Skip to main content

தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2

 




(தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை 1/2 தொடர்ச்சி)

அத்தியாயம் 4. இலக்கிய மதுரை தொடர்ச்சி

புதுப்புனல் விழா நடைபெறும் நன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும். அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த பொழிலிடத்தே ஆடல் நிகழ்த்துவர். நாடக மகளிரின் ஆடல் ஒலியும், இன்னியங்களின் பேரொலியும் கரையில் வந்து மோதும் வெள்ளத்தின் அலையொலியுடன் சேர்ந்து இடிமுழக்கம் போல் ஒலிக்கும்.

இத்துறைக்கண் பாணர்கள் சென்று யாழிசைத்து மருதப்பண்ணை அருமையாகப் பாடுவர். அவர்கள் பாடப்பாட மைந்தரும் மகளிரும் நீரில் பாய்ந்து ஆடுவர் ; அவர் தம்முள் ஊடுவர்; ஊடலுணர்ந்து கூடுவர்; கூடி மகிழ்வர் ஒடிப் பிரிவர்: தேடித் திரிவர்; மலரைச் சூடித் தொழுவர். இங்ஙனம் இருபாலாரும் துறைக்கண் ஆடியமையால் வையை நீர் எச்சிலாயிற்று என்று கூறினர் இன்னொரு புலவர்.

இளங்கோவடிகள் காட்டும் மதுரை

காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத் திருமா மணியாய்த் தோன்றிய கண்ணகியின் கற்பு மாண்பைக் கவினுற விளக்கும் காவியம் சிலப்பதிகாரம். சேர நாட்டு வீரவேந்தர் வழித்தோன்றலாகிய இளங்கோ வடிகள் அவ் இனிய காவியத்தை ஆக்கியருளின்ர். அவர் தமது காவியத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று பெரும் பிரிவுகளை வகுத்துள்ளார். அவற்றுள் நடுவண் அமைந்த மதுரைக் காண்டம் கண்ணகி வாழ்வில் மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை விளக்குகிறது. அப்பகுதியில் மதுரையைப் பற்றிய செய்திகள் பல கூறப்படுகின்றன.

சூழ்வினைச் சிலம்பு காரணமாக, நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யு’ளென உறுதிபூண்ட இளங்கோவடிகள் மதுரைமாநகரை ஒருமுறையேனும் நேரில் கண்டறிந்தவராதல் வேண்டும். மதுரையிலேயே பல்லாண்டுவாழ்ந்து கூலவாணிகம் நடாத்திய சீத்தலைச் சாத்தனர் அவருக்குத் தண்டமிழாசானதலின் அவர் வாயிலாக மதுரைச் செய்திகளைத் தெளிவாகக் கேட் டறிந்தவராதல் வேண்டும். இக் காரணங்களால் இளங்கோவடிகள் வளங்கெழு மதுரைமாநகரைச் சிறந்த சொல்லோவியமாக வரைந்து காட்டுகிறார்.

இரண்டாம் நூற்றாண்டில் மதுரைமாநகரைச் சூழ்ந்து மாபெரும் மதில் அமைந்திருந்தது. மதிலைச் சுற்றிலும் ஆழமான அகழியும், அதனைச் சூழ்ந்து அகன்ற காவற்காடும் அமைந்திருந்தன. இங்ஙனம் பல்வேறு வல்லரண்களால் குழப்பெற்ற மதுரையில் வாழ்ந்த மக்கள் என்றும் பகைவர் படையெடுப்பிற்கு அஞ்சியதுமில்லை; அந் நகரைவிட்டு அகன்றதுமில்லை. இதனால் இளங்கோவடிகள் அங்ககரைப், “பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்” என்று குறிப்பிட்டார். இளங்கோவடிகள் காலத்தில் மதுரைமாநகர் பகைவர் படையெடுப்பைக் கண்டதே யில்லை.

மதுரையைச் சூழ்ந்த மதிலில் பகைவரை அழிக்கும் பல்வேறு பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. வளைந்து தானே எய்யும் இயந்திர வில், கருவிரல் குரங்குப்பொறி, கல்லுமிழ் கவண், வெங்கெய்க் குழிசி, செம்பினை உருக்கும் குழிசி, இருப்பு உலகள், கல்லிடு கூடைகள், தூண்டிற் பொறி, பகைவரைக் கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலிகள், ஆண்டலைப் புள்ளின் வடிவாக அமைத்த அடுப்புகள், மதிலைப் பற்றியேறுவாரைப் புறத்தே தள்ளும் இருப்புக் கப்புகள், கழுக்கோல், அம்புக்கட்டுகள், ஏவறைகள், தன்னை நெருங்கியவர் தலையை நெருக்கித் திருகும் மரங்கள், ஊசிப்பொறிகள், சிச்சிலிப் பொறிகள், பன்றிப்பொறிகள், மூங்கில் வடிவில் அமைந்த பொறிகள், எழு, சிப்பு, கணையம், எறிகோல், குந்தம், வேல், குருவித்தலைப் பொறிகள் இன்னும் இவைபோன்ற வலிமிக்க பொறிகள் அமைந்து, பகைவர் அணுகாது அச்சுறுத்தின. இத்தகைய மதிலின்மீது பாண்டியன் நாள்தோறும் பகைவரை வென்றுவென்று உயர்த்திய வெற்றிக் கொடிகள் வீறுடன் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன.

கொடிமதில் வாயிலைக் கடந்து நகருக்குள் புகுந்தால் நவமணிக் கடைகள் அமைந்த வீதியும், அறுவைக் கடை வீதியும், கூலங் குவித்த கூல வீதியும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்களாகிய நால்வகை மக்களும் வாழும் நல்வீதிகளும், ஆவண வீதியும், பரத்தையர் வீதியும் அணியணியாக அமைந்திருந்தன. வீதிகளில் வேனிற்கால வெப்பினை யகற்றுவதற்காக வானளாவிய பந்தர்கள் போடப்பட்டிருந்தன. சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் ஆங்காங்கே காணப் பெற்றன.

நகருள்ளே சிவபிரான் திருக்கோவிலும், திருமால் கோவிலும், பலராமன் கோவிலும், முருகன் கோவிலும், இந்திரன் கோவிலும் இருந்தன. இன்றுள்ள அங்கயற் கண்ணி திருக்கோவிலும் கூடலழகர் திருக்கோவிலும் அன்று விளங்கினவல்ல. அவை பிற்காலம் தோன்றி யவை. இங்கே காமனுக்குத் திருவிழா நடந்தது.

பரஞ்சோதியார் காட்டும் மதுரை

தமிழகத்தின் பழமையான சமயமாகிய சைவத்தின் தெய்வ மாண்பைத் தெரிவிக்கும் புராணங்கள் பல். அவற்றுள் தலையாய புராணங்கள் மூன்று. அவை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்பன. திருவிளையாடற் புராணத்தைச் சிவபெருமானின் இடக்கண் என்று சைவர் போற் றுவர். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் அங்நகரில் அறுபத்து நான்கு அருள் விளையாட்டுக்கள் செய்தருளினான். அச் செய்திகளைக் கற்பனை கலங்கள் கனியுமாறும், பத்திச்சுவை பெருகுமாறும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் என்னும் அருள் நூலாக ஆக்கித் தந்தார். அந் நூலிற் போற்றப்படும் நாடும் நகரமும் முறையே பாண்டிய நாடும் பழந்தமிழ் மதுரையுமே யாகும். அவர் காட்டும் மதுரையை நோக்குவோம்.

ஒரு காலத்தில் மதுரையும் அதனைச் சூழ்ந்த பகுதியும் கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தன. அக் காட்டின் கீழைப்பகுதியில் மணவூர் என்னும் ஊர் அமைந்திருந்தது. அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகரன் என்னும் மன்னன் பாண்டிய காட்டை ஆண்டுவந்தான். அவன் காலத்தில் மணவூரில் தனஞ்சயன் என்னும் வணிகன் ஒருவன் வாழ்ந்தான், அவன் ஒருநாள் வாணிகத்தின் பொருட்டு வேற்றுார்ச் சென்று, கடப்பங்காட்டு வழியே திரும்பிக் கொண்டிருந்தான். நடுவழியில் இருள் சூழ்ந்துவிட்ட காரணத்தால் அக் காட்டின் நடுவே ஓரிடத்தில் தங்கினன். அவன் தங்கிய இடத்தில் பொங்கொளி வீசிப் பொற்புடன் விளங்கிய விமானம் ஒன்றைக் கண்டான். அவ் விமானம் எட்டு யானைகளால் தாங்கப்பெற்று ஞாயிறு போன்று பேரொளி வீசியது. அதில் சிவலிங்கம் இருந்தது. அங்கு நள்ளிருளில் தேவர்கள் பலர் வந்து சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டனர். அதைக் கண்ட தனஞ்சயன் தானும் விமானத்தை நெருங்கிச் சிவலிங்கப் பெருமான வழிபட்டு மகிழ்ந்தான். பொழுது புலர்ந்ததும் அங்கு வழி பட்ட வானவரைக் காணுது வியந்தான். மீண்டும் இந்திர விமானத்தில் எழுந்தருளிய பெருமானைப் பணிந்து ஊரை அடைந்தான்.

மணவூரை அடைந்த வணிகனாகிய தனஞ்சயன் தான்கண்ட அதிசயத்தைப் பாண்டிய மன்னனிடம் சென்று தெரிவித்தான். அவன் கடம்பவனத்தில் கண்ட காட்சிகளையெல்லாம் தெளிவுற விளக்கினான். அவற்றைக் கேட்ட குலசேகரன் வியப்புடன் இறைவன் அருள் உள்ளத்தை எண்ணி மகிழ்ந்தான். அக்காட்சி களைப் பற்றிய உண்மையை, உணரமுடியாது வருக்தினான். அன்றிரவே இறைவன், பாண்டியன் கனவில் தோன்றிக் கடம்பவனத்தை அழித்துக் கடிநகர் அமைக்குமாறு பணித்தருளினான்.

மறுநாட் காலையில் மன்னன் அமைச்சர்களையும் சான்றோர்களையும் அழைத்துக் கனவில் கண்ட செய்தியையும் வணிகன் உரைத்த செய்தியையும் தெரிவித்தான். எல்லாரும் கடம்பவனத்தை அடைந்தனர். அரசன் ஆங்கிருந்த பொற்றாமரைத் திருக்குளத்தில் நீராடினன். இந்திர விமானத்தில் வீற்றிருந்த சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து இறைஞ்சினான் ; ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். அந்த இடத்தில் திருக்கோவிலே அமைக்குமாறும், சுற்றியுள்ள காட்டை யழித்து நகரைக் காணுமாறும் அமைச்சர்க்கு ஆணையிட்டான். அமைச்சர் கோவிலும் நகரும் அமைக்கத் தொழில் வல்லாரை அழைத்து வருமாறு ஏவலரைப் பணித்தனர். காடுகள் அழிக்கப்பட்டதும் இறைவனே சித்தர் வடிவில் தோன்றிக் கோவிலும் நகரும் அமைக்கும் வகையினே ஆகம முறைப்படி வகுத்துக் காட்டி மறைந்தான்.

சித்தர் வகுத்தருளிய முறைப்படியே சிற்பநூல் வல்லார்கள் கோவிலும் நகரும் அமைத்தனர். திருக்கோவிலைப் பல்வேறு மண்டபங்களுடனும் கோபுரங்களுடனும் அமைத்தனர். நகரத்தை அணிசெய்ய விரும்பிய பாண்டியன் கடைத்தெருக்கள், அம்பலங்கள், காற்சந்திகள், மன்றங்கள், செய்குன்றுகள், மடங்கள், நாடக அரங்குகள், அந்தணர் தெருக்கள், அரசர் தெருக்கள், வணிகர் தெருக்கள், வேளாளர் தெருக்கள், யானைக் கூடங்கள், தேர்ச்சாலைகள், குதிரை இலாயங்கள், கல்விக்கூடங்கள், குளங்கள், கிணறுகள், கந்தவனங்கள், பூங்காக்கள், உய்யான வனங்கள் முதலியவற்றை அழகுற அமைத்தான்.

இவ்விதம் அமைத்த புதிய நகரின் வடகீழ்த் திசையில் மன்னன் மாளிகை விளங்கியது. மன்னன் புதிய நகருக்குச் சாந்தி செய்ய எண்ணினன். அப்போது இறைவன் தன் சடையிலிருந்த பிறைமதியின் புத்தமுதை நகர் முழுதும் சிந்துமாறு அருள்புரிந்தான். அது நகரை அமுத மயமாக்கியது. மதுரமான அமுதத்தால் தூய்மை செய்யப்பெற்ற நகரம் மதுரையெனப் பெயர்பெற்றது. இவ்வாறு பரஞ்சோதி முனிவர் மதுரைமாககர் தோன்றிய வரலாற்றைத் தம் புராண நூலில் புகன்றுள்ளார்.

(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue