய காலத்தில் பாண்டியருக்கு அடங்கிய குறுகில மன்னனாக இருந்தான் என்பதையே அக் கயல்கள் விளக்குவனவாகும். இதன் வெளி நிலைகளிற் காணப்படும் அருத்த நாரீசுவரர், திரிபுராந்தகர், மகிடாசுரமர்த்தனி, பிச்சாடனர் முதலிய திருவுருவங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடையன.

பாண்டிய நாயகம்

இத் திருக்கோவிலின் வடமேற்கு மூலையில் வடக்குக் கோபுரத்திற்கு அணித்தாகப் ‘பாண்டிய நாயகம்’ என்னும் கோயில் அமைந்துள்ளது. இது மாறவர்மன் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பெற்றது. தேரைப்போன்ற வடிவுடன் உருளைகள் மாட்டப் பெற்று, யானைகள் பூட்டி இழுப்பதுபோன்று அமைக்கப்பெற்ற அரியதொரு மண்டபம் இது. இதன் கண் ஆறுமுகப்பெருமான் மயில்மீது அமர்ந்து, வள்ளி தெய்வயானையுடன் காட்சியளிக்கிறார். ஆறுமுகப் பெருமான் திருவுருவம் சிறந்த வேலைப்பாடுடையது. மண்டபத்தின் உட்புறமெங்கும் திருமுருகாற்றுப் படையில் கூறப்பெறும் ஆறு படைவீடுகளின் காட்சிகள் மிகவும் அழகான வண்ண ஒவியங்களாகக் காண்பவர் கண்ணைக் கவர்கின்றன.

திருத்தொண்டத்தொகையிச்சரம்

இங்குள்ள சிவகங்கையின் வடகரையில் வலிங்கக் கோயில் அமைந்துள்ளது. பெரிய புராணத்தில் பேசப் பெறும் தொகையடியார்கள் ஒன்பதின்மரையும் ஒன்பது சிவலிங்க வடிவங்களாக அமைத்து வணங்கும் தலம் இது என்பர். இதனைத் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்றும் குறிப்பர்.

தில்லைக் கோவிந்தர் சங்கிதி

தில்லைப் பொன்னம்பலத்தின் முன்னான் கிழ்க்கு நோக்கித் தில்லைக் கோவிந்தராசர் சந்நிதி அமைந்துள்ளது. இதனை அமைத்தவன் இரண்டாம் நந்திவர்மனாகிய பல்லவ மன்னனாவான். இதனைத் திருமங்கை யாழ்வார், “பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து படைமன்னவன் பல்லவர்கோன் பணிந்த, செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்திரகூடம்” என்று போற்றினர்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய தில்லைத் திருக்கோவில் பன்னூறு ஆண்டுகளாகச் சைவ நன்மக்களின் தலையாய தெய்வத்தலமாகத் திகழ்கிறது. அவர்கள் ‘கோயில்’ என்று கொண்டாடும் தனிமாண்புடையது.

(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue