Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 73

 அகரமுதல




(குறிஞ்சி மலர்  72 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம் 26
 தொடர்ச்சி

“தோட்டத்துப் பக்கமாகப் போனான். நீங்கள் வேண்டுமானால் போய்ச் சொல்லிப் பாருங்கள்” என்று நம்பிக்கையில்லாத குரலில் பதில் சொன்னார் மீனாட்சிசுந்தரம். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள்.

அப்போது காரில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மலையைச் சுற்றிக் காட்டுவதற்காகப் போயிருந்த முருகானந்தமும் வசந்தாவும் திரும்பி வந்தார்கள். வசந்தா காரிலிருந்து குழந்தைகளை இறக்கி உள்ளே கூட்டிக் கொண்டு போனாள். முருகானந்தம் மீனாட்சிசுந்தரத்துக்கு அருகில் வந்து மரியாதையோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டான்.

“உட்கார் தம்பி. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்றார் மீனாட்சிசுந்தரம்.”

“பரவாயில்லை. சொல்லுங்கள்” என்று நின்று கொண்டே முருகானந்தம் அவர் கூறுவதைக் கேட்கத் தயாரானான்.

“அரும்பாடுபட்டு ஒருவழியாக இந்தப் பெண்ணிடம் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதம் வாங்கிவிட்டோம். நேற்று அரவிந்தன் வந்து சொல்லிய விவரங்களிலிருந்து பார்த்தால் போட்டியும் எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. பூரணி வெற்றி பெறுவதற்காக இராப்பகல் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் நாம். நான் தனியாக என்ன செய்ய முடியும்? உங்களையெல்லாம் நம்பித்தான் இதில் இறங்கியிருக்கிறேன். ‘பருமாக்காரரும் புது மண்டபத்து ஆளும்’ ஒன்று சேர்ந்தால் வேறு வினையே வேண்டாம். மதுரையையே எரித்துவிடுகிற அளவு கெட்ட பயல்கள் இரண்டுபேரும்.”

“மதுரையை எரித்துவிடுகிற பெருமை இன்று இவர்களுக்குக் கிடைக்காது, ஐயா. தனக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்பதற்காக மதுரையை எரிக்கும் துணிவு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகி என்ற சோழநாட்டுப் பெண்ணுக்கு ஏற்பட்டது. இவர்களோ நியாயத்தையே எரித்து விடப் பார்க்கிற ஆட்கள்” என்று சொல்லிச் சிரித்தான் முருகானந்தம்.

“நீ சொல்கிறாய் தம்பி! ஆனால் இன்றைய தேர்தல் முறைகளிலும் போட்டியிலும் நியாயத்தை யார் பார்க்கிறார்கள்? என்னென்னவோ சூழ்ச்சிகளையெல்லாம் கூசாமல் செய்கிறார்களே. நேற்று அரவிந்தன் சொன்னதைக் கேட்டாயோ, கூட்டிக் கொண்டு போய்ப் பயமுறுத்தி ஆள்விட்டு அடிக்கச் சொல்கிற அளவு நியாயம் வாழ்கிறது நம்முடைய ஊரில்!”

“இருக்கட்டும்! அரவிந்தனை அப்படிச் செய்ததற்கு அந்த ஆளை நான் சும்மா விடமாட்டேன் ஐயா. என்னிடமும் ஆட்கள் இருக்கிறார்கள்” என்று கொதிப்பேறின குரலில் சொன்னான் முருகானந்தம்.

“சே! சே! நாய் கடிக்க வந்ததென்பதற்காகப் பதிலுக்கு நாமும் கடிக்கப் போவதா? நம் முயற்சிகளை நாம் நேரான வழிகளிலேயே செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர்கள் உரையாடல் தேர்தல் ஏற்பாடுகளைப் பற்றி வளர்ந்தது. அரவிந்தன் தோட்டத்துப் புல்தரையில் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தான். மங்களேசுவரி அம்மாள் வந்து அவனுக்கு எதிர்ப்புறம் சிறிது தள்ளி அமர்ந்து கொண்டு “நீங்கள் அப்படிச் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் விவரமாகப் பேசி எப்படியும் உங்களைச் சம்மதிக்கச் செய்து விடலாமென்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறேன்” எனப் பேச்சைத் தொடங்கினாள்.

உடனடியாகப் பதில் ஒன்றும் சொல்லாமல் அந்த அம்மாள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன். மேலும் தொடர்ந்தாள் அந்த அம்மாள்.

“நாங்கள் இரண்டுபேரும் உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவங்களிலும் மூத்தவர்கள், நல்லதற்குத்தான் சொல்கிறோமென்று எங்களை நம்புங்கள். வசந்தாவின் திருமணத்தோடு பூரணியின் திருமணத்தையும், என் செலவில் நன்றாக நடத்திப் பார்த்துவிட வேண்டுமென்பது எனக்கு ஆசை. நீங்கள் புகைப்படம் எடுத்து வரச் சென்றிருந்தபோது நானும் அச்சகத்தின் முதலாளியும் இதுபற்றிப் பேசினோம். நான் கூறிய ஏற்பாடு அவருக்கும் பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டார். நீங்கள் வந்ததும் உங்களை ஒரு வார்த்தை கேட்கிறேன் என்றார். கேட்டபோது அவசரமில்லை என்று சொல்லி மறுத்து விட்டீர்களாம்.”

“மன்னிக்க வேண்டும் அம்மா. இப்போது உங்களிடமும் அதே முடிவைத்தான் நான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. எங்கள் திருமணத்துக்கு இவ்வளவு அவசரம் தேவை இல்லை. நாங்கள் சிறு குழந்தைகள் இல்லை. இரண்டு பேரும் விபரம் தெரிந்தவர்கள். நீங்கள் நினைவுபடுத்துகிற மாதிரி மண வாழ்வுக்கு அவசரமோ, அவசியமோ இருவருக்குமே இப்போது இல்லை.”

“ஏன் இல்லை? உங்களுக்கும் அவளுக்கும் வயது என்ன குறைவாகவா ஆகிறது, அரவிந்தன்? ஊர் உலகத்துக்கு ஒத்தாற் போல் நாமும் நடந்து கொள்ள வேண்டும். நாலு பேர் நாலுவிதமாகப் பேசுவதற்கு இடம் வைத்துக் கொள்ளக்கூடாது. இந்தத் திருமணம் நடப்பதினால் பூரணிக்கோ உங்களுக்கோ ஒரு குறைவும் வந்துவிடாது. வழக்கம் போல் அவள் தன்னுடைய பணிகளைச் செய்து கொண்டிருக்கலாம். நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.”

இதைக் கேட்டு அரவிந்தன் மெல்லச் சிரித்தான். “தயக்கத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றைச் சொல்வோம். சிலவற்றைச் சொல்ல முடியாது. இன்னும் சிலவற்றைச் சொன்னாலும் உங்களுக்கு விளக்கிக் கொள்ள முடியாது.”

“அதெல்லாமில்லை அரவிந்தன். நீங்கள் என்னென்னவோ சம்பந்தமில்லாமல் சொல்லி என்னை ஏமாற்றித் தட்டிக் கழித்துவிடப் பார்க்கிறீர்கள்.”

சிரிப்பு மறைந்து உருக்கமாக எதையோ பேசத் தொடங்கப் போகிற பாவனையில் அரவிந்தனின் முகம் மாறியது. அவன் பெருமூச்சு விட்டான். கிழித்துச் சிதறின கருநீலப் பட்டுத் துணிகள் போல் சிதறல் சிதறலாக மேகத் துணுக்குகள் நீந்தும் வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். இலட்சியத் துடிப்பும் உயர்ந்த தன்மையும் பொருந்தியவற்றை நினைக்கும் போதும், பேசும்போதும், வழக்கமாக அவனுடைய கண்களிலும், முகத்திலும் வருகிற ஒளி அப்போதும் வந்து சாயலிட்டு நின்றது. அவன் மங்களேசுவரி அம்மாளை நோக்கிச் சொல்லலானான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue