Skip to main content

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 02. என் கடன் பணி செய்து கிடப்பதே!





(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01 – தொடர்ச்சி)

1. என் தமிழ்ப்பணி

என் கடன் பணி செய்து கிடப்பதே!

1932 : செய்யாறு உயர்நிலைப் பள்ளியில் 8-வது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழாசிரியர், உயர் திருவாளர், மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள். எங்கள் ஊரில் பானு கவியார் என்ற பெரும் புலவர், துறவியார் இருந்தார். வடலூர் வள்ளலார் இயற்றிய அருட்பா குறித்து எழுந்த “அருட்பா, மருட்பா’ வாதத்தில் அருட்பாவாத நெறியாளரோடு நின்று வாதிட்ட வன்மையாளர். எங்களூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு வேதபுரீசுவரர், திருஞான சம்பந்தர் அவர்களால், ஆண்பனை பெண்பனையாகப் பாடப்பெற்ற பெருமைக்குரிய பெருமான். அவர் துணைவியார் பாலகுசாம்பிகையார், அந்த அம்மையார் மீது “இளமுலைநாயகிப் பிள்ளைத் தமிழ்” என்ற பொருள் செறிந்த நூலைப் பாடியவர் பானுகவியார். அத்தகு பெரும் புலமை வாய்ந்த பானுகவியாரை வாதத்தில் வென்றவர் திரு வீரபத்திரப்பிள்ளை அவர்கள்.

அவர் வேலூரில், இன்று வெங்கடேசுவரா மேல்நிலைப்பள்ளி என அழைக்கப்பெறும் அன்றைய சிரீமசுந்து தேவத்தான உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று விட்டார்.

அவர் இடத்திற்குக் காவேரிப்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்திருக்க திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வந்து சேர்ந்தார். தென் ஆர்க்காடு மாவட்டம். மயிலத்துக்கு மேற்கில் பத்து கி. மீ. தொலைவில் உள்ள ஒளவையார் குப்பம் என்ற ஊரில், அவ்வூர்க் கணக்கு எழுதி வந்த திரு. சுந்தரம்பிள்ளை அவர்களின் மகனாகப் பிறந்தமையால் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை என அழைக்கப்பட்டவர்.
மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள் எங்கே, இவர் எங்கே, எனச் சில நாள் இவரை மதிக்காமலே இருந்த மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒளவை அவர்களின் பாடம் நடத்தும் முறை புதுமையானது. அன்று நடத்த வேண்டிய பாடத்திற்கான குறிப்புகளை முன்பாகவே தேர்வு கொண்டல்லது பாடம் எடுக்கமாட்டார்; பாக்களை இசையோடு பாடுவார்; சொல் பிரித்து பொருள் விளங்கப் பாடுவார்; புதிய பாடம் எடுத்துக் கொள்வதற்கு முன்னர், பழைய பாடத்தை மாணவர் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளச் சில பல கேள்விகளைக் கேட்பார்.

அம்முறையில் ஒரு நாள் அரிச்சந்திர புராணத்தில் வரும் “அவமே புறம் அறைந்தமை” என்ற தொடரில் வரும் “அறைந்தமை” என்ற சொல்லுக்குச் சொல்லிலக்கணம் கூறுமாறு கேட்டார். அதுவரை இலக்கணம் என்றால், இலக்கணத்திற்குப் பாடமாக வைத்திருக்கும் நூலில் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களை ஒப்பிப்பதோடு சரி: அதனால் சொல்லிலக்கணம் என்பது என்ன எனப் புரியாமல் விழித்தோம். அவர் “இடவழுவமைதி தனித் தன்மைப் பன்மை” என்பதுதான் இதன் சொல்லிலக்கணம் என்றார்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இடமாவது, வழுவாவது அமைதியாவது, தனித்தன்மைப் பன்மையாவது” என விழித்தோம். அதன் பிறகு இவரிடம் நல்ல தமிழ், அறிவு இருக்கிறது என்பதை உணர்ந்து மதிக்கத் தொடங்கினோம்.
வகுப்பில் ஒருநாள் “என்னிடம் தமிழ் கற்க விரும்பும் மாணவர்கள் எழுந்து நிற்கலாம்” என்றார். எல்லாரும் எழுந்து நிற்கவும், உடனே அவர், என்னிடம் படிப்பதானால், மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும்! அதற்கு ஒப்புக் கொள்பவர் மட்டுமே நிற்கலாம் என்றார். நான், மா. கந்தசாமி, வ. வேதபுரி, பி. குப்புராவு, ஆகிய நால்வர் மட்டுமே நின்றோம்.


மாலையில் வீட்டிற்குச் சென்றோம் பணத்தோடு! தமிழ் கற்க எந்த அளவு ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவே, ஐந்து ரூபாய் சம்பளம் என்றேன். சம்பளம் எதுவும் வேண்டா. தமிழ் கற்றுத் தருகின்றேன் என்றார்.
வகுப்பு தொடங்கிற்று. திரு. உலகநாதம் பிள்ளை அவர்கள் இயற்றிய ‘கன்றும் கனி உதவும்’ என்ற உரைநடை நூலைக் கொடுத்து, அதை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பணித்தார். பாரி மகளிர் வரலாறு கூறும் சிறந்த உரைநடை நூல் இது. அது முடிந்ததும் “கார் நாற்பது”, “களவழி நாற்பது” என்ற எளிய பொருள் விளக்கம் பெறவல்ல, அதே நிலையில் ஆழமான பொருள் நிறைந்த நூல்களைக் கற்றுத் தந்துவிட்டுப், பின்னர் ஒருநாள். தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், ஒரு நாள் திருக்குறள் பரிமேலழகர் உரை எனச் சொல்லித்தந்தார்.

பாடம் தொடங்குமுன்:
திருவிளங்கு பலமொழியும் சீர்விளங்கு
புலவர் பலர் சிறப்பத் தோன்றி
உருவிளங்கு பாக்கள் பல உரைகள்
பல ஆக்குதநல் உளவாம் வாய்மை
மருவிளங்கு தமிழ் மொழியின் மருங்கு
எழுந்தது என விளங்கும்
திருவிளங்கு வள்ளுவனார் திருக்குறள் கண்டவர்
அடியைச் சிரமேற் கொள்வாம்.

என்ற பாடலை எல்லோருமாகப் பாடுவோம்.


1934-இல் பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும் அவர் தந்த பயிற்சியின் துணையால் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களை நானே படிக்கத் தொடங்கினேன்.
1935-இல் “காவேரி” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதி, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடாகிய “தமிழ்ப் பொழி”லுக்கு அனுப்பினேன். அது வெளிவந்த பிறகே ஆசிரியர்க்குத் தெரியும். இதுவே என் எழுத்துப் பணியின் தொடக்கம்.
ஊரில் “வாகீச பக்த சன சங்கம்” என்ற பெயரில் ஒரு தமிழ்ச் சங்கம் இருந்தது. அது மேலே கூறிய திருக்கோயில் திருவிழா நடைபெறும் தைத் திங்களில் பத்து நாட்கள் உபயச் சொற்பொழிவு நடத்தி வந்தது. ஒளவை அவர்கள் பங்கு கொண்டதும், அது புதுநடை போடத் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் உள்ளிட்ட பல சமயப் புலவர்கள் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்கள். அவர்கள் பேசியன எல்லாம் கேட்ட எனக்கும் “நாமும் ஏன் பேசக் கூடாது” என்ற உணர்வு எழவே, ஆசிரியர் அறிவுரையோடு “சைவ இளைஞர்கள் முன்னிற்கும் கடமைகள்” என்ற தலைப்பில் பேசினேன். அதுவே என் முதற் பேச்சு.


எங்கள் ஊரில் “பானு கவி மாணவர் தமிழ்ச் சங்கம்” என்ற பிறிதோர் அமைப்பும் இருந்தது. கம்ப இராமாயணத்தை ஆழ்ந்து படிக்காமலே பட்டிமன்றம், வழக்காடு மன்ற மேடைகளில் நின்று கொண்டு வெறும் சொல் சாலம் காட்டுவார் போல் அல்லாமல் ஆழமாகப் படித்து “வாலி வழக்கு” என்பது போலும் அரிய நூல்களைப் படைத்த அமரர் திரு. புரிசை முருகேச முதலியார் போன்றவர்கள் பானுகவியாரின் மாணவர்கள். அவர்கள் உருவாக்கியது அச்சங்கம். அதிலும் நான் பங்குகொண்டவன் தான்; ஆண்டுதோறும் திருவத்திபுரத்திற்கு வந்து செல்லும் ஞானியார் அவர்கள் அயர்ந்து உறங்கத் தொடங்கும் போது, அவர் உறங்கும் வரை அவர் கால்களைப் பிடித்துவிடும் பழக்கமுடைய என்னை, ஒரு முறை அவர் தலைமையில் “மணிவாசகர் அளித்த இரு வாசகம்” என்ற தலைப்பில் பேசுமாறு பணித்து விட்டார்கள். சங்க இலக்கியங்களை ஓரளவு கற்றவனே அல்லது, சமய இலக்கியம் படித்தவன் அல்லன், ஆனாலும் திருக்கோவையாரில் ஒரு சில பாக்களைப் பள்ளியில் படித்தவன். என் தந்தையார் மார்கழி மாத விடியற் போதில் படிக்கும் திருவாசகப் பாக்களைக் கேட்டுக் கேட்டுச் சில பாடல்களை நினைவில் வைத்திருப்பவன். அதனால் தன் மகள் அவள் விரும்பும் இளைஞனோடு அவனூர் சென்று விட்ட போது, அவர்களைத் தேடிச் சென்ற தாய், எதிரே வந்த ஓர் இள ஆணையும் ஓர் இள மகளையும் அணுகி, உங்களைப் போன்ற இருவர் இவ்வழியில் செல்வதைக் கண்டீர்களா எனக் கேட்க, அதற்கு அந்த இளைஞன், ஒன்று இருவரையும் பார்த்தேன் அல்லது இல்லை எனக் கூறியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு மாறாக “என்னைப் போன்ற இளைஞனைப் பார்த்தேன்” எனக் கூறி விட்டுத் தன் பக்கத்தில் நிற்கும் தன் காதலியைப் பார்த்து, “இந்த அம்மா, வேறு
யாரோ ஒருவரைப் பற்றிக் கேட்கிறார்களே! அவர்களைப் பற்றி உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டதாக வரும்,
“ஆளி அன்னானைக் கண்டேன், அயலே தூண்டா
விளக்கனையாய்? என்னையோ அன்னை சொல்லியதே”

என்ற பாட்டைப் பாடிவிட்டு, எதிரில் இருவர் வர, ஆணை மட்டும் பார்த்துப் பெண்ணைப் பார்க்காத அக்கால இளைஞரின் நாகரீகம் எங்கே? அழகிய இளமகளிரை-எங்கெல்லாம் காணலாம் என அலைபாயும் உள்ளத்தோடு, மகளிர் கல்லூரி வாயில்களிலும், திரையரங்குத் திடல்களிலும் காத்துக் கிடக்கும் இன்றைய இளைஞரின் நாகரீகம் எங்கே எனக் கேட்டு: முடித்தேன்.

அடுத்து “தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை” என்ற-திருவாசகத் தொடரை எடுத்துக் கொண்டு, தருதல் என்றால், கொடுப்பவன் தாழ்ந்து, வாங்குவோன் உயர்ந்து நிற்கும் போது ஆள வேண்டிய சொல், இங்கு ‘தந்தது உன் தன்னை’ என கூறியதன் மூலம், சிவனைத் தாழ்ந்தவனாகவும், தன்னை உயர்ந்தவனாகவும் மதித்துள்ளாரே மணிவாசகர், இது ஏன் என்ற் கேள்வியைக் கேட்டு விட்டுப் பேச்சை முடித்துக் கொண்டேன்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue