Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் 6

 




(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி)

பழந்தமிழும் தமிழரும் 6

  உவமை நயந்தான் என்னே! இவ்வளவு பொருத்தமாக யாராலும் கூறமுடியாது. வந்து அகப்பட்டுக் கொண்டால் புலியின் மீது விழுந்த குருடன் போன்றவன் என்பதில் எவ்வளவு பொருட் செறிவு இருக்கின்றது. பகைவனைக் குருடனாக்கிக் தன்னைப் புலியாக்கிக் கொண்ட சிறப்புதான் என்ன! அன்றியும் புலியிடம் வலியச் சென்று மாள்வது போலத் தன்னிடம் வலியப் போருக்கு வந்ததனால் மாளுகின்னான் என்பதும் வெளிப்படுகின்றது. அழிப்பதின் எளிமையை விளக்க அழகான உவமை. யானைக் காலில் அகப்பட்ட மூங்கில் முளை யானைக்கால் பட்டதும் நசுங்கிடும் இயல்பினது. வேறு முயற்சி வேண்டா. அதுபோல் பகைவனும் அழிக்கப்படுவான் என்னும் போது அரசனுடைய ஆற்றலும் பகைவனுடைய எளிமையும் வெளிப்படு கின்றனவன்றோ!

  இவ்வாறு செய்யாவிட்டால் இன்னவாறு ஆவேன் என்பது வஞ்சினம் அல்லது சூளுரை. பட்டினி கிடந்து உயிர் விடுவேன்; மலையிலிருந்து விழுவேன்; வாழ்வைத் துறப்பேன்; நெருப்பில் விழுந்து சாவேன்; பன்னிரண்டு ஆண்டுகள் நாட்டில் இரேன் என்பன வழக்கமாக எவரும் கூறும் வஞ்சின உரைகளாகும்.

  ஆனால், இவ்வரசன் என்ன கூறுகின்றான். குற்றமற்ற உள்ளத்தினால் காதலிக்காத அழகிய கூந்தலையுடைய மகளிரைக் கூடிய குற்றத்திற்கு ஆளாவேன் என்கின்றான். நம் நாட்டு அரசர்களைப் பற்றி வெளிநாட்டினர் என்ன எண்ணினர். அந்தப்புரத்தில் ஆரணங்குகளுடன் கூடிக் குலவுவதே அரசர்களின் பொழுது போக்கு என்று எழுதினர். நம் பழந்தமிழ் நாட்டு அரசன் அவ்வாறு பல மகளிருடன் கூடுவது இழிவு என்று கருதியதை அவர்கள் அறியார்கள். பரத்தையரைத்தான் குறிப்பிடுகின்றான். ஆயினும் அவர்களைப் பரத்தையர் என்று அவன் வாயால் கூறவில்லை. காதல் இல்லாத மகளிர் ….பொருந்தாத கூட்டுறவு என்ற தொடர்களால் வெளிப்படுத்துகின்றான். இதனால், இவன் தன் மனைவியிடம் கொண்டுள்ள உண்மைக் காதலும் புலப்படுகின்றது. வீரம், காதல் என்ற இரண்டும் பழந்தமிழரின் வாழ்வின் இரு பக்கங்கள்; அகமும் புறமும் அல்லவோ?

  சோழன் நலங்கிள்ளி காலம், தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டது என்பதனை இப் பாடலே எடுத்துக் காட்டுகிறது.

  இரக்குவர், கொடுக்குவன் என்பன பழங்கால வழக்குகள். பிற்காலத்தில் இரப்பர்; கொடுப்போன் என்றும் வழங்கிவிட்டன. தஞ்சம் என்ற சொல்லுக்கு எளிமை என்ற பொருளும் பழங்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியர் இதுபோன்ற பாடல்களைக்  கொண்டே தம் இலக்கணத்தை யாத்துள்ளார்.

  தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே என்று கூறியுள்ளமை, இப் பாடலில் வந்துள்ளமை கொண்டுதான் போலும், சேனாவரையரும் இப் பாடலில் வந்துள்ள அடியைத்தான் எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார்.

          இன்னது  பிழைப்பின் இதுவா கியர் எனத்

          துன்னரும் சிறப்பின் வஞ்சினத் தானும்

என்னும் புறத்திணையில் காஞ்சித்திணைத் துறையிலும் இப் பாடல்தான் வந்துள்ளது போலும். உரையாசிரியர் நச்சினார்க்கினியாரும் இத் துறைக்கு இப் பாடலையே எடுத்துக்காட்டியுள்ளார்.

  இரக்குவர், கொடுக்குவன் என்ற வழக்கு தொல்காப்பியர் காலத்திலேயே இல்லை போலும். ஆனால் நம் வீட்டுச் சிறு குழந்தை குடுக்குவன் என்றுதான் சொல்கின்றது. அதனால் தமிழின் முற்பட்ட காலத்தில் வழங்கிய வழக்கு என்று துணியலாம். இது இப் பாடலின் பழமையை அறிவிக்கின்றது. இவ் வழக்கால் நலங்கிள்ளியின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி அதனால் தொல்காப்பியர் காலத்தை இன்னும் பின்னுக்குத் தள்ளலாம் சிலர். அது பொருந்தாது. நலங்கிள்ளிகள் பலர் இருந்திருக்கலாம். ஆனால், தொல்காப்பியர் ஒருவர்தாம். அன்றியும் இலக்கியத்திற்குப் பின்னர்தான் இலக்கணமே யன்றி இலக்கணத்திற்குப் பின்னர்    இலக்கியம் அன்று. நலங்கிள்ளி தொல்காப்பியத்தைப் படித்துவிட்டு அதற்குரிய இலக்கணங்கட்கு மேற்கோளாக அமைய இப் பாடலைப் பாடினர் என்றால் பொருந்தாது.

  தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்றால், இப் பாடலைப் பாடிய சோழன் நலங்கிள்ளியின் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும் என்று கொள்ளுதல் வேண்டும்.

  நாட்டுப் பற்றும் குடி தழுவிக் கோலோச்சும் இயல்புமுள்ள அரசர் ஆட்சியில் மக்கள் நல்வாழ்வைப் பெற்றிருந்தனர். கற்றோர் நிறைந்து அறம் உரைக்கும் சான்றோர்கள் மிக்கிருந்தார்கள். அவர்கள் நல்லுரைகள் மக்களை நல்வழிப்படுத்தி, நல்வழி நிறுத்தும் அரசின் கடமையை எளிதாக்கின.

 பிசிராந்தையார் தொல்காப்பியருக்கு முற்பட்டவரே. ஆதன் தந்தை ஆந்தை என மரீஇ உள்ளது என்பதற்கும் இலக்கணம் தொல்காப்பியர் கூறியுள்ளார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த பெரும் புலவராகப் புகழ்பெற்றவர் ஆவார். அவர் காலத்து அரசு நிலைமையும் சான்றோர் சீர்மையும் மக்கள் வாழ்வும் அவருடைய பாடல் ஒன்றால் நன்கு தெளியலாகும்.

          யாண்டு பலவாக நரையில வாகுதல்

          யாங்கா கியர் என வினவுதி ராயின்

          மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

          யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்

          அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை

          ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்

          சான்றோர் பலர்யான் வாழு ஊரே.       (புறம்191)

  இப் பாடல் பொருள் மிக எளிதாக விளங்கக் கூடியதே. பிசிராந்தையார் நரையின்றி வாழ்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் புதுமையானவை; ஆனால், உண்மையானவை. வாழ்வு இருந்தால் யாரும் பல ஆண்டுகள் நரைதிரையன்றி வாழலாம். அமைதியான வாழ்வுக்கு வேண்டியவற்றைத் தொகுத்துரைக்கின்றார். மனைவி மனைத்தக்க மாட்சியுடையளாய் இருத்தல் வேண்டும். மக்கள் செல்வம் குறைவற்று நல்லியல்புகள் நிரம்பப்பெற்றதாய் இருத்தல் வேண்டும். வீட்டில் பணிபுரிவோர் குறிப்பறிந்து ஒழுகும் அறிவு படைத்தவராதல் வேண்டும்.   இவைகட்கு மேலாக நற்குணம் மிக்குக் கற்றுணர்ந்து அடங்கிய சான்றோர்கள் நிறைந்திருக்க வேண்டும். இருந்தால் எத்துணை ஆண்டுகள் வாழ்ந்தாலும் நரையின்றி வாழலாம்.

 (தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue