Skip to main content

வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்

     19 January 2024      அகரமுதல



(வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்-தொடர்ச்சி)

௩. மனையும் மக்களும்

மனை என்னும் சொல் நாம் வாழும் இல்லத்தையும் இல்லிற்குத் தலைவியாகிய இல்லானையும் குறிப்பதாகும். மனைவி என்பது மனைக்குத் தலைவி என்ற பொருளைத் தரும். மனையை ஆளுபவள் மனையாள் எனப்பட்டாள். மனைவியுடன் கணவன் மனையில் வாழ்ந்து புரியும் அறமே மனையறம் எனப்படும். அதனையே இல்லறம் என்றும் இல்வாழ்க்கை என்றும் குறிப்பர். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது ஒளவையாரின் அமுதமொழி. மக்கள் வாழ்வு நெறிகளே நால்வகையாகப் பகுப் பர் நல்லோர். அவை மாணவகெறி, இல்லறநெறி, மனைவியுடன் தவம்புரியும் கெறி, முற்றும் துறந்த துறவு நெறி என்று கூறப்பெறும். இவற்றினேயே வடநூலார், பிரமசரியம், கிரகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் எனக் குறிப்பர். இந்நால்வகை வாழ்வு நெறியுள் தலைமைசான்றது இல்லறமே. அதுவே நல்லறம் என்று போற்றுவர் ஆன்றோர். ” அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அ.தும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று’” என்று சொல்லுவார் வள்ளுவர். இல்லறம் துறவறம் என்னும் இருவகை அறத்துள்ளும் அறம் என்று சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது இல்லறமே என்பது அப் பொய்யில் புலவர் கருத்து. இல்லறத்தை ஆண்மகனோ பெண்மகளோ தனித்து நடத்துதல் சாலாது. பருவம், உருவம், அறிவு, திரு, குணம் ஆகியவற்ருல் ஒப்புடைய ஒருவனும் ஒருத்தியும் கருத்து ஒருமித்து வாழ்வதே இல்வாழ்க்கை எனப்படும். “காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பவாழ்வு” என்பர் தமிழ்ச் செல்வியார். “காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒரு கருமம் செய்தல் வேண்டும்,” என்பர் சிவப்பிரக்காசர். நம் கண்கள் இரண்டும் ஒன்றையே நோக்கும். ஒன்று ஒரு பொருளையும் மற்றொன்று இன்னொரு பொருளையும் நோக்குவது இல்லை. அது போலவே மனையறம் பூண்ட மக்கள் இருவரும் ஒன்று பட்ட உள்ளத்தராய் இல்லறத்தை இனிது நடத்த வேண்டும் என்பர். வண்டியில் பூட்டிய காளைகள் இரண்டும் ஒரு நெறியில் சென்றாலன்றி, வண்டி குறித்த இடத்தைச் சென்று சேராது. அதுபோலவே இல்லறம் என்னும் வான்சகடத்தில் பூட்டிய காளைகளாகிய கணவனும் மனைவியும் கருத்தால் ஒன்றுபட்டுச் சென்றாலன்றி அவர் மேற்கொண்ட அறம் நடவாது வீடுபேறாகிய பயன் விளையாது. இக் கருத்தை முனைப்பாடியார் என்னும் தமிழ்ப்புலவர் தமது அறநெறிச்சாரம் என்னும் அரிய நீதி நூலுள்,

மருவிய காதல் மனையாளும் தானும்

இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால்-ஒருவரால்

இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம்

செல்லாது தெற்றிற்று நின்று ” என்ற பாட்டால் இனிது விளக்கினர். காக்கைக்குக் கண்கள் இரண்டாயினும் ஒளியைத் தரும் கருவிழி ஒன்றே. எப்பக்கம் நோக்கவேண்டுமோ அப்பக்கமாகக் கருவிழியைச் சாய்த்தே காக்கை ஒரு பொருளை நோக்கும் இயல்புடையது. அதுபோலத் தலைவன் தலைவியாகிய இருவர்க்கும் உடம்பு இரண்டா யினும் உயிர் ஒன்றே. வாழ்வில் வரும் இன்பதுன்பங்கள் எல்லாம் அத் தலைவற்கும் தலைவிக்கும் ஒன்று போலவே வரும் என்று மாணிக்கவாசகர், காதலர் வாழ்வைச் சித்திரிப்பார்.

” காகத்(து) இருகண்ணிற்(கு) ஒன்றே

மணிகலந்(து) ஆங்கிருவர்

ஆகத்துள் ஒருயிர் கண்டனம்

யாம் இன்றி யாவையுமாம்

ஏகத்(து) ஒருவன் இரும்பொழில்

அம்பல வன்மலையில்

தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய்

வரும்இன்பத் துன்பங்களே ’’

என்பது அப்பெருமானது திருக்கோவைப் பாடல். உள்ளம் கலந்த காதலர் அன்புநலம் கனிய நடத்தும் இல்லற வாழ்வில் நல்லறங்களை ஆற்றுதற்கு ஏற்ற துணையாகும் இல்லாளை, வள்ளுவர் வாழ்க்கைத் துணை என்ற பெயரால் வழங்கினர். அவள்பால் அமையவேண்டிய பண்புகளை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தால் இனிது விளக்கியருளினர். இல் வாழ்க்கைக்கு ஏற்ற துணையாகும் பெண்ணிற்கு மனை யறத்திற்குத் தக்க மாண்புகள் வேண்டும். கணவன் வருவாய்க்குத்தக வாழத்தெரியவேண்டும். துறந்தார்ப் பேணலும், விருந்து போற்றலும், வறியார்க்கு இரங்கலும், உறவினர்க்கு உதவலும், மன்னுயிர்க்கு அன்பு செய்தலும் ஆகிய பண்புகள் அமையவேண்டும். வாழ்வுக்கு வேண்டும் பொருள்களை அறிந்து கடைப்பிடித்தல், உணவு சமைக்கும் திறன், ஒப்புரவு செய்தல் முதலாய நற்செயல்கள் அமையவேண்டும். இத்தகைய மாண்புகள் உடையாளே வாழ்க்கைத்துணை என்று வழங்குதற்கு உரியாள். அல்லாதவள் வாழ்க்கைப் பகையே ஆவாள். மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின் அவ் இல் வாழ்க்கை, செல்வத்தால் எத்துணைச் செழிப்புடைய தாயினும் சிறப்புடையதன்று. இல்லாள், தனக்குரிய மாண்புடையவளாக விளங்கில்ை ஒருவற்கு இல்லாதது எதுவுமில்லை. அவன் எல்லாம் நிறைத்தவன். இல்லதென் இல்லவள் மாண்பாகுல் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை” என்று கேட்பார் திருவள்ளுவர். இதனையே தமிழ் மூதாட்டியாரும், இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை‘ என்று வலியுறுத்துவார். சிறந்த மனைவியாவாள் யாவள்? வள்ளுவர் இதற்கு வரையறுத்த இலக்கணத்தை ஒரு குறட் பாவிலேயே வகுத்தருளுகின்றார்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலான் பெண்” என்பது அவரது உறுதிமொழி. பெண்ணாவாள் கற்பி னின்றும் பிறழாமல் தன்னக் காத்துக்கொள்ள வேண்டும். தன் கணவனை உண்டி முதலியவற்றால் நன்றாகப் பேணவேண்டும். தன்பாலும் கணவனிடத்தும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் போற்றவேண்டும். மனையறத்திற்குத் தக்க மாண்புகளினும் மறதி யில்லாதவளாக இருத்தல் வேண்டும். இச்செயல்களில் என்றும் மாறாத உறுதியுடையாளே சிறந்த மனைவி ஆவாள் என்று பெண்ணிலக்கணம் பேசினர். மகளிரிடத்துக் கற்பு என்னும் கலங்காத திண்மைக்குணம் அமையவேண்டும். கற்புடைய மகளிர் கடவுள் தன்மை வாய்ந்தவர். அத்தகைய மகளிரை மனைவியராகப்பெற்ற கணவர்க்கு இல்லாளே பெருஞ் செல்வம் என்பர் வள்ளுவர். கற்புடைய மகளிர், தம் கணவரையன்றிப் பிற தெய்வங்களைக் கனவினும் வணங்கார். கணவர் அடிவருடிப் பின் தூங்கி முன்னெழும் பேதையர்க்குத் தெய்வமும் ஏவல் கேட்கும். மாதர் கற்புடை மங்கையர்க்கென்றே மாதம் ஒரு மழை பொழிதல் உண்டு என்பர் உயர்ந்தோர். கற்பரசி யாகிய கண்ணகி கடவுளெனக் கோவில் எடுத்து வழி படும் பெருமை கொண்டாள் அன்றோ! மாதரைக் கணவர் சிறையால் காப்பது ஏலாத செயல். அவர் தம்மை நிறையால் காக்கும் காப்பே தலையாயது என்பர். அன்னர் கற்பினை உயிரினும் சிறந்ததாகக் கருதிக் காத்தல் வேண்டும்.

 உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று

என்று தொல்காப்பியம் சொல்லும், மகளிர்க்கு அமையவேண்டிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்பண்புகளுள் நாணம் உயிரினும் சிறந்தது என்பர் தொல்காப்பியர். அந்நாணத்தினும் கற்பு மாணுடையது என்று வற்புறுத்துவர். இக் கற். பினால் புகழைப் பொற்புற நாட்ட விரும்பிய நங்கையை மனைவியாகப் பெற்றவர்க்குத் தம்மைப் பழித்துரைக்கும் பகைவர்முன்னும் ஏறுபோல் பீடு கடை உள தாகும். அன்னவளே நன்மனைக்கு விளக்கம் தரும் நங்கையாவள். மனையாளது மாட்சி, ஒருவற்கு மங்கலம் என்றே உரைத்தருளுவார் வள்ளுவர். மனையறப் பெருவாழ்வின் அணிகலனாய்த் திகழ்வது நன்மக்கட் பேறு ஆகும்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலன் நன்மக்கட் பேறு‘ என்பது வள்ளுவர் சொல்லமுதம். மனைக்கு விள்க்கம் அளிப்பவர் மங்கையரே; அவர்க்கு விளக்கம் தருபவர் தகைசால் புதல்வரே என்று நான்மணிக்கடிகை நவிலும்.

(தொடரும்)

வள்ளுவர் சொல்லமுதம்

வித்துவான் நவநீத கிருட்டிணன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue