Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 33: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்

 




(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32 தொடர்ச்சி)

பழந்தமிழ்  33

8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்

 ஒரு மொழியின் பழமையை அம் மொழியின் சொற்களே அறிவிக்கும். தமிழ் மொழியின் பழமையைத் தமிழ்ச்சொற்களே அறிவிக்கின்றன. சொற்கள் இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் இடம்பெற்று நிலைத்திருக்குமேல் அவை தம் பழமையை அறிவிக்க வல்லன. தமிழ்மொழிச் சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலும் வெளிநாட்டார் வரலாறுகளிலும் இடம் பெற்றுள்ளன. அங்ஙனம் இடம்பெற்று நிலைத்துள்ள சொற்கள் தமிழின் பழமையை உணர்த்த வல்லனவாய் உள்ளன.

  அறிஞர்  காலுடுவல் அவர்கள் இத் துறையில் ஆராய்ந்து பல தமிழ்ச்சொற்கள் மேலை நாட்டு வரலாறுகளிலும் இடம் பெற்றுள்ளமையை எடுத்துக்காட்டித் தமிழின் தொன்மையை நன்கு நிறுவியுள்ளார்.

 ‘தோகை’ என்னும் தமிழ்ச்சொல் ஈபுரு மொழி நூலில் இடம் பெற்றுள்ளது. அதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:- அரசர்களையும் அவர் கால வரலாறுகளையும் வரிசைப்படுத்திக் கூறும் ஈபுரு மொழிநூலில் கி.மு.1000-இல் சாலமன் கலங்கள் ஏற்றிக் கொணர்ந்த வணிகப் பொருள்களைக் குறிக்கும் பட்டியலில் மயிலைக் குறிக்கும் சொல்லே உலகில் எழுத்துருவில் காணலாகும் மிகப் பழைய திராவிடச் சொல்லாகும். அச் சொல், அரசர்களைப்பற்றிய நூல்களில் துகி என்றும், அவ் வரசர்களின் கால வரலாறுகளைப்பற்றிய நூல்களில் தூகி என்றும் எழுதப்பட்டுள்ளன. மலபாரிலும் தமிழ்நாட்டிலும் மயிலுக்கு இட்டு வழங்கும் பெயர் மயில் என்பதே எனினும் தனித்தன்மை வாய்ந்த நனிமிகப் பழைய செய்யுட் சொல் தமிழ் மலையாளங்களில் தோகை என்பதே… தோகை எனும் அப் பெயர்ச்சொல் தொக் அல்லது துக் என்ற மூலத்திலிருந்து தோன்றியதாயினும் அச் சொல்லின் அடிப்படை மூலம் தொ அல்லது து என்பதாகவே தோன்றுகிறது. ஒத்த இயல்பு வாய்ந்த சொற்களை நோக்கிய வழி ஈற்றுக் ககரம் அல்லது குகரம் சொல்லாக்க உருபாதலே வேண்டும். இத்தகைய சொல்லாக்க உருபு இணைவதால் ஒரு தொடக்க மூலம் முதலில்  வினைப் பெயராதலும், பின்னர் அவ் வினைப்பெயரே அடுத்த நிலையில் ஒரு வினைமூலமாகி விடுதலும் மொழிநூல் விதிமுறையின் விதிகளாம். தமிழ் மலையாளச் சொல்லாக்க உருபாகிய இக் குகரம் இந்தியாவோடு பொய்னீசிய வாணிகம் நடைபெற்ற அத்துணைப் பழங்காலத்திலேயே ஆட்சியில் இருக்கக் காண்பது மொழிநூல் வரலாற்றில் வியத்தற்குரிய  நிகழ்ச்சியாகும். மாக்குசு முல்லர் அவர்கள் இது  குறித்துக் கூறுங்கால் இச்சொல்லிலக்கண  வரலாறு பொருத்தம் உடைத்து என்று ஏற்றுக்கொள்ளப் பெறின் ஆரிய இனத்தவர் வருகைக்கு முன்பு இந்தியாவில் வழங்கிய தமிழ்மொழியின் பழமையை நிலைநாட்டவல்ல நல்ல சான்றாக இது அமையும் என்று கூறுகின்றார். இவ் விலக்கண முறை பொருத்தமுடைத்து என்பதிலும் அதிலிருந்து அவர் ஊகித்தறிந்தது உண்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதிலும் எனக்கு ஐயம் இல்லை. இத் திராவிடத் தோகையிலிருந்து அராபிய மொழியின் தவசு கிரேக்க மொழியின் தவோசு இத்தாலிய மொழியின் பவோ இயல்பாகத் தோன்றும் என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் தகும். இந்திய வணிகர்கள் பாபிலோனிய நாட்டவரோடு நடத்திய கடல் வாணிகம் குறித்தனவும், அத்தகைய வாணிக நிகழ்ச்சியொன்றில் ஆங்கு விற்பதற்காக முதன்முதலாக மயில்கள் கொண்டு செல்லப்பட்டது குறித்தனவுமாய குறிப்புகள் புத்த சமய நூல்களில் இருப்பதை வரலாற்று ஆசிரியர் ஒருவர் அறிந்து கூறியுள்ளார்..  *

 ++

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் : பக், 117, 118

+++

  அறிஞர் காலுடுவல் அவர்கள் வெளிநாட்டவராய் இருந்தும் தமிழின் தொன்மையை நிலைநாட்ட அரிதின்  முயன்று ஆங்காங்குக் காணும் சான்றுகளைத் தேடித் தந்துள்ளார். ஆனால் தமிழ் நாட்டவராய வையாபுரிப்பிள்ளை தமிழின் தொன்மையைக் குறைத்து மதிப்பிடும் கருத்துடையவராய் அறிஞர் காலுடுவல் அவர்களின் ஆராய்ச்சியைக் காரணமின்றி மறுப்பதிலேயே ஈடுபட்டு விட்டார்.%

+++

%.     History of Tamil Language and Literature  : page 9

++++

  மறுக்கப்புகுந்த அவர் கூறியதாவது:-தமிழ்ச்சொல் (தோகை) முதலில் மயில் என்னும் பொருளைத் தராது. அதன் பழம் பொருள் பொதுவாக வால் என்பதாகும். மயில் வாலாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஏனைய திராவிட மொழிகளிலும் வால் என்னும் அதே பொருளைத்தான் கொண்டுள்ளது இச்சொல். பின்னர் அணி முறையால் மயில் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறுந்தொகை இருபத்தாறாம் பாட்டில்  இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் அழகிய பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே தமிழில் உள்ள சொல்லும் ஈபுரு மொழியில் உள்ள சொல்லும் பொருள் ஒற்றுமை கொள்ளவில்லை. அறிஞர் காலுடுவல் அவர்களின் சொல்லாராய்ச்சி மிகவும் ஐயப்பாட்டிற்குரியது.

  வையாபுரிப் பிள்ளையின் மறுப்பு நகைப்பிற்கிடமாய் உள்ளது. தோகை என்ற சொல் முதலில் மயில் என்ற பொருளில் வழங்கியது என்று யார் கூறியவர்? அச் சொல் எவ்வாறு தோன்றியது என்பது  இங்கு ஆராய்ச்சிக்குரியதன்று. செய்யுளில் மயில் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இல்லையா என்பதே ஆராயவேண்டியது. வையாபுரிப்பிள்ளையே குறுந்தொகை இருபத்தாறாம் பாட்டில் மயில் என்னும் பொருளில்  பயன்பட்டுள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு மறுப்புக்கு இடமேது?

 தோகை எனும் சொல் தொகை என்பதிலிருந்து தோன்றியது. தொகுத்தல் தொகையாகும். பகுதியுடன் ஐ விகுதி சேர்ந்து பெயராவது தமிழில் சொல் தோன்றும் முறையாகும். பகு + ஐ = பகை. வகு + ஐ = வகை;  நகு + ஐ = நகை; முகு + ஐ = முகை; இவ்வாறு பல சொற்கள் மிக மிகப் பழங்காலத்திலேயே உருவாகியுள்ளன.  அங்ஙனமே தொகு + ஐ = தொகை என்றாகியுள்ளது. மயிலிறகுகள் வாலின் பகுதியில் தொகுத்து வீழ்வதால் மயிலிறகின் தொகுப்பு, தொகையாகிப் பின்னர்த் தோகையாகியது. பின்னர், ஆகுபெயரால் அத் தோகையையுடைய மயிலுக்குப் பெயராக ஆகியுள்ளது. இவ்வாறு ஆவதைச் சினையிற் கூறும் முதலறி கிளவி என்பர் தொல்காப்பியர். பிற்காலத்தார் சினையாகு பெயர் என்பர். மயிலுக்குச் சிறப்பு அதன் தோகையால்தான். ஆதலின் அப் பெயர் அதற்கு மிகவும் ஏற்றதாக இலக்கியங்களில் அமைந்துவிட்டது. தோகை எனும் இச் சொல் வெளிநாட்டில் துகி என்றும் தூகி என்றும் உருமாறி வழங்கியுள்ளது.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue