Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 29: பிற்காலப் பாண்டியர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

      09 March 2023      





(தமிழ்நாடும் மொழியும் 28: பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி)

7. பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி

சடாவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றதும் பாண்டியர்கள் முழு உரிமையுடன் விளங்கலானார்கள். அதன்பின் வந்த பல பாண்டிய மன்னர்கள் பேரரசர்களாக விளங்கினர். பாண்டியர் வரலாற்றுக்குப் பெருந்துணை புரியவல்ல கல்வெட்டுகள் பல 13-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டன.

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சடாவர்மனுக்குப் பின்னர் கி. பி. 1216-இல் பட்டம் பெற்றான். இவன் காலத்தில் சோழ நாட்டை மூன்றாம் இராசராசன் ஆண்டு வந்தான். பாண்டியன் திடீரெனச் சோழ நாட்டைத் தாக்கினான்; இராசராசனை வென்றான்; தஞ்சையை அழித்தான். எனினும் ஓய்சால மன்னனின் தலையீட்டால் சோழ நாட்டை திருப்பிச் சோழனுக்குத் தந்தான். இவனுக்கடுத்தாற்போல இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பட்டம்பெற்றான். இவன் கி. பி. 1238 முதல் 1251 வரை நாட்டை நல்ல முறையில் ஆண்டான். இவன் காலமான பிறகு சடாவர்மன் சுந்தரபாண்டியன் மன்னனானான். பிற்காலப் பாண்டியர்களுள் பெருவீரனாகவும், பேரரசனாகவும் விளங்கியவன் இவனாகும். சடாவர்மன் பெரம்பலூரில் நடந்த போரில் ஓய்சாலரை முறியடித்து, கொப்பத்தின் கண்ணே விளங்கிய அவர்தம் கோட்டையையும் முற்றுகையிட்டுக் கவர்ந்தான். ஈழமும், சேர நாடும் பாண்டியனின் சுட்டு விரல் கண்டு நடுநடுங்கின. அவன் அடிபணிந்தன. சோழ நாடு பாண்டிய நாடாயிற்று. சுந்தரபாண்டியனின் நண்பனும், தளபதியுமாகிய சடாவர்மன் வீரபாண்டியன் இவனுக்காகக் கொங்குநாட்டினை வென்றான். பின்னர் பாண்டியன் ஈழத்தோடு போரிட்ட போது இவன் பேருதவி புரிந்தான். இந்தப் பேரரசன் காலத்தில்தான் இரண்டாவது பாண்டியப் பேரரசு புகழேணியின் உச்சியில் நின்று நடம் புரிந்தது. காகத்தீய மன்னனான கணபதியும், பல்லவ மன்னனான சேந்தமங்கலம் கோப்பெருஞ்சிங்கனும் இப்பாண்டிய மன்னனால் அடைந்த தொல்லையும் துயரமும் அளவிடற்கரியன. நெல்லூரை ஆண்ட கந்தகோபன் பாண்டியனால் முறியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். பாண்டியன் நெல்லூரில் வைத்து வீரமுழுக்காடினான். சிதம்பரம், சீரங்கம் ஆகிய இரண்டு ஊரின் கண்ணும் உள்ள கோவில்களை இப்பாண்டியன் புதுக்கி அழகுசெய்தான். அது மட்டுமல்ல; சிதம்பரத்தில் பொன்னம்பலமும் அமைத்தான். இவன்றன் அறச் செயல்கள் இன்னும் தமிழர்களால் கொண்டாடப்படுகின்றன. கி. பி. 1275-இல் இவன் காலமாகவே, இவனோடு ஆண்ட மாறவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றான். குலசேகரன் ஈழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அக்காலை ஈழ நாட்டை ஆண்டவன் பராக்கிரமபாகு என்பவனாவான். பாண்டியன் படையெடுத்து வந்தபோது பராக்கிரமபாகு பணியவில்லை. எனவே அவனை வென்று, பற் சின்னத்தை (புத்தர் பல்லுக்குக் கோவில் உண்டு) எடுத்து வந்துவிடவே, பராக்கிரமபாகு ஓடோடியும் வந்து பாண்டியனைப் பணிந்து மீண்டும் அப்பல்லைப் பெற்றுச் சென்றான்.

குலசேகர பாண்டியன் காலத்தில்தான் வெனீசு நகரத்திலிருந்து மார்க்கபோலோவும், முசுலீம் வரலாற்றாசிரியனான வாசப்பும் பாண்டிய நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்தனர். மேலும் தாங்கள் பார்த்த எல்லாவற்றையும் அவர்கள் எழுதி வைத்தனர். அவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் மிகவும் சிறந்தனவாகும். நமது நாட்டின் செல்வ நிலையும், முத்தும் பவளமும் அவர்தம் சிந்தையை வெகுவாகக் கவர்ந்தன.

குலசேகரனுக்கு மக்கள் இருவர். ஒருவன் சடாவர்மன் சுந்தரபாண்டியன்; மற்றொருவன் வீரபாண்டியன். வீர பாண்டியன் பட்டத்துக்குரியவனாக இல்லாத போதிலும் அவனையே குலசேகரன் ஆதரித்தான். ஆதலால் சுந்தர பாண்டியன் குலசேகரனைக் கொன்று பாண்டிய நாட்டு அரசைக் கைப்பற்றினான். உடனே உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அந்தப் போரில் சுந்தரபாண்டியன் மதுரை மாநகரிலிருந்து துரத்தப்பட்டான். துரத்தப்பட்ட சுந்தரபாண்டியன், அல்லாவுத்தீனின் தளபதியாகிய மாலிக்காபூரின் உதவியை வேண்டினான். ‘கும்பிடப்போன சாமி குறுக்கே வந்ததைப்போல’ பாண்டியனே வேண்டுகோள் விடுக்கவே மாலிக்காபூர் படையுடன் வந்தான்; மதுரையைக் கைப்பற்றினான். இராமேசுவரத்தில் ஒரு மசூதியைக் கட்டினான். மதுரையைத் தனது பேரரசின் ஒரு பகுதியாக்கப் போவதாகத் தெரிவித்தான். குசுருகான் என்ற மற்றொரு தில்லி முசுலீம் தளபதி கி. பி. 1318- இல் மதுரையைத் தவிடு பொடியாக்கினான். பாண்டியராட்சி அடியற்ற மரமாயிற்று. இந்தச் சமயம் பார்த்துத் திருவாங்கூரை ஆண்ட இரவிவர்ம குலசேகரன் பாண்டிய நாட்டு மீது படையெடுத்துச் சென்று நெல்லூர் வரையுள்ள பகுதிகளை வென்றான். உள் நாட்டுக் குழப்பம், மாலிக்காபூர், குசுருகான் ஆகியோரது படையெடுப்புகள், இவற்றுடன் இரவிவர்ம குலசேகரனின் படையெடுப்பும் ஒருங்கு சேர்ந்து பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. ஒரு முசுலீம் அரசு மதுரையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் நிலைபெற்றிருக்க முடியவில்லை . கி. பி. 1378-இல் விசய நகர மன்னர்கள் பாண்டிய நாடு முழுவதையும் வென்று தங்களோடு சேர்த்துக்கொண்டனர். மதுரையைப் பிடிக்க முடியாவிட்டாலும், பாண்டியர்கள் திருநெல்வேலியிலிருந்து கொண்டே 1800 வரை ஆட்சி செய்துவந்தார்கள்.

பாண்டியர் காலத் தமிழகம்

பாண்டியர் ஆட்சி முறை சோழர் ஆட்சி முறையைப் போன்றதே. கிராமச் சபைகளிடமே கிராம ஆட்சி இருந்தது. பெரும் பெரும் அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. தமிழ் நாட்டுக்கோவில், பண்பாட்டின் உறைவிடமாகவும், மடங்கள் கல்விக் கழகங்களாகவும் திகழ்ந்தன. சைவ வைணவ சமயங்களோடு சமணமும் பௌத்தமும் வளர்ந்தன. அரபு நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடையே சிறந்த வாணிகம் நடந்ததுஅரேபியர்கள் பாண்டிய நாட்டில் காயல் பட்டினத்தில் குடியேறினர். பாண்டிய நாட்டுக் கடற்கரை அவர்களால் மலபார் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சொல்லே பின்பு கொல்லத்திலிருந்து நெல்லூர் வரையிலுள்ள கடற்கரையைக் குறிக்கலாயிற்று. பாண்டிய, சோழர் காலக் கல்வெட்டுக்கள் அக்கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறியப் பேருதவி புரிகின்றன. தமிழர்கள் இந்த இடைக்காலத்தில் சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்தேவதாசிகள் சமுதாயத்தில் மிகுந்த உரிமையோடு உலவினர். அஃதோடு அவர்கள் பல அன்பளிப்புகளும் தந்தனர். அடிமைமுறை அக்காலத்தில் நிலவியது. திருமறைக்காட்டிற் காணப்படும் மூன்றாம் இராசராசனின் கல்வெட்டுக்கள் இரண்டு, ஆரியன்பிச்சன் என்பான் 5 ஆண்களையும், 5 பெண்களையும் 1000 காசுக்கு விற்றதாகக் கூறுகின்றன. சதியும் அக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் மனைவியாகிய வானவன் மாதேவியும், ஒரு மல்லன் மனைவியாகிய தேக்கபியும் உடன்கட்டை ஏறியதாகத் தெரிகிறது. சாதிவெறி அக்காலத்தில் கடுமையாகவே இருந்தது; நிலங்கள் மன்றங்களுக்கும், தனியாருக்கும் சொந்தமாய் விளங்கின. வைரமேகதடாகம், வீர சோழன், கீர்த்தி மார்த்தாண்டன் முதலிய குளங்களாலும், கால்வாய்களாலும் வேளாண்மை செழிப்பாக நடைபெற்றது. கோவில்கள் மிகவும் சீரும் சிறப்பும் கொண்டு திகழ்ந்தன. கோவிற்குப் பல ஆயிரம் பணம் பெறுகின்ற நகைகள் தேவைப்பட்டன. இதனால் நகைக்கலை செழித்தது. காஞ்சியிலும், மதுரையிலும் கைத்தறித் தொழில் ஓங்கியது. குமரி முனையிலும், மரக்காணம் (தென்னார்க்காடு) என்ற இடத்திலும் உப்பளங்கள் மிக்கு விளங்கின. நாட்டில் பொதுவாக நிலவிய வட்டி விகிதம் 12 1/2%. உறுதித் தாள்கள் (Promissory notes) நடைமுறையில் இருந்தன. 72 தானிய எடை உள்ள காசு அல்லது மடை என்ற தங்க நாணயமும் அக்காலத்தில் பழக்கத்திலிருந்தது. காசு என்பது அரைப்பொன். கழஞ்சு என்பது நாணயமாக வழங்காத தங்கமாகும். நாணயங்களில் வில், கயல், புலி பொறிக்கப்பட்டிருந்தன. மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இடையே பெருத்த வாணிகம் நடைபெற்றது. மூன்று தூதுக் குழுக்களைச் சீனாவிற்குப் பாண்டியன் அனுப்பினான்.

இக்காலத்தில் சைவமும் வைணவமும் நன்கு வளர்ந்தன. சமயப்பொறை நிலவியது. எனினும் சில போழ்து சமய வெறியும் கொலைகள் பல நடத்தியது. காளமுகம், பாசு பதம், கபாலிகம் முதலியனமிகுந்த செல்வாக்கோடு உலவின. மடமும், கோவிலும் பண்பாட்டுக்கும் கல்விக்கும் உறைவிடங்களாகத் திகழ்ந்தன. சுருங்க உரைப்பின், அக்காலக் கோவில்கள், கூட்டுறவுப் பண்டகசாலைகளாகவும், நிதியகங்களாகவும், செழுங்கலை நிலையங்களாகவும், கலைக்கண்காட்சிகளாகவும், பொருட்காட்சி சாலைகளாகவும், மருந்தகங்களாகவும், அற நிலையங்களாகவும் திகழ்ந்தன. பெரும்பாலான கோவில்களில் நூல் நிலையங்கள் இருந்தன. நாடகமும், நடனமும் நன்கு வளர்க்கப்பட்டன. நெல்லைக்கருகிலுள்ள பத்தமடைக் கல்வெட்டு ஒன்று, திருவிழாக்களில் நடனமாடவும், நாடகம் நடிக்கவும் ஒரு நடன மங்கைக்கு நிலம் மானியமாக விடப்பட்டிருந்தது எனக் கூறுகிறது. சமண, பௌத்த சமயங்களும் ஓரளவுக்கு அடியார்கள் மிகப்பெற்றிருந்தன. சமணம் பௌத்தத்தைவிட நன்கு செல்வாக்கோடு திகழ்ந்தது என்னலாம்.

இடைக்காலத்திலே தமிழிலக்கியமும் ஓரளவுக்கு வளர்ச்சிபெற்றது என்னலாம். சமண, சைவ, பௌத்த, வைணவ அடியார்களால் பல அழகிய தமிழ் நூற்கள் எழுதப்பட்டன. திருத்தக்க தேவர் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியை எழுதினார். சிதறிக் கிடந்த சைவ நூற்களைத் திருமுறை என ஒரு ஒழுங்குபடத் தொகுத்து வகுத்தது கி. பி. 1100-லேதான். சேக்கிழார் தித்திக்கும் பெரிய புராணம் எழுதியது இக்காலத்தில்தான். அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் வாழ்ந்தது இக்காலத்திலேதான். வீரசோழியம் பிறந்தது இந்தக் காலத்திலேதான். யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம், கலிங்கத்துப்பரணி, இராமகாதை, மூவருலா, நளவெண்பா போன்ற தமிழ்ப் பெருநூல்கள் இந்த இடைக்காலத்திலே தான் எழுந்தன. குணவீரபண்டிதரால் நேமிநாதம் இக்காலத்திலேதான் எழுதப்பட்டது. நன்னூல் என்னும் பொன்னூல் தோன்றக் காரணமாக இருந்தது இந்த இடைக்காலமே. தண்டியலங்காரம் என்னும் அணிநூல் இக்காலத்திலேதான் எழுந்தது. சுருங்க உரைப்பின் இடைக்காலம் என்பது தமிழ் மொழி வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் என்று கூறலாம்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue