Skip to main content

புதிய புரட்சிக்கவி: முன்னுரை

 அகரமுதல





(‘புதியபுரட்சிக்கவி’தமிழர்நெஞ்சில்எழுச்சியாய்உலவட்டும்! தொடர்ச்சி)

பட்டுக்கோட்டை  பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை

வாழையடி வாழையென வருகின்ற தமிழ்ப் புலவர் திருக்கூட்ட மரபில், கடவுள் என்பதை முற்றாக மறுதலித்த முதற்கவிஞரான  பாவேந்தர்  பாரதிதாசனின் கவிதைகள் முதல்  தொகுதியை  நடுநிலைப் பள்ளி மாணவப் பருவத்திலே கிடைகப் பெற்று அதனில் மூழ்கித் திளைத்தவன் நான்.  1956இல் இருமுறை ‘தூக்குமேடை’ நாடகத்தை மேடையேற்றிய போது கதைத்தலைவன்  பாண்டியனாகத் தூக்கு மேடையில் “பேரன்பு கொண்டோரோ  பெரியோரே என் – பெற்ற தாய்மாரே நல்லிளஞ்சிங்கங்காள் – எனத் தொடங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளை முழங்கியவன்.

பாவேந்தரின் ‘குயில்’ திங்கள் இதழை அஞ்சல் வழியாக வரவழைத்துக் கொண்டிருந்த நிலையில் அதிலேதான் 1958இல் குறுந்தொகைப் பாடலொன்றின் விளக்கவுரையாக எனது எழுத்து முதன் முறையாக அச்சில் வெளியாயிற்று. ஆண்டுகள் உருண்டோடின. புலவர் கல்லூரியில் பயின்று தமிழாசிரியரான நிலையில் 1978இல் பட்டுக்கோட்டை – அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில் அரங்கேற்றுதற்கென உடற்கல்வி ஆசிரியராக உடன் பணியாற்றியவரும். பாவேந்தரின் தலைமையில் திருமணம் செய்து கொண்டவருமான, பொன்னவராயன்கோட்டை சி. தங்கராசு அவர்கள் வலியுறுத்தி வேண்டியதன் பேரில்  ‘புரட்சிக் கவி’ குறுங்காவியத்தைக் கவிதை நாடகமாகப் பிரித்தெழுதினேன். நகைச்சுவைக்கென்று இரண்டு கதை மாந்தர்களைச் சேர்த்துக் கொண்டேன்சீ.தங்கராசு மற்றும் ஆசிரியர் நண்பர்கள் சந்தான கோபாலன்  சோமசுந்தரம் வைத்தியலிங்கம், முனியமுத்து முதலானோரின் ஒத்துழைப்புடன் மாணவச் செல்வங்கள் இராசப்பா, செயராசு, இரமேசு, அசோகன், மணி, முகம்மது அலி, சிரீதர், கிருட்டிணமூர்த்தி முதலானோர் கவிதை வரிகளை உரையாடலாகப் பேசுவதில் திறமை  காட்டி, நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றினர். 1991இல், பட்டுக்கோட்டை வட்டத் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பாவேந்தரின் நூற்றாண்டு விழாவில், கவியரங்கம். கருத்தரங்கம், வழக்காடு மன்றம் என்பவற்றையடுத்து புரட்சிக்கவி நாடகம்  இரண்டாவது முறையாக  அரங்கேறியது. விழாவில் இறுதிவரையும் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையில் விடாப்பிடியாக விளங்கிய மன்னை ப. நாராயணசாமி வழக்கம் போல்  புரட்சிக்கவியை நடிப்புத்திறனுடன் முழங்கியமையும் பாவேந்தரின் திருமகனார் மன்னர் மன்னன் சிறப்புரையாற்றியமையும் விழாவில் கூடுதல் சிறப்புக்களாயின.

          இதனிடையே, இனையர் இவரெமக்கு இன்னம் யாம் எனப் புனைதல் வேண்டாத நட்பாளர் – சென்னை குருநானக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கா. வேலையா பல்கலைக்கழகப் பட்ட வகுப்புகளுக்கான பாடநூலாகப் பரிந்துரைக்கத் தக்கவாறு காப்பிய நாடகத்தை விரிவுபடுத்துமாறு வேண்டிக்கொண்டபடியும், புரட்சிக்கவி நாடகக்காப்பியம் பாவேந்தரின் பகுத்தறிவுக் கொள்கைகளின் விளக்கமாகவும், தமிழ் யாப்பிலக்கணத்தின் முதன்மைச் சிறப்பை விளக்கப்படுத்துவதாகவும் அமையவேண்டுமெனும் எனது விருப்பத்திற்கிணங்கவும் காப்பியத்தை அவ்வப்போது விரிவுபடுத்தி 2003இல் இப்போதைய அளவில் நிறைவு செய்தேன்.

          பாவேந்தரின் ‘குயில்’  திங்களிழை அஞ்சல் வழி வரவழைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதைவார ஏட்டையும் கிழமை தோறும் மன்னார்குடிக் கடையில்  வாங்கிப் படிக்கும் வழக்கத்திலிருந்தவனாகிய நான் இராசாமடம் – அரசு மேனிலைப்பள்ளியின்  தலைமையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1995இல் திடுமெனத்தாமாக வருகைதந்து எங்கட்கெல்லாம் இன்ப அதிர்ச்சியளித்தார் உவமைக்கவிஞர். அவர் விரும்பியவாறு உடனடியாக இலக்கியமன்ற விழா நிகழ்த்திய போது மாணவர்களுக்கு, ‘கடல்’ என்னும் தலைப்பில் கவிதைப் போட்டி அறிவித்துச், சிறப்பிடம் பெற்றோர்க்குத் தமது பொறுப்பில் பரிசளித்த கவிஞரின் தமிழுணர்வும்,  முன்னாள்  பள்ளி மாணவர் என்னும் முறையில் இராசாமடம் மண்ணில் ஒரு பிடியெடுத்துச் சென்றமையும் மறக்கற்பாலனவல்லவே.

          மனநிறைவுடன் நாடகக்காப்பியத்தை வெளியிடவிரும்பி, உவமைக்கவிஞரின் அணிந்துரை கேட்டு எழுதிய போது கவிஞர்தம் கைப்பட எழுதியனுப்பிய அணிந்துரை, மழலை மொழியில்  தத்துப்பித்தென இசைபாடிய பேரனுக்கு உள்ளப்பூரிப்புடன்  தாத்தா வழங்கிய பொற்பதக்கமாகியது. என்பால் மாறாத அன்புடைய யா பழ. நெடுமாறனின் அணிந்துரை எனக்குப் பெருமையூட்டுவதாகவும் தழுவல் இலக்கியம் பற்றிய தகவுரையாகவும் அமைந்தது. ஆயினுமென்? பலரையும் அணுகியும் காப்பியத்தை வெளியிடும் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், பாவேந்தரின்  திருமகனார் மன்னர்  மன்னனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்தம் கைப்பட வரைந்தளித்துள்ள அணிந்துரை காப்பியத்திற்குச் சிறப்பூட்டுதல் மட்டுமின்றி பாவேந்தரின் புரட்சிக்கவி குறுங்காவியம் தொடர்பான அரிய பல செய்திகளையும் விவரிப்பதாகி, புரட்சிக்கவி நாடகக் காப்பியத்திற்கு பெருஞ்சிறப்பாகிறது.

பூங்குடில்                                               சா.பன்னீர்செல்வம்

32சி, கண்டியன் தெரு,                            

பட்டுக்கோட்டை – 614 601.

9941864700.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue