Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை

 

 கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை



(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை-தொடர்ச்சி)

          மணக்கும் தென்றல் மாமலை எழிலும்,

கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும்,

நீடுயர் தண்ண்ணிய நீல மலையுடன்

கண்டுளங் குளிர்ந்த காரிகை ஒருத்தி  

          சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித்    55

          `தமிழிசை வளர்க்கும் தையாஅல் நின்னுழை

அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும்

ஆர்வங் கொண்டுளேன் ஆதலின் அருள்நலங்

கூர்விழி யாய்நின் குழுவினுள் எனையும்        

          சேர்த்தருள் செய்’கெனச் சேயிழை வேண்டலும்,      60

          `வருக தோழி வாழ்கநின் வேட்கை!

வருவோர் தமக்கெலாம் தமிழிசை வழங்குதல்

தொழிலாப் பணியாத் தொடங்கினம் இதனை;

பிழையாப் பயனும் விளையா நின்றது 

          கண்டுளங் களிக்கும் காலை எம்முழைச்        65

          சண்டிலி நீயும் சார்ந்தனை வாழி;!

அயன்மொழி பேசும் அரிவைநீ யாயினும்

வியன்பெருங் காதல் விருப்பொடு வந்தனை,

பயிலுங் குழுவினுள் பாங்குடன் நீயும்    

          குயிலிசை பயில்கெனக் கூறினள் பூங்கொடி; 70

—————————————————————

          தண்ண்ணிய – குளிர்ந்த (ஒற்றளபெடை) தையாஅல் – பூங்கொடியே!, சேயிழை – சண்டிலி.

++++

          மூளும் அருள்மன முத்தமிழ்ச் செல்வி

நாளும் நாளும் நல்லிசை யமிழ்தம்

வாரி வாரி மகிழ்ந்தனள் வழங்கலும்,

நேரிழைச் சண்டிலி நிமிர்ந்தெழும் அவாவினள்      

          காய்பசி வருத்தக் கடுந்துயர் உழந்தோன்       75

          வாய்புகும் உணவினை மகிழ்ந்துண விரையும்

ஆர்வலன் என்ன ஆஅர மாந்தினள்

சோர்விலள் வைகலும் சொல்லிசை பயின்றனள்;    

          தமிழிசை பயிலும் தணியா வேட்கையள்       

          தமிழக மாந்தரும் தம்முள் வியக்க         80

          முன்னணி எய்திய மொய்குழல் மொய்ம்பினை

முன்னின் றுணர்ந்த மென்னடைப் பூங்கொடி

`நின்குரல் மென்குரல் நன்குரல் ஆதலின்

மென்மொழி இசைக்கு மெருகுறல் கண்டேன்;         

          பண்ணிசைப் பயிற்சியில் பகரரு முயற்சியும்          85

          திண்ணிய நெஞ்சும் திரிபிலா வேட்கையும்

நண்ணினை யாதலின் நலமுயர் தோழி,

எண்ணிய எண்ணியாங் கெய்தினை வாழி!   

          ஒன்றுனை வேண்டுவல், உன்வர லாற்றினை 

          இன்றுணர் விழைவினென் என்பால் உரைத்திடல்    90

          நன்றெனின் நவிலுதி’ என்னலும் நங்கை

தூமென் கொடியைத் தொழுதனள் உரைக்கும்,

`கோமகள் நினக்குக் கூறுதல் என்கடன்;

விந்தங் கடந்தொரு வியனகர் உண்டு   

—————————————————————

          காய்பசி – கொடும்பசி, ஆஅர – நிறைய, மொய்குழல் – சண்டிலி, மொய்ம்பினை – திறத்தை, பகரரு – கூற இயலாத.

+++++++++++++++++++

          நந்தலில் செல்வ நலத்தது வளத்தது,       95

          அந்தம் மிகுந்தது எந்திரத் தொழிலது,

தந்தை அவ்வூர்த் தலைமகன் ஆவர்,

செந்தமிழ் முதலாச் செம்மொழி பலவும்

சிந்தித் தாயும் திறனும் உடையார்;         

          முந்தை நகர்க்கு மொழிபெயர் அளகை; 100

          அந்நகர் வாழ்வேன், அன்புறு கொழுநன்

தன்னொடு தென்திசைத் தண்மலை எழிலெலாம்

காணிய வந்தனென்; கண்கவர் நெடுமலை,

சேணுயர் முகிலினம் சென்றிடை தழுவும்       

          நீலப் பெருமலை, நீடுயர் சாரல்     105

          கோலத் திருமலை, கோடைக் கொடுமையைச்

சோலைச் செறிவால் தொலைத்திடு முதுமலை இன்னன பலகண் டின்புறும் எல்லையில்

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்