Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 58

 அகரமுதல






(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57 தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்
அத்தியாயம் 21
 தொடர்ச்சி

இரவு எல்லாரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்? வாழ்க்கையை நோக்கிப் புறப்பட்டிருந்தான் என்றே கூறலாம். அதன்பின் அரவிந்தன் இன்றைக்கு இருக்கிற அரவிந்தனாக மாறி வளர்ந்தது துன்பங்களும், வேதனைகளும் நிறைந்த கதை. உழைப்பினாலும், தன்னம்பிக்கையாலும் அவன் வளர்ந்தான். படித்தான். காலையில் பத்து மணி வரையும், மாலையில் ஐந்து மணிக்கு மேலும் ஓட்டல்களில் டேபிள் கிளீனர் வேலையோ, சப்ளையர் வேலையோ எது கிடைத்தாலும் பார்த்தான். மதுரை இரயில் நிலையத்துக்கு அருகில் அந்த நாளில் ‘பீமவிலாசம்’ என்ற பெரிய ஓட்டல் இருந்தது. அதன் முதலாளி தங்கமான மனிதர். அவர் தம் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் அவனை அனுமதித்தார். ஓட்டலுக்கு அருகில் இரயில் நிலையத்தில் மேற்குப் புறத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தான் அரவிந்தன். அவனோடு படிக்கிற மாணவர்கள் ஐந்து மணிக்கு மேல் அதே ஓட்டலுக்குச் சிற்றுண்டி உண்ண வருவார்கள். அழுக்குத் துணியும் கையுமாக மேசை துடைக்க நின்று கொண்டிருக்கும் அவனைக் கண்டு கேலி செய்வார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். வகுப்பிலே அவனுக்கு ‘டேபிள் கிளீனர்‘ என்ற பட்டப் பெயர். பல்லைக் கடித்துக் கொண்டு இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டான் அரவிந்தன். சில நாட்களில் உடைமாற்றிக் கொள்ள நேரமிருக்காது. ஓட்டலில் வேலை செய்த அழுக்குகள் படிந்த உடையோடு பள்ளிக்கூடத்துக்கு ஓடுவான். சில ஆசிரியர்கள் அவனுடைய தோற்றத்தைப் பார்த்து ஏளனமாக நகைப்பார்கள். பையன்கள், “டேய் டேபிள் கிளீனர், முதலில் உன்னைக் ‘கிளீன்‘ பண்ணிக்கோடா!” என விசில் அடித்துக் கேலி பேசுவார்கள்.

பதின்மூன்று வயதிலிருந்து இருபதாவது வயது வரை உள்ள காலம் அவனுடைய வாழ்க்கையைக் கடுமையான உழைப்பினால் மலர்வித்த காலம். கேவலமோ ஏளனமோ பாராமல் அவன் உழைத்துத் தன்னை வளர்த்துக் கொண்ட காலம் அது. தெருத் தெருவாகத் தினசரிப் பேப்பர்களைக் கூவி விற்று அதில் கிடைக்கும் கமிசனைப் பள்ளிச் சம்பளமாகக் கட்டியிருக்கிறான். அச்சாபீஸில் தாள் மடித்திருக்கிறான். வேறு ஒரு வேலையும் கிடைக்காத இரண்டொரு சமயங்கள் மூட்டை தூக்கிக் கிடைக்கிற கூலியைக் கொண்டு பள்ளிக்கூடப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறான். அவனுடைய வயதில் அப்படி அவனைப் போல் உழைத்து முன்னுக்கு வருவது என்பது எல்லாருக்கும் முடியாத காரியம். அவன் பிடிவாதமாக முன்னுக்கு வந்தவன்.

இந்த இளமை அனுபவங்கள்தான் வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தையும், உயர்ந்த இலட்சியங்களையும், அவன் மனத்தில் வளர்த்திருந்தன. ஏழைகளின் மேல் இரக்கமும் சமூகப் பிரச்சினைகளில் அனுதாபமும் உண்டாகிற பக்குவமும் அவன் மனத்துக்கு கிடைத்திருக்கிறதென்றால், அதற்கும் அவனுடைய இளமை வாழ்வே காரணம். ‘உல்லாசமும் இளமைத் திமிரும் கொண்டு கன்றுக்குட்டிகள் போல் திரிகிற வயதிலேயே உழைத்துத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்’ என்ற தாகமெடுத்து மதுரைக்கு ஓடி வந்தவன் அவன். அந்தத் தாகம் தணிந்த பின்பே அவன் பிடிவாதம் தளர்ந்தது.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனுடைய தமிழாசிரியர் ஒருவர் அவனை மீனாட்சி அச்சக உரிமையாளரிடம் அழைத்துப் போய்ச் சிபாரிசு செய்ததும், அவன் அங்கு சேர்ந்து தன் திறமையாலும், நேர்மையாலும் முன்னுக்கு வந்ததும் காலத்தின் போக்கில் நிகழ்ந்து நிறைந்தவை. தான் நினைத்தபடியே உழைத்து மேல்நிலைக்கு வந்து விட்டதை நினைக்கும் போது அரவிந்தன் ஆச்சரியம் கொள்வான். தன்னைப் போன்றவர்களுக்காகவே, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்‘ என்று திருவள்ளுவர் கூறிச் சென்றிருக்கிறாரோ என்று நினைத்து நினைத்து வியப்புக் கொள்வான் அவன்.

அன்று கோடைக்கானலுக்குப் புறப்படுகிற நேரத்துக்கு அந்தத் தந்தி வந்தபோது துன்பங்கள் நிறைந்த தன் இளமை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் சித்திரங்கள் போல் நினைவு வந்தது அரவிந்தனுக்கு. அவற்றை நினைக்கத் தூண்டியது அந்த தந்திதான்.

“சிற்றப்பா இறந்து விட்டார்! உடனே புறப்பட்டு வரவும்” என்பது தான் தந்தியில் கண்டிருந்த வாசகம். கடைசிக் காலத்தில் அந்தச் சிற்றப்பா நீரிழிவு வியாதியால் படுத்த படுக்கையாகி விட்டார். தன் பிறந்த வீட்டு வழியில் எவரையாவது தத்து எடுத்துக் கொள்ளச் செய்து சொத்துகள் எல்லாம் கைமாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பகற்கனவு கண்டு கொண்டிருந்த சித்தி அவரையும் முந்திக் கொண்டு இறந்து போயிருந்தாள். தனியாக நோயுடன் கிராமத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருடைய காலமும் முடிந்து விட்டதென்று இதோ இந்தத் தந்தி சொல்லுகிறது. அரவிந்தன் மதுரையில் இருப்பது கிராமத்தில் உறவினர்களுக்குத் தெரியும். சிறுமைகளும், பணத்தாசையும் நிறைந்த அவர்களோடு நெருங்கிப் பழகவே இப்போது அவனுக்கு அருவருப்பு ஏற்பட்டிருந்தது. ‘இந்தத் தந்தியைக் கொடுத்த உறவினர்கள் என்ன பொருளில் எதற்காக அவனுடைய பெயருக்குக் கொடுத்திருக்கிறார்கள்’ என்பது அவனுக்குப் புரிந்தது.

அவருக்கு வேறு வாரிசு இல்லை. ‘அவன் போய்த்தான் கொள்ளி வைக்க வேண்டும். அவர் தான் அன்று அந்தப் பச்சைப் பிள்ளை வயதில் அவனை அடித்துத் துரத்தினார். அவர் துரத்தியிராவிட்டால் இன்று இப்படி ஆகியிருக்க முடியாது. அவன் சிற்றப்பாவும், சித்தியும் படுத்தி அனுப்பிய கொடுமையில் தான் அவனுக்கு ‘வாழவேண்டும், தன் முயற்சியால் வளர வேண்டும்’ என்ற வைராக்கியமே உண்டாயிற்று. அந்த வைராக்கியமே அவனை வளர்த்தது.

‘மறுபடியும் அவருடைய வீட்டு வாயிற்படியை மிதிப்பதில்லை’ என்ற வைராக்கியத்தோடு அன்று அவன் கிளம்பியிருந்தான். அந்த உறுதியான பிடிவாதத்தின் பயனை இன்று அவன் அடைந்து விட்டான். ஆனால் சிற்றப்பா ஊரையெல்லாம் ஏமாற்றி உறவினரை வஞ்சித்து மற்றவர்கள் எல்லாம் ஏழையாகும்படிப் பிறரை அழச் செய்து பணமும், நிலமும் சேர்த்தாரே, அதன் விளைவை அடையாமலே செத்துப் போய்விட்டாரே? சாவாவது நன்றாக வந்ததோ? நீரிழிவு நோயோடு எழுந்து நடமாட முடியாமல் திணறி வேதனைப்பட்டு, ‘நான் விரைவில் சாக வேண்டும்’ என்று வருந்திச் சாவுக்கு ஏங்கச் செய்து வந்த சாவு அல்லவா அவருடைய சாவு? ‘மனிதர்கள் என்னவோ பணத்தாலேயே எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு போய்விடலாம்’ என்று பார்க்கிறார்கள். பணம் ஓர் அழகான சொப்பனம். கனவு எத்தனை அழகாயிருந்தாலும் விரைவில் அதிலிருந்து விழித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் சிற்றப்பாவைப் போல் ஆக வேண்டியதுதான்’ என்று தந்தியைப் படித்து விட்டு நினைத்துக் கொண்டான் அவன்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue