Skip to main content

நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

அகரமுதல

நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி!
வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நா
ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு
நிலவார் நிலமிசை மேல். (நாலடியார் பாடல் 22)
பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள்.
சொற்பொருள்:
[வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.]
வாழ்நாட்கு = வாழும் நாள்களுக்கு; அலகு ஆ(க) = அளவிடும் கருவியாக; வயங்கு =(விளங்கும்) ஒளிவிடும்; ஒளி = ஒளிக் கதிர்களை உடைய; மண்டிலம் = சூரியன்; வீழ்நாள் = வீழுங்காலம்; படாது = உண்டாகாமல்; எழுதலால் = (நாள்தோறும்) தோன்றுவதால்; வாழ்நாள் = வாழும்நாள்; உலவாமுன் = முடியும் முன்னர்; ஒப்புரவு = யாவர்க்கும் உதவும் நற்செயல்; ஆற்றுமின் = செய்யுங்கள்!; யாரும் = யாவரும்; நிலமிசைமேல் = நிலத்தின்மேல்; நிலவார் = நிலைக்க மாட்டார். (மிசைமேல் – ஒருபொருட்பன்மொழி)
காலத்தை நாள் மூலம் கணக்கிடுகிறோம். நாளை சூரியன் மூலம் அளவிடுகிறோம். சூரியனின் தோற்றமே நாளின் தோற்றம். நாள்தோறும் சூரியன் தோன்றுவது நிகழ்கிறது. இதனால் நம் வாழ்நாள் கூடுகிறது. ஆனால், ஆயுளில் ஒருநாள் கழிந்து இவ்வாறு கூடுவதால் வாழ்நாள் மிகுதியாகி நிலையாக உயிர் வாழ்ந்தவர் யாருமிலர். எனவே, வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நாம் பிறருக்கு உதவி வாழ வேண்டும்.
சூரியன் நமக்கு ஒளியை மட்டும் வழங்கவில்லை. காலத்தைக் கணக்கிட மட்டும் உதவவில்லை. வாழ்வின் நிலையாமையையும் உணர்த்துகிறது. நாள் என ஒன்றுபோல் காட்டி உயிரை அறுக்கும் வாளாகக் கதிரவன் விளங்குகிறான் (குறள் 334).
‘நாலுவேலி நிலம்’ திரைப்படத்தில் மருதகாசியின் பாடல் ஒன்றில்
தேவைக்கு மேல் பொருளைச் சேர்த்து வைத்துக் காப்பவரே!
ஆவிபோனபின் அதனால் என்ன பலன் சொல்வீரே!
என்னும் வரிகள் வரும். இருக்கும்போது இன்பம் துய்க்க வேண்டும் என்பதுபோல் பாடல் அமைந்தாலும் இருக்கும்போதே அறப்பயன் இன்பத்தைத் துய்க்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் 30.09.2019

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue